// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நரகத்தின் வாசலாகும் பாக்கு நீரிணை

கடலவளச் செழிப்புமிக்க பகுதியாக விளங்கிய பாக்கு நீரிணைப்பகுதி இன்று வளங்களைச் சூறையாடிச் செல்லுகின்ற ஓர் பகுதியாகவும் போதைவஸ்துக்களை கடத்தும் ஓர் பகுதியாகி நரகத்தின் வாசலாக மாறியிருக்கிறது.

இழுவை மடிகளுடன் அத்துமீறி நுழைந்து பெறுமதிமிக்க இறால்,நண்டுகளை வேட்டையாடிச்  சென்று கொண்டிருந்த இந்திய இழுவைப்படகு மீனவர்கள், (தொப்புள் கொடி உறவுகள்) இன்று கஞ்சா,  கொக்கையன் போன்ற போதைப்பொருள் பொதிகளுடன் நுழைந்து வடபகுதியினை போதைப் பொருட்களின் மையமாக ஆக்கி பெரும் மானிட அனர்த்தத்திற்கு அடித்தளமிட்டிருக்கின்றனர்.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக வடபகுதி மக்கள் மேலும் மோசமான  வாழ்வாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல படகுகள் மூலம் கடத்தப்பட்டு வருகின்ற போதைவஸ்து கடத்தல் செயற்பாடுகள் காரணமாக பெரும் பீதியில் உறைந்து போயிருக்கின்றனர்.

ஒருபக்கம் தெற்கு சிங்கள தரப்பினரால் முற்று முழுவதுமாக இராணுவ மயப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு, பெளத்தமத விஸ்தரிப்பு சிங்கள குடியேற்றம் என பல நெருக்குவாரங்களுடன் அரசியல் தீர்வு எவையுமின்றி தள்ளாடி வரும் இந்த இக்கட்டான வேளையில், மறுபுறமாக தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்தகைய வெறுக்கத்தக்க போதைவஸ்து கடத்தல் செயற்பாடுகளினால் மேலும் மிக கடுமையாக  பாதிப்புற்று நொந்து போய்க் கொண்டிருக்கிறது ஈழத்தமிழ் சமூகம்.  இவ்வாறு வடக்கே இந்தியாவும் , தெற்கே சிறிலங்காவும் மேற்கொண்டு வருகின்ற விரும்பத்தகாத செயற்பாடுகளானது, அன்று “வடக்கே தமிழர்களும் தெற்கே இந்து சமுத்திரமும் சூழ்ந்து அழுத்த, நான் நிம்மதியாக  எவ்வாறு தூங்குவது ” என கெமுனு தன் தாயிடம்  கேட்ட வரலாற்றையே நினைவுபடுத்துகின்றன.

இவ் ஆண்டில் 221 தமிழக மீனவர்கள கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  205 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  இவை மீட்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் இந்திய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதேவேளை பலகோடி (இந்திய பெறுமதி 360கோடி ரூபா ) மதிப்புள்ள கொக்கையின் போதைப்பொருளை தமிழக கரையோரத்தில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.அத்தோடு கூடவே தி.மு.க  நகராட்சி கவுன்சிலர்கள் இருவரும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகின்றது.மட்டுமில்லாது அடுத்த நாள் 220 கிலோ கஞ்சா தமிழக சுங்கத்துறையினரால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.பிடிபடும் கஞ்சா கடத்தல் கும்பல்களையும்,  கச்சதீவை மீட்பதிலும் தமிழ்நாட்டு முதல்வர் காட்டும் தீவிரமும்  ஆர்வமும் மீனவர் விவகாரத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

மீனவர் அத்துமீறலை நிறுத்தக்கோரி தமிழக முதல்வருக்கு வடபகுதி மீனவர் அமைப்பினால் எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை.தொடர்ந்து தமிழக மீனவர்கள் அத்து மீறி நுழைந்து வளங்களை கொள்ளையடிப்பதும் கொள்ளையர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதும் வாடிக்கையான நிகழ்வுகளாயிற்று.தமிழக அரசு இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மத்திய அரசினூடாக விடுவிப்பதிலேயே அதிக நாட்டம் காட்டி வருகின்றது.இன்று தமிழக மீனவர்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் எல்லை மீறிச்சென்று  இப்போது போதைவஸ்து கடத்தல் வியாபாரம் வரையிலும்  சென்றிருக்கிறது.

வடக்கு மாகாணம் போதைப்பொருள் வியாபாரத்தின் மையமாக மாறியுள்ளதாக வடக்கிற்கு வந்துபோன சிங்கள அமைச்சர்கள் கூறுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.41 ஆயிரம் கோடி ரூபாவை பாதூகாப்பு நிதியாக ஒதுக்கி பெருமளவு பட்டாலியன்களை வடக்கில் குவித்துவிட்டு சிங்கள அமைச்சரானவர், வெட்கம் ஏதுமின்றி வடக்கு போதைவஸ்து கடத்தலின் மையம் எனப் பொறுப்பில்லாமல்  கூறியுள்ளார்.படையினரிடம் கேட்கவேண்டிய கேள்வி இது.

வடபகுதி கடலில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்  பெரும்பாலும்  தினக் கூலிகளே, தவிர படகு உரிமையாளர்கள் அல்லர் என நம்பப்படுகிறது.பெரும் முதலாளிகளே படகு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதை யாவரும் அறிவர்.அரசியல் செல்வாக்கினை பின்புலமாக கொண்ட இவர்களின் செல்வாக்கினாலேயே  கைது செய்யப்படும் மீனவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட்டு விடுகின்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.இந்த முதலாளிகள் வடபுல கடலில் பெருவாரியான கடலகப் பொருட்களை சுரண்டி பல மில்லியன் ரூபாய்களை  சம்பாதித்து வருகின்றனர்.கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இழுவை மடிகள் மூலம் பிடிபடுகின்ற கடல் அட்டைகளைக் கூட  தமிழகத்தில் மறைமுகமாக பதனிட்டு  கூடவே போதைப் பொருட்களையும் கள்ளமாக வடபகுதிக்குள் கடத்தி வருகின்றனர்.கடத்தல்களும் அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகளும் நடைபெறாத நாட்களே கிடையாது என்ற அளவுக்கு நிலைமை இன்று மோசமடைந்துள்ளன. 

கடலட்டைப் பண்ணையில் சீனப்பூச்சாண்டி

கடல்வளச் சூறையாடலும் போதைவஸ்து கடத்தலும் ஒருபுறமாக வடபகுதியினை மிரட்ட மறுபுறமாக கடலட்டை பண்ணை விவகாரம் இன்னொரு புறமாக பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தி மீனவர்களிடையே அமைதியின்மையை தோற்றுவித்திருக்கிறது. பண்ணை ஒதுக்கீடுகளில் உள்ள முகாமைத்துவ குறைபாடுகள் ,சில இடங்களில் அப்பகுதி மீனவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை, பிழைப்பூதிய மீன்பிடியில் ஈடுபடுவோர்கள் (வீசு வலை,இறால்மடி, அடிவலை இறால்கூடு)  எதிர்நோக்கும் பாதிப்பினை கவனத்திற் கொள்ளாமை போன்ற சில  காரணிகளால் அட்டைப் பண்ணை தொடர்பான நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுகின்றன.எவ்வாறாயினும் இவை தீர்த்து வைக்கக்கூடிய உள்ளூர் விவகாரமாகும்.இதில் சீனாவை இழுத்து பூச்சாண்டி காட்டி சீனப் பிரசன்னம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தமது கவலைகளை வெளியிடுவோர் சொந்த ஈழத் தமிழ் உறவுகள் இந்திய மீனவர்களின் நாசகார செயற்பாடுகள் காரணமாக தமது வாழ்வாதாரத்தையும் நலவாழ்வுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை.சீனாவை விரட்டுவோர் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு செய்த,செய்து வருகின்ற செயற்பாடுகளை மறந்து போனமை நகைப்புக்குரியது.

வடக்கு மாகாணசபை பல வருடங்களாக அவசர சிகிச்சைப் பிரிவு  அறையில் உறைய வைக்கப்பட்டுள்ளது.கடல்சார் அதிகாரமும் மாகாண சபைக்கு இல்லை.அது மத்திய அரசின் கைகளில் சிக்குண்டு தடுமாறி வருகிறது.வடக்கு ஆளுநருக்கு மீனவர் விவகாரத்தில் தலையிட அல்லது அக்கறை காட்ட நேரமில்லை.ஆளுநர் ஒருவர் இருந்தும் அவரால் எந்தப்பயனும் மீனவர்களுக்கு கிடையாது.யாழில் இயங்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கும் வீசா வியாபாரத்தை தவிர   மீனவர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதனிடையே பேச்சுவார்த்தை மூலமான தீர்வு வெறும் மாயக் காற்றாக மாறிவரும் கனவு என்றும், தமிழர் தாயகம் தன் இருப்பையும் சுய கெளரவத்தையும் இழந்து வருவதாகவும் சர்வதேசம் இதனை அனுமதிக்ககூடாது எனவும் அழுது புலம்பியிருக்கிறார் சம்பந்தன் ஐயா அவர்கள்.இந்த சர்வதேசம்தானே இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் தமிழர்களை கொன்றுகுவிக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதனிடமிருந்து நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.சர்வதேசம் ,ஐ.நா அமைப்புக்கள் எல்லாம் மக்கள் எண்ணுவது போல்  அமைதியான நீரோடை அல்ல.அவை ஆபத்தான முதலைகள் நிறைந்த  புதைகுழி என்பதை நினைவிற் கொள்வது நல்லது.

ஈழத் தமிழர் நலவாழ்வில் இந்திய மத்திய மாநில அரசுகளின் எதிர்மறையான செயற்பாடுகள்

கடந்த மூன்று தசாப்தங்களில் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகளின் அதிகார மையங்கள் ஈழத் தமிழர்களின் நலவாழ்வில் எதிர்மறையான செயற்பாடுகளையே மேற்கோண்டு வந்துள்ளன. இதனால் ஈழத்தமிழர்கள் நிலமிழந்து ,தொழில் இழந்து அகதிகளாக கடல்கடந்து ஓடுகின்ற இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்திய மத்திய அரசினது அமைதிப்படை வருகை (1987 IPKF)_ இதனால் ஈழத்தமிழர்கள் அனுபவித்த துயரங்கள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை.அது போதாதென்று 2009 இல் இனவழிப்பு போருக்கு சிங்கள தேசத்திற்கு பலவழிகளில் உதவி, சிங்கள தேசம் தமிழர் பாரம்பரிய நிலங்களை சூறையாடவும் பெளத்தமயமாக்கவும் வழிவகுத்ததுடன். ஐ.நாவில் சிறிலங்காவுக்கு நடுநிலை என்ற போர்வையில் ஆதரவாகவும் செயற்பட்டுவந்துள்ளது. தான் செய்துகொண்ட அரசியல் சீர்திருத்தத்தையே இதுவரையில் அமுல்படுத்த திராணியற்ற நிலையிலேயே இந்தியா உள்ளது.இனியும் இந்தியாவை நம்புவது “பட்டமரத்தில் பால் வடிந்த” கதையாகவே இருக்கும்.துறைமுகங்களை, வசப்படுத்துவதிலும் சீனாவை இங்கிருந்து அகற்றுவதிலுமே இந்தியா குறியாக உள்ளதே தவிர, ஈழத்தமிழர் விவகாரம் எப்போ முடிந்துபோன விவகாரமாகவே பார்க்கின்றது.

ஒருபுறம் மத்திய அரசின் செயற்பாடுகள் காணப்பட தமிழ்நாட்டு மாநில மீனவர்கள் (தொப்புள் கொடி உறவுகள்) ஏற்கனவே கூறியவாறு வடபகுதி கடலில் நுழைந்து கடல்வளங்களை சூறையாடுவதுடன், கடற்சூழலையும் மாசுபடுத்தி வடபகுதிவாழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடல்லாது இன்று போதைவஸ்துகளையும் கடத்தி மக்களின் நலவாழ்வையும் சீர்குலைக்கவும் முற்பட்டுள்ளார்கள்.

வடக்கு தமிழ் கட்சிகள் இத்தகைய செயற்பாடுள் தொடர்பில் மூச்சு விடுவதாக இல்லை.அவர்கள் இன்னமும் தொப்புள்கொடி உறவுகள் என்ற மாயையிலிருந்து மீள்வதாக இல்லை.மத்திய அரசு ஒருபுறம் மாநில அரசு இன்னொரு புறமாக ஈழத்தமிழர்களுக்கு தொடர் தொல்லைகளையே செய்து வருவது துரதிஷ்டவசமானது.

மத்திய அரசோ மாநில.அரசோ எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் விடிவுக்காக உதவப்போவதில்லை என்பதையே மேற்கூறிய சம்பவங்கள் காட்டி நிற்கின்றன.

கலாநிதி சூசை ஆனந்தன்    


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்