// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஐ.எம்.எப் கடன் உதவியும் சர்வதேச சூழ்நிலையும்

வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மேற்குலகில் பொருளாதார காரணிகளின் காரணமாக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்த்துக்கல் என பல நாடுகளில் போராட்டங்கள் தொடர்கின்றன.

இதேநேரம் உலகின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் பொருளாதார காரணிகளை மையமாக வைத்து போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பொலிவியாவிலிருந்து லெபனான் வரை இந்த நிலை காணப்படுகிறது.சீன அதிபர் ஜீ சின்பிங்கிற்கும் ரஷ்ய தலைவர் புட்டினுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பொறுப்புணர்வுடன் கூடிய கலந்துரையாடல் மூலம் ரஷ்ய-யுக்ரேன் மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியும் என புட்டின் கூறியிருப்பதுடன், சீனாவின் ஆலோசனைகளை ஆரம்பகட்ட அடிப்படை அம்சமாகக்கொண்டு மோதல்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என புட்டின் அறிவித்துள்ளார்.

மறுபக்கத்தில் யுக்ரேன் யுத்தத்தில் புட்டினின் செயற்பாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரை கொண்டு சென்ற மேற்குலகம் புட்டினை குற்றவாளியாக பிரகடனம் செய்துள்ளது.புட்டின் ரஷ்யாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையும் தோற்றம் பெற்றுள்ளது.இதேநேரம்,ஜப்பானிய பிரதமர் யுக்ரேனுக்கு விஜயம் செய்திருப்பதுடன், யுக்ரேனுக்கான ஜப்பானிய ஆதரவையும் அறிவித்திருக்கிறார்.

 
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.மேலும் மத்திய கிழக்கில் சீன- ரஷ்ய அணியுடன் இணைந்து செயல்படும் நிலையும் தோற்றம் பெற்றுள்ளது.குறிப்பாக சவுதி அரேபியா ஈரான்  இணக்கப்பாடுகள் அதனையே காண்பிக்கின்றன.எனவே ரஷ்ய அதிபர் புட்டின் ரஷ்யா எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளையும் சர்வதேச தடைகளால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் தொடர்ந்து மூடி மறைத்துக் கொண்டிருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.எனவே சீன தேசத்தின் ஊடாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் முயற்சிக்கின்றாரா அல்லது ரஷ்ய-சீன அணியை பலப்பிக்கும் மூலோபாயங்களை முன்னெடுக்கின்றாரா என்பது தொடர்பாக குழப்பங்களே காணப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இலங்கைக்கு பல தடைகளைத் தாண்டிய நிலையில் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த உதவியுடன் மேலும் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெற்றுக்கொள்ளும் ஏது நிலையும் ஏற்பட்டிருப்பதால் மொத்தம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை தனதாக்கி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் அந்நிய செலாவணி பற்றாக்குறை என்ற நிலை முடிவுக்கு வரும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை 16 முறை ஏமாற்றியிருப்பதாகவும் இம்முறை அவ்வாறு செய்ய முடியாது என்றும் சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றிய ஆகவேண்டுமென ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே பொருளாதார மறுசீரமைப்பை முன்னெடுப்பது தவிர்க்க முடியாதது என்றும் இதற்கு சகல எதிரணியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
 
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெற்றதன் பின்னரான நிலைமைகள் இலங்கையின் எதிரணி தரப்புக்கு சற்று பின்னடைவை வழங்கி இருப்பது போலவே நிலைமைகள் காணப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தக்கூறியும் வரி கொள்கைகளை மீளப்பெறுமாறும் வலியுறுத்தி நடத்திவரப்பட்ட போராட்டங்கள் குறிப்பாக மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட அடையாளப் பொதுவேலை நிறுத்தம் என்பன தற்போது சற்று சுருதி குறைந்த நிலையில் காணப்படுகின்றன.இலங்கை வரலாற்றில் 1980 இல் நடைபெற்ற ஜூலை பொது வேலை நிறுத்த போராட்டம் தோல்வியை சந்தித்திருந்தாலும் அப்போராட்டம் பல்வேறு நிலைகளில் வலிமைமிக்க போராட்டங்களாக பார்க்கப்படுகிறது.அந்தப் போராட்டங்களில் இருந்த அரசியல் பின்புலம், அமைப்பு ரீதியான செயல்பாடுகள் ,ஜனநாயக வழிமுறைகள், போராட்டத்தில் உறுதியாக பின்பற்றப்பட்டமை போன்ற காரணிகளால் 1980 பொது வேலை நிறுத்த போராட்டம் வரலாற்றில் வலிமைமிக்க  போராட்டமாக பார்க்கப்படுகிறது.மேற்படி போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பங்களிப்பு அறவே வழங்கப்படாத நிலை காணப்பட்டது.மேற்படி போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி காட்டி கொடுத்ததாகவே வரலாற்று பதிவு காணப்படுகிறது.

ஆனால், இன்று இலங்கையில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டம் அதன் அரசியல் பின்புலம், அமைப்பு ரீதியான செயல்பாடுகள், ஜனநாயக ரீதியான செயற்பாட்டு வடிவங்கள் எவையும் பின்பற்றப்படாத நிலையே காணப்படுகின்றன.மேலும் 1980 பொது வேலை நிறுத்த போராட்டத்தில் சம்பந்தப்படாத தொழிற்சங்க அமைப்புகளே இன்றைய போராட்டத்தில் களத்தில் நிற்கின்றன.குறிப்பாக துறைமுக தொழிலாளர் ,மின்சார சபை அலுவலர், மருத்துவர்கள், பெற்றோலிய துறையினர் என அநேக பிரிவினர் 1980 பொது வேலைநிறுத்த போராட்டத்தில் சம்பந்தப்படாத பிரிவினராக காணப்படுகின்றனர்.மேலும் இன்றைய போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இப் போராட்டங்களுக்கு பின்னே பிரதான அரசியல் சக்தியாக காணப்படுகிறது.ஏனைய அரசியல் சக்திகளை இங்கே பெரிய அளவில் காண முடியவில்லை.
 
சர்வதேச நாணய நிதிய உதவி கிடைத்த பின்பு சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமில் அரசாங்கத்துக்கு ஆதரவான குரல்கள் மேல் வந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரட்ன  போன்றோர் சம்பிரதாயத்துக்காக எதிர்ப்புகளை காட்டுவது போல் இருந்தாலும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவை வழங்கும் நிலையே காணப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை வலியுறுத்தி நடத்தி வந்த போராட்டங்கள் தாக்கமான நிலையை உருவாக்கியிருந்த நிலையில், நாட்டில் அதிகார மாற்றம் ஏற்பட்டால் அது மக்கள் விடுதலை முன்னணிக்கு சாதகமான நிலை இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்ததால் மக்கள் விடுதலை முன்னணி ஒரு அதிகார மாற்றத்திற்காக காத்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில் திடீரென சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதால் மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்பார்ப்புகள் தலைகீழாக மாறிய நிலை காணப்படுகிறது.

மேலும் நாடு சித்திரை புது வருடத்தை எதிர்நோக்கி இருக்கிறது.அதனைத் தொடர்ந்து வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.எனவே இனிவரும் காலங்களில் இரண்டு மாதங்கள் போராட்ட சூழ்நிலைகளுக்கு உகந்த காலப்பகுதியாக அமையாத நிலை காணப்படுகிறது.போராட்ட சூழ்நிலை ஜூன் மாதத்தின் பின்னரே பலமடையும் நிலை காணப்படுகிறது.மேலும் நாட்டில் அடுத்து நடைபெறப் போகும் தேர்தலாக ஜனாதிபதி தேர்தலாக அமையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. அதற்கான காய் நகர்த்தல்களை மிக நேர்த்தியாக ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார் என்ற கருத்துகளும் காணப்படுகின்றன.

தற்போதுள்ள சூழ்நிலையில் சாதாரண மக்களின் பொருளாதார சுமைகள் குறைக்கப்படுவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இதனை அரசாங்கம் நிச்சயம் மேற்கொண்டே ஆக வேண்டும்.இதன் மூலமே மக்களின் ஆதரவை அரசாங்கம் ஏதோ வகையில் தனது பக்கம் திருப்ப முடியும்.இதனைத் தவிர்த்து அரசாங்கம் செயற்பட முயன்றால் மிக பெரிய மக்கள் எதிர்ப்பு வெளிக்கிளம்ப அதிக நாட்கள் தேவைப்படாது.

தமிழ் அரசியல் சக்திகளுக்கு இடையே காணப்படும் குழப்பநிலைகள், முரண்பாடுகள் முடிவுக்கு வராத நிலை தொடர்கிறது.இத்தகைய சூழ்நிலையில் நீண்ட துயிலின் பின்னர் திடீரென விழித்தெழுகின்ற ஒருவர் புலம்புவதை போல் தமிழரசு கட்சி மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.2018 இல் நடைபெற வேண்டிய மாகாண சபை தேர்தல் பின் போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் அன்றைய நல்லாட்சியில் பங்காளியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் விரல் நீட்டப்பட்டமையும் மறந்துவிட முடியாது.எனவே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தாருங்கள் என சர்வதேச சக்திகள் அழுது புலம்புவதை விட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி எமது புலத்தில் அதற்கான போராட்டங்களை ,அமைப்புகளை மேல்நிலைப்படுத்துவதே இதிலிருந்து மீள்வதற்கான ஒரே ஒரு வழியாகும்.இதனைத் தவிர்த்து தென்னிலங்கை அரசியல் நகர்வுகளை பார்த்துக் கொண்டு இருப்பதை மாத்திரம் நாளாந்த செயற்பாடாக தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் பின்பற்றினால் பின்னடைவுகளின் கைதியாக மாற வேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்