day, 00 month 0000

ஆழிப் பேரலை அழிந்த ‘ஆச்சே’ தேசத்தின் சுதந்திர கனவு !

பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி , ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது. விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் அச்சே மக்களின் போராட்டம் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது.
 
ஆச்சே தேசத்தின் விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் மிகத் தீவிரம் அடைந்திருந்தது. ஆயினும் 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் சமாதானத்தை நோக்கி சிந்திக்க வைத்தது.
 
அச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன.
 
கொடிய போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்த வழிகோலியது என்பது உண்மையே.
 
சுதந்திர ஆச்சே இயக்கம் ;
 
1976 மற்றும் 2005 க்கு இடையில் சுதந்திர ஆச்சே இயக்கம் -Free Aceh Movement - அல்லது “GAM” - Gerakan Aceh Merdeka ஆச்சே மாகாணத்தை சுதந்திரமாக மாற்றும் குறிக்கோளுடன் போராடியது. 2003இல் இந்தோனேசியாவின் ஒரு பாரிய இராணுவ தாக்குதல் நடவடிக்கையும், பின்னர் 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்தியதாக அறிவித்தது. அதன்பின் ஹெல்சிங்கி அமைதி உடன்படிக்கையைக் கொண்டு வந்ததன் மூலம் ஆயுத போராட்டம் முழுமையாக முடிவுற்றது.
 
ஆச்சே மாநிலம் இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளுக்கு இடையே கலாச்சார, மத வேறுபாடு உள்ளது. பெரும்பாலான இந்தோனேசியாவில் நடைமுறையில் உள்ள இஸ்லாத்தின் மிகவும் பழமைவாத வடிவமானது ஆச்சேவிலும் பரவலாக நடைமுறையில் உள்ளது. 
 
முன்னால் அதிபர் சுஹார்டோவின் 1965-1998 ஆட்சியில் பரந்த தேசியவாத கொள்கைகள் குறிப்பாக ஆச்சேவில் பிரபலமடையவில்லை. அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட 'இந்தோனேசிய கலாச்சாரத்தை' ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கையால் பலர் வெறுப்படைந்தனர்.
 
ஜகார்த்தாவில் உள்ள தலைவர்கள் ஆச்சேவின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அத்துடன் ஆச்சேவின் உள்ளூர் தேவைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து சிறிதளவு அல்லது அனுதாபம் கூட காட்டவில்லை என்ற பரவலான உணர்வு இந்த மாகாணத்தில் உள்ளது.
 
ஆதிக்க தேசிய மையவாதம் :
 
சுஹார்டோ அரசாங்கத்தின் ஆதிக்க தேசிய மையவாதப் போக்குகளை எதிர்த்து, 4 டிசம்பர் 1976 இல் சுதந்திர ஆச்சே இயக்கத்தை உருவாக்கி, சுதந்திரத்தை அறிவிக்க வழிவகுத்தது. "நவ-காலனித்துவ" அரசாங்கத்திடமிருந்து மதம் மற்றும் கலாச்சாரம் ஆச்சேவிற்குள் அதிகரித்து வரும் ஜாவானிய குடியேற்றங்களின் முக்கிய அச்சுறுத்தல்களாகின.
 
 ஆச்சேவின் கணிசமான இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் நியாயமற்ற விநியோகம் சர்ச்சைக்குரிய மற்றொரு விடயமாக இருந்தது.
1979 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தோனேசிய இராணுவ ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஆச்சே இயக்கத்தை நசுக்கத் தொடங்கியது. அதன் பல தலைவர்கள் நாடுகடத்தப்பட்டனர், பல நூறு பேர் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சுதந்திர ஆச்சே இயக்கத்தை பின்பற்றுபவர்கள் சிதறடிக்கப்பட்டு நிலத்தடி சிறைக்கு தள்ளப்பட்டனர்.
 
லிபிய கடாபியின் ஆதரவு :
 
1985 இல், ஆச்சே இயக்கத்திற்கு லிபிய ஆதரவு கிடைக்கப் பெற்றது. ஏகாதிபத்தியம், இனவாதம், சியோனிசம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான தேசியவாத போராட்டங்களை ஆதரிக்கும் கேணல் கடாபியின் உதவிகளை இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். லிபியா பின்னர் ஆச்சே இயக்கத்துக்கு தொடர்ந்து நிதியளித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
 ஆயினும் ஆச்சே இயக்கம்ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கும், மிகவும் தேவையான இராணுவப் பயிற்சியைப் பெறக்கூடிய ஒரு சரணாலயமாக லிபியா விளங்கியது.
 
1986 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் லிபியாவால் பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை
சுமார் 1,000 முதல் 2,000 பேர் இருந்ததாகக் கூறினர். அதே சமயம் இந்தோனேசிய இராணுவத்தின் அறிக்கையில் படி 600 முதல் 800 வரை இருப்பதாகக் கூறினர்.
1989 மற்றும் 1998 க்கு இடைப்பட்ட காலகட்டம் இந்தோனேசிய இராணுவத்தின் கொடூரமான நடவடிக்கை சகாப்தம் என அறியப்பட்டது.
 
ஏனெனில் இந்தோனேசிய இராணுவம் அதன் கிளர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட்டது. இந்த நடவடிக்கையால் ஒரு கொரில்லாப் படையான ஆச்சே இயக்கத்தை அழிப்பதில் தந்திரோபாயமாக வெற்றி பெற்றாலும், 1998 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி ஹபிபியின் உத்தரவின்படி இந்தோனேசிய இராணுவம் ஆச்சேவிலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டது. இதன் பின்னர் ஆச்சே இயக்கம் தன்னை மீண்டும் நிலைநிறுத்த உதவியது. ஆயினும் முக்கியமான ஆச்சே இயக்க தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
 
சுஹார்டோவின் வீழ்ச்சி
1999 ஆம் ஆண்டில், ஜாவாவில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சுஹார்டோவின் வீழ்ச்சியால் ஒரு பலமற்ற மத்திய அரசாங்கம் சுதந்திர ஆச்சே இயக்கத்திற்கு ஒரு நன்மையை அளித்தது எனலாம். 1999 இல் துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், மோசமான பாதுகாப்பு நிலைமையால் மேலும் வீரர்களை மீண்டும் களத்தில் இறக்க வழிவகுத்தது. ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரியின் பதவிக் காலத்தில் 2001-2004துருப்புக்களின் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்ததாக நம்பப்படுகிறது.
 
அச்சேவில் இந்தோனேசிய தாக்குதல் மே 19, 2003 இல் தொடங்கப்பட்டது, கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்தது. 1975 ஆம் ஆண்டு கிழக்கு திமோர் படையெடுப்பிற்குப் பிறகு இந்தோனேசிய இராணுவத்தின் மிகப்பெரிய தாக்குதல் இதுவும் ஒன்றாகும். இது ஆச்சே இயக்கத்தை கடுமையாக முடக்கியது. ஆயினும் ஆச்சே முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் 70 சதவீதத்தை ஆச்சே இயக்கம் கட்டுப்படுத்த முடிந்தது.
 
1999 ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் ஆச்சே இயக்கத்துக்கும் இடையிலான முதல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த செயல்முறையானது மனிதாபிமான உரையாடல் மையம் என்ற ஒரு தனியார் இராஜதந்திர அமைப்பால் தொடங்கப்பட்டது, 
 
இது 2003 வரை இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுக்களை நடாத்த எளிதாக்கியது.
2001 மற்றும் 2002 இல் நடந்த இந்தோனேசிய பாதுகாப்பு படையின் அடக்குமுறைகளால் பல ஆயிரம் பொதுமக்கள் இறந்தனர். இம்மோதல்களால் 15,000 பேர் வரை கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசிய ஆட்சியின் கீழ் சிறப்பு சுயாட்சியை ஏற்றுக்கொள்வதற்கு ஆச்சே இயக்கத்துக்கு இறுதி எச்சரிக்கையையும் அக்காலத்தில் விடுக்கப்பட்டது.
 
ஆச்சேயில் கொடூர இராணுவச் சட்டம்:
 
மே 18, 2003 அன்று நள்ளிரவுக்குப் பிறகு, ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரி, 12வது இந்தோனேசிய இராணுவத் தலைவரான ஜெனரல் எண்ட்ரியார்டோனோ சுடர்டோவுக்கு பிரிவினைவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி வழங்கினார். ஜெனரல் சுதார்டோ ஆச்சேயில் இராணுவச் சட்டத்தை விதித்தார்.
ஜூன் 2003 இல்,ஆச்சேவில் உள்ள அனைத்து மக்களையும் வேறுபடுத்துவதற்காக ஒரு புதிய அடையாள அட்டையை அறிவித்தது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்களுக்கு நடவடிக்கைகளை நிறுத்தவும், அப்பகுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
 
இந்தோனேசிய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன. போரின் போது 2,000 பேர் கொல்லப்பட்டதாக முதலில் மதிப்பிடப்பட்டது. ஆனால் சர்வதேச மனித உரிமை குழுக்கள் மற்றும் அரச சார்பற்ற மனித உரிமைகள் ஆணையம் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் பல்லாயிரம் என்று கூறுனர்.
 
இந்தோனேசிய இராணுவ படையெடுப்பு :
நவம்பர் 2003 இல் இராணுவச் சட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்தோனேசிய இராணுவம் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் போது பரவலான மனித உரிமை மீறல்களைச் செய்தது. இராணுவச் சட்டத்தின் முதல் ஏழு மாதங்களில் 100,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் நடந்ததாக அறிவித்தனர்.
 
இந்த இராணுவ நடவடிக்கையின் போது பரவலான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்ததாக மலேசியாவில் உள்ள ஆச்சே அகதிகள் தெரிவித்தனர். இந்தோனேசிய இராணுவத்தின் உறுப்பினர்கள் கடினமான விசாரணைகளும் , கொடூரமான சித்ரவதைகளையும் மேற்கொண்டதாக கருதப்படுகிறது.
 
இதன்பின் இநதோனேசிய அரசாங்கம் பாரிய தாக்குதலைத் தொடங்கி ஆச்சே மாகாணத்தில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியது. இந்த காலகட்டத்தில், ஆச்சே இயக்கம் கடுமையாக முடக்கப்பட்டது, அதன் தளபதி அப்துல்லா சியாஃபி அரசாங்கத்தால் பதுங்கியிருந்து கொல்லப்பட்டார், அதே நேரத்தில் டெங்கு ஜமைக்கா மற்றும் இஷாக் டாட் போன்ற பல்வேறு பிராந்திய தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
 
டோக்கியோ அமைதி பேச்சு :
 
இந்தோனேசிய அரசாங்கத்தால் ஆச்சே இயக்கம் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும், இரண்டு வாரங்களுக்குள் ஆச்சேவுக்கு சிறப்பு சுயாட்சியை ஏற்கவும் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது.
 
ஸ்வீடனை தளமாகக் கொண்ட ஆச்சே இயக்கத்தின் ஆச்சே இயக்க தலைவர்கள் இறுதி எச்சரிக்கையை ஏற்க மறுத்தனர். ஆனால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத மோதலைத் தவிர்க்கவும், டோக்கியோவில் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும் இரு தரப்பையும் வலியுறுத்தின.
 
 மே 16, 2003 அன்று, அரசாங்கம் தன்னாட்சி வழங்குவதே ஆச்சே இயக்கத்துக்கு அளிக்கும் இறுதி சலுகை என்றும், இறுதி எச்சரிக்கையை நிராகரிப்பது இயக்கத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியது. ஆச்சே இயக்க தலைவர்கள் மற்றும் பேச்சுவார்த்தையாளர்கள் இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்தனர்.
 
சுனாமி 2004 பேரழிவு :
 
ஆச்சே இயக்க அறிக்கைகளின் மூலம், 2003-2005 அரசாங்கத் தாக்குதலின் போது அதன் இயக்க வலிமையில் 50% இழந்தது என ஒப்புக்கொண்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஆச்சே மாகாணத்தை தாக்கியபோதும் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
டிசம்பர் 2004 இல் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்குப் பிறகு, ஆச்சே இயக்கம் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தது, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் மோதலைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
 
சுனாமிக்குப் பிறகு, இந்தோனேசிய அரசாங்கம் ஆச்சே பகுதியை சர்வதேச நிவாரண முயற்சிகளுக்குத் திறந்தது. சுனாமியின் பின்னர் இவ் மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. முந்தைய சமாதான முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தன, ஆனால் சுனாமியின் பின் இரு தரப்பும் மோதலில் இராணுவ ரீதியாக வெற்றிபெற இயலாமை மற்றும், குறிப்பாக, இந்தோனேசியாவில் அமைதியைப் பாதுகாக்க ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் விருப்பம் உட்பட பல காரணங்களால், ஒரு சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டது. இதன்மூலம் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தின் விளைவுடன் ஆச்சேயில் 30 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.
 
பின்லாந்து சமாதானப் பேச்சுவார்த்தை :
 
29 வருட போருக்குப் பிறகு 2005. சுஹார்டோவிற்குப் பிந்தைய இந்தோனேசியா மற்றும் தாராளவாத-ஜனநாயக சீர்திருத்த காலம் ஆகும். அத்துடன் இந்தோனேசிய இராணுவத்தில் பதவி மாற்றங்கள் சமாதானப் பேச்சுக்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க உதவியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மற்றும் துணைத் தலைவர் ஜூசுஃப் கல்லா ஆகியோரின் அமைதி தீர்வுக்கான பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கவை.
 
அதே நேரத்தில், ஆச்சே இயக்க தலைமை தனக்கு கிடைக்கக்கூடிய விருப்பங்களை மறுபரிசீலனை செய்தது, மேலும் இந்தோனேசிய இராணுவம் கிளர்ச்சி இயக்கத்தை கணிசமான அழுத்தத்திற்கு உட்படுத்தியது, இது ஆச்சே இயக்கம் முழு சுதந்திரம் இல்லாத முடிவை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியது.
 
முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஹ்திசாரி தலைமையில், நெருக்கடி மேலாண்மை முன்முயற்சியால் சமாதானப் பேச்சுக்கள் எளிதாக்கப்பட்டன. இதன் விளைவாக அமைதி ஒப்பந்தம் 15 ஆகஸ்ட் 2005 அன்று கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்தத்தின் கீழ், இந்தோனேசியா குடியரசின் கீழ் ஆச்சே சிறப்பு சுயாட்சியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
 
ஹெல்சின்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்:
 
ஹெல்சின்கி அமைதி புரிந்துணர்வு ஒப்பந்த முடிவுகளால் மோதலுக்கு அமைதியான தீர்வு கிடைத்ததாக அறிவித்தனர். இதன்படி ஆச்சேவுக்கு சிறப்பு சுயாட்சி வழங்கப்பட்டது. ஆச்சே இயக்கத்தின் நிராயுதபாணியாக்கமும், ஆச்சே இயக்கத்தின் சுதந்திரக் கோரிக்கையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அத்துடன் அவசியமற்ற இந்தோனேசிய துருப்புக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் அமைதிக்கான ஆச்சே கண்காணிப்பு பணியகத்தால் பிராந்திய தேர்தல்களும் நடாத்தப்பட்டது.
 
பல ஆண்டுகளாக விடுதலையை மூச்சாக கொண்டு போராடி ஆச்சே தேசம் , கொடிய போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்த வழிகோலியது என்பது உண்மையே.
 
ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை ஏற்றுக் கொண்ட அச்சே தேச வரலாறு, விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது எனலாம்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்