// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ரணிலை தமிழ் தலைமைகள் எவ்வாறு கையாளப்போகிறார்கள்?

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்கம் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெரியளவில் பெற்றுள்ளது.தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுரகுமார திசநாயக்கா விமர்சனங்களை முன்வைத்திருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ கருத்துக்கள் எதனையும் கூற முன்வராத நிலை காணப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வையும் சர்வகட்சி ஆட்சியின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தி இருந்தார். இந்நிகழ்ச்சியின் பின்னர் நடந்த ஊடக சந்திப்பில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது ஆதரவை ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கின்றனர்.


மறுபக்கத்தில் ரணில் விக்ரமசிங்கவின் இத்தகைய உரை முடிவடைந்த கையோடு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன்னே நிறுத்தப்பட்டு 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இத்தகைய நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இனவாதத்துக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஆசிரியர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடிவரும் ஜோசப் ஸ்டாலினை கைது செய்தமை மிகப்பெரிய தவறென்றே சிவில் சமூகத்தினர் கருதுகின்றனர்.

இங்கே எழுந்துள்ள சோக நிலை என்னவென்றால் இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது நடவடிக்கை ஒரு புறம் மறுபக்கத்தில் முதல் நாள் ஜோசப் ஸ்டாலினுடன் இணைந்து ஊடக சந்திப்பில் ஈடுபட்டிருந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவை மனம் போன போக்கில் ஊடகங்களில் விமர்சித்து பேட்டி வழங்கியவர்கள் நிறைவேற்று அதிகாரத்துடன் விளங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு கை கொடுத்து தமது ஆதரவினை நேரடியாக தெரிவித்திருந்தனர்.பின்னர் ஊடக சந்திப்புகளில் தமது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கப் போவதாகவும் செவ்வியளித்திருந்தனர். போராட்டக்காரர்களை அறவே மறந்த நிலையில் இவை யாவும் நடைபெற்ற வண்ணம் இருந்தன.

கோட்டபாய ராஜபக்ச பதவியில் இருந்த போது ஜோசப் ஸ்டாலினை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்திருந்தமை தொடர்பாக பாராளுமன்றத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்த ரணில் விக்ரமசிங்க, இந்த விடயம் சர்வதேச அளவில் தாக்கத்தை செலுத்தும் என்றும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை வரை இதன் தாக்கம் ஏற்படுமெனவும் இதனால் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் மீதும் கை வைக்கும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

மேலும் ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடியையும் இந்திய அரசாங்கத்தையும் தனது உரையின் போது வெகுவாக பாராட்டி இருந்தார்.இந்தியா இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு உதவி செய்திருந்ததையும் இந்தியாவுடனான திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாம் இன்று எதிர்நோக்கும் பெற்றோலிய எரிபொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்காது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார் .ஆனால் சர்ச்சைக்குரிய சீன கப்பல் வருகை தொடர்பான பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

இது போதாது என்று கடந்த 4ம் திகதி சீன தூதுவருடனான சந்திப்பில் சீனாவின் ஒரு தேச கோட்பாட்டை ஆதரித்து கருத்து தெரிவித்திருப்பதுடன், சீன நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்துக்கு மாறானது எனவும் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.இது அமெரிக்காவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் நிலையாகும்.ஏற்கனவே தாய்வான் விவகாரம் தொடர்பாக ஒரு யுத்தத்துக்கான ஆயத்த நிலையில் சீனாவும் போர் பயிற்சிகளை தாய்வானுக்கு  சமீபமாக நடத்தி வருகிறது.

அது மாத்திரமில்லாமல் தாய்வான் வான்பரப்பில் அத்துமீறி சீன விமானங்கள் பயணிப்பதும் தாய்வான் கடற்பகுதியில் 11 ஏவுகணைகளையும் செலுத்தியும் உள்ளது.மறுபக்கத்தில் அமெரிக்கா மூன்று போர்க்கப்பல்களை தென் சீன கடல் பக்கமாக நிலையெடுத்து நிற்க வைத்துள்ளது.இத்தகைய மோசமான சிக்கலுக்குள் இலங்கை பயணிக்க வேண்டுமா ?
என்னதான் ரணில் விக்ரமசிங்க நாட்டை முன்னேற்றுவது தொடர்பாக பல விடயங்களை குறிப்பிட்டிருந்தாலும் அவருக்கான ஆதரவு தளம் மிகப் பலவீன நிலையிலேயே காணப்படுகிறது.அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து  ஆதரவை வழங்கினாலும் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ளது.

எனவே பொதுஜன பெரமுனையின் விருப்பத்திற்கு எதிராக ஜனாதிபதி அவர்கள் செயற்பட முடியாத நிலையும் இங்கே காணப்படுகிறது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்கு அரசியல் உறுதிப்பாடு, பொருளாதார இலக்கை நோக்கிய திட்டங்கள் என்ன பல விடயங்கள் அவசியமாகின்றது.53 அரசு சார்பு நிறுவனங்களை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்க அனுமதிக்க முடியாத நிலையில் அவற்றை தனியார் மயப்படுத்துவதற்கு கொண்டு செல்வதில் ஏற்படப்போகும் சிக்கல்கள் என பல சவால்களை புதிய அரசாங்கம் எதிர்நோக்கி இருக்கிறது.

மறுபக்கத்தில் வாழ்க்கைச் செலவு மிக உச்ச நிலைக்கு சென்றுள்ளது.நான்கு பேர் கொண்ட குடும்பத்தை நடத்த மேலும் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியிருப்பதுடன், முப்படைகளின் தயவுடன் ஆட்சியை தொடர முயற்சித்து வருகிறது.இதேநேரம் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை வேட்டையாடும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது.இத்தகைய செயற்பாடுகளை சர்வதேச சமூகம் தனது கண்டனங்களை தொடர்ந்தும் பதிவு செய்து வருகின்றது.மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசிய பிரதிநிதி மீனாட்சி கங்குலி வன்மையாக கண்டித்திருப்பதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்பாக இலங்கையின் சகல எதிரணியினரும் தமது கரிசனையை அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையின் பின்பு அனைத்து எதிரணியினரும் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணையும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.சிம்மாசன உரையின் பின்னர் நடந்த தேநீர் விருந்துபசாரத்தில் வரிசையாக நின்று ஜனாதிபதியை கைகுலுக்கி பாராட்டியிருந்ததையும் நேரடியாக காணக்கூடியதாக இருந்தது.இத்தகைய சூழ்நிலையில் வருகின்ற ஒன்பதாம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தப்போவதாக பீல்ட்  மார்சல் சரத் பொன்சேகா  மாத்திரமே அறைகூவல் விடுத்து வருகின்றார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர் மீதான அக்கறையை ரணில் விக்ரமசிங்கவில் இருந்து ஜீ.எல்.பீரிஸ் வரையான சகலரும் வெளிப்படுத்தியே வந்தனர். மேற்படி போராட்ட களத்தை தத்தெடுக்க பலர் முயன்றனர்.இன்று பாராளுமன்ற அரசியலை முன்னெடுக்கும் சகல தரப்பினரும் மௌனம் காத்து வருகின்றனர்.என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் காலி முகத்திடல் போராட்டக்களம்  இனவாதத்தை மிகப் பலமான நிலையில் எதிர்த்து நின்றது.தமிழ் மக்கள் தொடர்பான பல சோக நிகழ்வுகளை அந்த போராட்டக் களத்தில் வெளிப்படுத்த தயாராக இருந்தனர்.இவை மறுக்கப்பட முடியாத உண்மை நிலையாகும்.காலி முகத்திடல் போராட்ட நிலை தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா குறிப்பிடுகையில் போராட்டக்காரர்கள் சிறையில் அரசியல்வாதிகள் அமைச்சரவையில் என தனது ஆதங்கத்தை  கட்டுரை வடிவில் வெளிப்படுத்தி இருந்தார்.

நல்லாட்சியில் அதில் பங்கு கொண்ட தமிழ் தலைவர்களுக்கு சகல வரப்பிரசாதங்களும் நன்றாகவே கிடைத்திருந்தன.ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்காத நிலையே தொடர்ந்தது.இன்று நல்லாட்சியின் சிற்பி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.அவரது சிம்மாசன உரையில் தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு,வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக நம்பிக்கை தரும் விதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனவே தமிழ் தலைமைகள் இந்த  நிலைமைகளை சாதகமாக்கிக் கொள்ள ஒன்றுபட்டு ஒரு குரலாக செயல்படும் நிலையில் நிற்க வேண்டும். புதிய அரசாங்கத்தின் நல்லெண்ண சமிக்ஞையை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களை மீண்டும் கையளித்தல்,காணாமல் போன மக்களுக்கான நீதியை வெளிப்படுத்தல் போன்றவற்றில் வெளிப்படுத்த முடியும். புலம்பெயர் தமிழர்களின் தயவை அரசாங்கம் இந்த காலகட்டத்தில் பெரிதும் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.எனவே இத்தகைய சூழ்நிலையில் எமக்கான இலக்கை அடைவதற்கான வியூகங்களை, மூலோபாயங்களை நோக்கிய நகர்வில் நாம் கவனத்தை குவிக்க வேண்டும்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்