// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழர் தேசத்தின் தலைவிதி

பூகோள அரசியலின் முரண்நிலைக்குள் உச்ச அலைக்குள் இலங்கை சிக்கித் தவிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கஇ இந்தியஇ சீன தலையீட்டின் ஆடுகளமாக இந்த சின்னஞ்சிறிய தீவு மாறி வருகிறது. எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கான நீண்ட கியூ வரிசைகள் குறையும் நிலை தென்படத் தொடங்கியுள்ள நிலையில்இ சர்வதேச அரசியல் சிக்கலுக்குள் நாட்டை மீண்டும் சிறைப்படுத்தும் செயற்பாட்டில் கடந்த ஆட்சியாளர்கள் இறுதிவரை செய்து விட்டே சென்றுள்ளனர். இந்தப் பாவச் செயலின் கர்மவினை காரணமாக முன்னைநாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அரசியல் அடைக்கலம் எதுவும் கிடைக்காத நிலையில் அலையும் காட்சியை நாம் கண் முன்னே காண கிடைத்துள்ளது.

தென்னிலங்கையில் ஆளும் வர்க்கத்திற்கும் எதிரணிக்கும் இடையிலான முரண்நிலை புதிய பரிமாணத்துக்கு சென்றுள்ளது.அரகலய என்ற காலி முகத்திடல் போராட்டக்களம் கோட்டபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வெளியேற்றத்துடன் தமது சாதனை படைத்த போராட்ட மூலஸ்தானத்திலிருந்து வெளியேறியுள்ளனர். புதிய தேர்தல் ஒன்றின் மூலம் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என்கின்ற இறுதி எதிர்பார்ப்பை மக்களுக்கு அறிவித்துவிட்டு வெளியேறியுள்ளனர்.ஆனாலும் தென்னிலங்கை அரசியல் களம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளதோடு,அவரால் முன்வைக்கப்பட்டிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கும் ஆதரவு வழங்கும் நிலையே காணப்படுகிறது.இத்தகைய முயற்சிகள் ஊடாகவே இலங்கையை மீள கட்டுயெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை உறுதி பெற்று வருகிறது.பௌத்த பீடங்களும் முதலாளித்துவ ஆளும் குழாமும் இதில் அதிக கரிசனையில் உள்ளனர்.

எனவே எதிர்வரும் காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கும் அதற்கு எதிரான பிரிவினருக்கும் இடையேயான போராட்டங்கள் மேல் வருவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவே காணப்படுகின்றன.இதனுடன் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையை பெறுங்கள் என்ற கோரிக்கையும் வலிமை வெற்று வருகிறது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி,முன்னிலை சோசிலிச கட்சியினர் இவர்கள் அணிகளில் இருக்கும் தொழிற்சங்க பிரிவினர் ஓர் முகமாகவும் ஏனைய தரப்பினர் ஒரு  பிரிவாகவும் நிலையெடுத்து நிற்கும் நிலை தோன்றலாம்.

இங்கே அரசாங்கத்திலிருந்து வெளியேறிய வாசுதேவ நாணயக்கார, உதயகம்மன் பில,விமல் வீரவன்ச ஆகியோர் உள்ளடக்கிய அணியினர் அங்கேயும் போக முடியாமல் இங்கேயும் போக முடியாமல் குழப்ப நிலைக்குள் சிக்குண்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஜி.எஸ்.பி.பிளஸ், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் மனித உரிமை பேரவை நிகழ்ச்சி நிரலை கருத்தில் கொண்டு ஆட்சியை தொடருமாறு எச்சரிக்கை தொனியில் தமது முடிவை தெரிவித்து விட்டு சென்றிருக்கின்றனர்.

தமிழ் தேசத்தை பொருத்தவரையில் நல்லாட்சியில் ஏற்பட்ட கும்பகர்ணன் நித்திரை பயணம் இன்று வரை தொடர்கிறது.குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஒருவித மயக்க நிலையிலேயே பயணிக்கின்றது.தமிழரசு கட்சி மீதான விமர்சனங்கள் உச்சநிலைக்கு சென்றுள்ளது.குறிப்பாக எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தமிழ் தேச அரசியலுக்கு முக்கியத்துவம் கொடாது தென்னிலங்கை எதிரணி தளத்தில் கைதட்டல்களை பெற வேண்டும் என்பதற்காக அதிக பிரயத்தனத்தில் சுமந்திரன் அடம் பிடித்து ஈடுபடுவதாக விமர்சனங்கள் மேல் வந்துள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசத்தில் இயங்குகின்ற ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஏதோ விதத்தில் ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதால் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்குள் புதைந்து போய் இருக்கும் இந்த தலைவர்கள் தமிழ் தேசம் தொடர்பாக எதுவித கரிசனையும் இன்றி மனம் போன போக்கில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.தமிழர் தாயகத்தில் தந்தை செல்வநாயகத்தின் அயராத உழைப்பினால் கட்டுக்குலையாத ஐக்கியம் பாதுகாக்கப்பட்டது.இதன் மூலம் வலிமையான செய்திகள் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வழங்கப்பட்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஜனனமும் இங்கே உருவானது.பின்னைய  காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் தேசத்தின் உறுதியான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.

ஆனால் இன்று ஐக்கியம் என்ற சொல் மருந்துக்கும் கூட எடுபடாத நிலை தாயக அரசியல் அரங்கத்தில் காணப்படுகிறது.இன்றைய புதிய சூழ்நிலையில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது.ஆனால் எமது தரப்பினர் எமக்கான பொதுநிலைப்பாடு என்ன என்பதை ஒரு குரலாக சொல்வதில் துளி அளவு கூட விருப்பமில்லாதவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.நாடாளுமன்றத் தேர்தலும் விரைவில் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடு இல்லை என்பதால் ஐக்கியப்பட்ட செயற்பாடுகளுக்கு இவர்கள் தயாரற்றவர்களாக வலம் வருகின்றனர்.

கடந்த மாதம் 2ஆம் திகதி கொழும்பில்  இலங்கை மன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது.இதனை பெபரல் அமைப்பினரும் தேர்தல் திணைக்களமும் இணைந்து நடத்தியிருந்தது.தேர்தல் ஆணையாளரின் தலைமையின் கீழ் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி உட்பட தென்னிலங்கையில் பிரதான எதிரணி அனைத்தும் இந்த கலந்துரையாடலில் இடம்பெற்றிருந்தது.மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் இதில் பங்கு கொண்டிருந்தன.ஆனால் வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

தமிழர் தாயகத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய எத்தனையோ தேர்தல் முறை தொடர்பான சிக்கல்கள் உள்ளன.ஆனாலும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இதில் சிறிதளவு எனும் நாட்டம் இல்லாத நிலையே காணப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி வெளிப்படையாகவே வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான தனது கொள்கை விளக்க உரையில் பிரகடனம் செய்துள்ளார்.புதிய அரசியலமைப்பு வருகையும் இடம்பெற இருக்கிறது எனவும் அவர் அறிவித்துள்ளார்.எனவே இந்த புதிய சூழ்நிலைக்கு நாம் எந்தவிதமான நிலைப்பாட்டை வலியுறுத்த போகின்றோம் என்பது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் கூட இடம்பெறாத நிலை காணப்படுகிறது.

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி,  முன்னிலை சோசலிச கட்சி,பட்டாளி சம்பிக்க ரணவகே போன்றவர்கள் பேரினவாத நிலைப்பாட்டுடனேயே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.இவர்களின் இந்த நிலைப்பாடுகளை தமிழர் தாயகத்தில் உள்ள அரசியல் தலைமைகள், ஆய்வாளர்கள் ஏதோ விதத்தில்  இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நிலையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.இது எமது தேசத்துக்கு செய்யும் துரோகமாகவே நிச்சயமாக அமையும். தமிழர் தாயகத்துக்கு பிரச்சனைகள் உள்ளன.அதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்ற லிபரல் பிரிவினரை நான் முந்தி நீ முந்தியென விமர்சனம் செய்வதில் காட்டும் அதீத அவசரப்பாடு ரினவாத நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களிடம் காட்டாமல் ஒருவித மெளனத்தை கடைப்பிடிக்க முயல்வது எதனைக் காட்டுகிறது.

எனவே எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நோக்கி பயணத்திற்கு உரிய கலந்துரையாடல்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.அரசியல் கட்சிகளுக்கு இடையே சிவில் அமைப்புகளுக்கு இடையில் வடக்கு கிழக்கு முழுவதும் சமாந்தரமாக இந்த நிகழ்வு உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்