Mar 24

கடற்படையின் படகு மோதி விடத்தல்தீவில் மீனன்வ பலி

மன்னார் விடத்தல்தீவு கடற்பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு கடற்படையினரும் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாசன்   கில்மன் என்ற குறித்த  மீனவர் குல்லா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் நேற்று  இரவு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார்.


இதன்போது கடற்படையினரின் படகு மீனவரின் படகுடன் மோதியதில் குறித்த மீனவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடத்தல் தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்  தந்தையான 39 வயதுடைய தாசன்   கில்மன் என்ற மீனவரரே இதன்போது உயிரிழந்துள்ளார். 

கடற்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா கடற்படையினர்  கடலில் படகு ஒன்று மூழ்கி கிடப்பதாகவும் அதனை சென்று பார்வையிடுமாறும் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதன்போது சக மீனவர்கள்  30 பேர் படகுகள் மூலம் குறித்த பகுதிக்குச் சென்று தோடுதல்களை மேற்கொண்டபோது முதலில் படகு மீட்கப்பட்டது. 

தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல்களின்போது குறித்த மீனவர் உயிரிழந்த நிலையில் கடலில் மூழ்கி கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதாக சடலத்தை நேரடியாக பார்வையிட்ட விடத்தல்தீவு  பங்குத்தந்தை அருட்தந்தை  மரியதாசன்  செல்வநாதன் தெரிவித்துள்ளார் . 

இதனையடுத்து விடத்தல்தீவு கடற்படை முகாமை பிரதேச மக்கள் மற்றும்  மன்னார் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் முற்றுகையிட்ட நிலையில்   நள்ளிரவு 12.30  அளவில்   சம்பவத்துடன் தொடர்புடைய  இரண்டு கடற்படையினரை    அடம்பன் பொலிசார் கைது செய்தாக அருட்தந்தை தெரிவித்தார். 

குறித்த நபர் உயிரிழந்தமை தொடரில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கும் விடத்தல்தீவு  பங்குத்தந்தை அருட்தந்தை  மரியதாசன்  செல்வநாதன் பீரிஸ்   சம்பந்தப்பட்ட  கடற்படையினரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தாசன்   கில்மன் என்ற குறித்த மீனவரின்  சடலம் தற்போது மன்னார் - வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.      

எனினும் கடற்படையினரின் செயற்பாடு தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள மக்கள் விடத்தல்தீவு கடற்படை  முகாமை முற்றுகையிடும்  நோக்குடன் காத்திருப்பதாகவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.