day, 00 month 0000

தொல்லியல் திணைக்களம் எனும் போர்வையில் சிங்கள அரசு: வலுக்கும் கண்டனங்கள்

தொல்லியல் திணைக்களம் எனும் பெயரில் சிறிலங்கா அரசு தமிழரின் பூர்வீக நிலங்களைக் கையகப்படுத்த முயல்வதையும், வழிபாட்டு இடங்களில் அடியார்களையும் நிர்வாகிகளையும் கைதுசெய்து சிறையில் அடைப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என சுவிட்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் இதனை ஒன்றியம்

குறித்த கண்டன அறிக்கையில், “தொல்லியல் திணைக்களம் எனும் பெயரில் சிறிலங்கா அரசு தமிழரின் பூர்வீக நிலங்களைக் கையகப்படுத்த முயல்வதையும், வழிபாட்டு இடங்களில் அடியார்களையும் நிர்வாகிகளையும் கைதுசெய்து சிறையில் அடைப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஈழத்தமிழ் மக்களின் பூர்வீக சமயம் சைவசமயம். சைவசமய பழக்கவழக்கங்களை நாம் காலங்காலமாக பின்பற்றி வாழ்வதோடு தாய்கு நிகராக எம் சமயத்தையும் எம் மண்ணையும் நேசிக்கின்றோம்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஈழமணித் திருநாட்டில் இராவணன் காலம் முதல் இலங்கை முழுவதும் பெரிய, சிறிய சைவ ஆலயங்கள் அமைத்து தமிழ் மக்களின் வாழ்வியல் பண்பாட்டைப் பேணி வாழ்ந்து வருகின்றோம்.கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது எமது வேதவாக்கு.

இந்தியாவில் எவ்வாறு தொன்மையான சைவ ஆலயங்கள் அமைந்திருக்கின்றதோ அவ்வாறே ஈழத்திலும் மிகத்தொன்மை வாய்ந்த ஆலயங்கள் பலவுள்ளன.

இவற்றில் பல எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட போரத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களினால் அழிக்கப்பட்டபோதும் மீள எம்மக்களால் கட்டியெழுப்பப்பட்டு அதன் வரலாறு தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றது.

இவ் ஆலயங்களின் கீர்த்தியை சைவ சமயத்தின் முதல்வர்களாக கருதப்படும் சமய குரவர்கள் நினைத்து வணங்கி ஆலயங்கள் மீது தேவாரம் பாடியுள்ளார்கள்.நாம் இன்றும் இத்தேவாரங்களை பக்திப்பரவசமாக பாடி மகிழ்கின்றோம்.இத்திருக்கோவில்களை இன்றும் உயிருக்கு நிகராகக் காத்து வருகின்றோம்.

இலங்கைத்தீவு பிரித்தானிய அரசிடமிருந்து 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபின் ஆட்சியை தன்வசப்படுத்திய சிங்கள அரசு அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களை ஒடுக்க பல வழிகளிலும் தன் செய்பாட்டை மேற்கொண்டு வருகின்றது.

ஈழத் தமிழ் மக்களின் சமய பண்பாட்டு பாரம்பரிய வாழ்வியல் முறைகளை திரிவுபடுத்தி பல நூல்களை வெளியீடுவதுடன் திட்டமிட்டு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேங்களில் தமிழ் இன சைவ சமய அடையாளங்களை திட்டமிட்டு சிங்கள அரசு அழித்து வருகின்றது.

கட்டம் கட்டமாக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு இனக்கலவரம், மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட எம்களின் அகிம்சைப் போராட்டத்தைத் தொடாந்து மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டம் நடைபெற்றபோதும் நாம் எமது அடையாளங்களைப் பாதுகாத்தே வந்துள்ளோம்.

பல வல்லரசு நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மிகப்பெரிய இனவழிப்பு முள்ளிவாய்காலில் நடைபெற்று 15ஆண்டுகள் நிறைவடைகின்றபோதும் தமிழ் மக்களுக்கான நீதியை இந்நாடுகளால் கூட பெற்றுத்தர முடியவில்லை.

தமிழ் மக்களின் வரலாற்றை மறைத்து கிடைக்கப்பெறும் தொல்லியல் அடையாளங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த அடையாளங்கள் எனும் பிரச்சார உத்தியைக் கையாண்டு காவல்துறையினர் இராணுவத்தின் உதவியுடன் சிங்கள அரசு தொல்லியல் திணைக்களம் எனும் பெயரில் தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து மேற்கொள்ளும் நில அபகரிப்புக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சில வருடங்களுக்கு முன்னர் வெடுக்குநாறி மலையிலிருந்த ஆலய விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டு அப்பிரதேசத்தைக் கைப்பெற்ற முயற்சித்ததைப் போல் குருந்தூர் மலையிலிருந்து சூலமும் பிடுங்கி எறியப்பட்டு அப்பகுதியில் புத்தவிகாரையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கெதிராக சிங்கள அரச நீதிமன்றத்தில் அப்பகுதிமக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்த இனவழிப்பாளார்கள் இவ்வருட சிவராத்திரி தினமன்று வெடுக்குநாறி ஆதிசிவன் திருக்கோவிலுக்கு வழிபாட்டிற்குச் சென்ற குருக்களையும் ஆலய பரிபாலனசபை உறுப்பினாகளையும் அடியார்களையும் தாக்கியதோடு சிவராத்திரி விரத நிகழ்வுகளையும் குழப்பி சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இச் செயற்பாட்டை சுவிட்சர்லாந்து சைவ இந்துத் திருக்கோவில் ஒன்றியத்தினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ் அராஜகச் செயற்பாட்டிற்கு எதிராகவும் கைதுசெய்யப்பட்ட சைவசமயப் பிரதிநிகளின் விடுதலைக்காகவும் குரல்கொடுக்கும் மதத் தலைவர்கள் ஆதீன முதல்வாகளுடன் நாமும் இணைகின்றோம்.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்