// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நிறைவேறியது தீர்மானம்- அடுத்தது என்ன?

உலகத் தமிழர்கள் கடந்த இரு வருடங்களாக எதிர்பார்த்த ஐ.நா மனித உரிமை சபையில் சிறிலங்கா மீதான தீர்மானம் இருபது வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை 6ஆம் திகதி மதியம் ஒரு (01.00 மணிக்கு கூடிய மனித உரிமை சபை ஒன்றுபட்ட குழு எனப்படும் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மலாவிய ஆகிய நாடுகளினால் முன்மொழியப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானத்தை பிரித்தானியாவின் பிரதிநிதி சபையில் முன்மொழிந்தார்.பிரித்தானியாவின் பிரதிநிதி உரையாற்றும் வேளையில், தாம் சிறிலங்காவின் மிக நீண்ட கால நண்பனென குறிப்பிட்டதுடன், சிறிலங்காவில் மிக நீண்ட காலமாக அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் விடயங்களில் எந்த முன்னேற்றமும் காணப்படாத காரணத்தினால் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வருவதாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதி தாம் இவ் தீர்மானத்திற்கு சார்பாக வாக்கு அளிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
 
அதனை தொடர்ந்து சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் அலி சப்றி உரையாற்றினார்.இவர் தனது உரையில், சிறிலங்கா வழமையாக கூறும் சாட்டு போக்குகளான தமது அரசியல் யாப்பிற்கு எதிரானது,தனது உள்நாட்டு விடயங்களில் இவர்கள் தலையிடுவதாகவும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு  செலவு செய்யும் ஐ.நாவின் நிதி வீணானது என எடுத்துரைத்து சபை அங்கத்தவர்களை இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டினார்.
 
இதனை தொடர்ந்து பாகிஸ்தான், பிரேசில், ஜப்பான், சீனா, இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகள் இத் தீர்மானம் பற்றி உரையாற்றியதுடன், தமது வாக்கின் நிலைப்பாடுகளையும் உறுதிப்படுத்தினார்கள்.இந்த உரைகளை தொடர்ந்து சபை தலைவர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆறு கோடியே தொண்ணூறு ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகவுள்ளதாக அறிவித்தார். இவற்றை அடுத்து சபையின் செயலகம் நாற்பத்தி ஏழு நாடுகளும் அவர்களது வாக்குகளை பதிவதற்கான எலக்ட்ரோனிக் இயந்திரங்கள் திறக்கப்பட்டன. சரியாக ஒரு நிமிடத்தின் பின் வாக்கெடுப்பின் முடிவுகள் சபையில் திரையில் காண்பிக்கப்பட்டது.
 
இதன் பிரகாரம்  தீர்மானத்திற்கு சார்பாக இருபது (20) நாடுகளும் நடு நிலைமையாக இருபது நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக அதாவது சிறிலங்காவிற்கு சார்பாக ஏழு நாடுகளும் வாக்களித்தன. இதில் இந்தியா நடு நிலைமை வகித்துள்ளது பலரை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.உண்மையை கூறுவதானால் இம்முறை கடந்த முறை சிறிலங்காவுக்கு கிடைத்த பதினொரு நாடுகளில், இம்முறை ஏழு நாடுகள் மட்டுமே சிறிலங்காவிற்கு சாதகமாக வாக்களித்துள்ளமை மிகவும் வெட்கக்கேடான விடயம்.
 
அதேவேளை சிறிலங்காவின் வார்த்தையில் கூறுவதானால் சிறிலங்காவிற்கு எதிராக நாற்பத்தி ஏழு நாடுகள் (47) அங்கத்துவம் கொண்ட சபையில் நாற்பது (40) நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்துள்ளது எனவும் கூறலாம்.இந்த கூட்டத்  தொடரில் சிறிலங்காவிலிருந்த தமிழ் அரசியல் வாதியும் பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.எ. சுமந்திரன்,   சிவஞானம் சிறிதரன்,  செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் நியமன பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,  சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதேவேளை வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள், புலம்பெயர் வாழ் சங்கங்களின்  பிரதிநிதிகள் என பெரும் தொகையானோர் பங்குபற்றியிருந்தனர். இதேவேளை, கடந்த மாதம் வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி பிரித்தானிய தமிழ் பேரவையில் ஒருங்கிணைப்பில் ஐ.நா.முன்றலில்  ஓர் கண்காட்சி நடைபெற்ற அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து இரவு இரவாக பயணம் செய்து பேருந்தில் பல பிரித்தானிய தமிழர் ஜெனிவாவிற்கு வருகை தந்து ஓர் விழிப்பு போராட்டத்தையும் நடத்தியிருந்தனர்.
 
ஐ.நா.வின்  51ஆவது கூட்ட தொடரில் சில அமைப்புகளின் சில பிரதிநிதிகள் உரையாற்றியிருந்த பொழுதிலும் இவற்றில் சில ஐ.நா. மனித உரிமை சபையின் வேலைத் திட்டங்களுக்கு வெளியில் காணப்பட்டதுடன், சிலரின் உரைகள் வெளிநாட்டவர்கள் விளங்கி கொள்ள கூடியதாக அமையவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.சிலர் தமது உரையில் ஐ.நா.மனித உரிமை சபை சிறிலங்கா விடயத்தில் ஓர்  விசேட அறிக்கையாளரை நியமிக்குமாறு வேண்டினார்கள். இது மிக தவறான வேண்டுகோளாகும். இது மனித உரிமை சபையை மிக தவறான பாதையில் இட்டு செல்வதற்கு சமனானது.
 
ஐ.நா. மனித உரிமை செயற்பாடுகளை பொறுத்தவரையில் இரு அறிக்கையாளர்கள் உள்ளனர். அவையாவான விசேட அறிக்கையாளர், மற்றையது நாட்டுக்கான அறிக்கையாளர். இந்த  அடிப்படையில் விசேட அறிக்கையாளர் குறிப்பிட்ட மனித உரிமை மீறலை மட்டும் அக்கறை கொள்பவர்.நாட்டுக்கான அறிக்கையாளர்  குறிப்பிட்ட நாடு பற்றிய சகல விடயங்களையும் கவனத்தில் கொள்பவர்.சிறிலங்காவிற்கு தேவைப்படுவது நாட்டுக்கான அறிக்கையாளர்.இவ் சிறிலங்காவிற்கான நாட்டு அறிக்கையாளரை பிரான்ஸில் தளமாக இயங்கும் தமிழர் மனித உரிமை மையம் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் தமது அறிக்கைகள், உரை, அவசர மனு ஆகியவற்றை  வேண்டிவருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இவை தவறும் பட்சத்தில் சிறிலங்காவிற்கான ஓர் விசேட நிபுணரை வேண்டுவது ஐ.நா மனித உரிமை சபையினால் மேற்கொள்ளக்கூடியதும் இவ்விதிமுறைகளை ஐ.நா மனித உரிமை சபையில் கலந்து கொள்ளும் சகலரும் அறிந்திருக்க வேண்டும்.
கடந்த கூட்ட தொடர்களில் பக்க கூட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்த பொழுதிலும் இம்முறை சில பக்க கூட்டங்கள் சிறிலங்கா விடயத்தில் நடைபெற்ற பொழுதிலும் அங்கு தமிழர்கள் தமிழர்களுக்கு நடத்திய பக்க கூட்டங்களாக இருந்ததும் இந்த பக்க கூட்டங்களில் தமிழர்களே கலந்து கொள்ளாதது கவலை தரும் விடயம்.
 
அரசுகளின் அணுகுமுறை
 
ஐ.நா சபையில் விசேடமாக ஐ.நா.மனித உரிமை சபையில், சிறிலங்கா போன்று மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பை மேற்கொண்டுள்ள நாடுகள் பல உள்ளன.இந்த அடிப்படையில் சிறிலங்காவை போன்று ஐ.நா மனித உரிமை சபையின் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாடுகளான மியன்மார்,முன்னைய பார்மா, ஆப்கானிஸ்தான், சிரியா, பெலரூஸ், புரூண்டி, பொலிலியா, கம்போடியா, சோமளியா, தென்சூடான் போன்ற பல நாடுகள் தமக்குள் ஓர் அணியை உருவாக்கி மற்றைய நாடுகளின் ஆதரவை தேடுகின்றன. இவ்வேளையில் இந்த  நாடுகளை ஆதரிப்பதற்கு சீனா, ரஷ்யா, கியூபா, ஈரான், பாகிஸ்தான், வெனிசுலா, பொலிவியா போன்ற சில நாடுகளின் நிலைமை ஐ.நா. மனித உரிமை சபையில் மிக மோசமாக இருந்த பொழுதிலும் எந்த கூச்சமுமின்றி ஆதரிக்கின்றனர்.
 
இந்த நாடுகளின் போக்கு எப்படியாகவுள்ளதெனில், தாம் நியாயப்படுத்தும் ஓர் அறிக்கையை தயாரித்த பின்னர் நாடுகளின் பெயர்களை மட்டும் மாற்றி தமது ஆதரவை தெரிவிக்கின்றனர்.
 
இவர்கள் உள்ளடக்கும் விடயங்கள் மிகவும் சிரிப்பானவை. (உ=ம்)மனித உரிமை மீறும் நாடுகள் ஐ.நா.வை மதிக்கின்றனவா. அத்துடன் கூறுபவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனவாம்.  இதே வேளை மேற்கு நாடுகள் இவர்கள் மீது வலிந்து குறை காணுகின்றனவாம் . இப்படியான நிலையில் சிறிலங்கா விடயத்தில் ஏதோ முன்னேற்றம் நடைபெறுவது வரவேற்கதக்கது.ஆனால் இன்னும் எவ்வளவோ கடினமான தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்பது எமது கருத்து.
 
காந்தி ஜெயந்தி
 
உலகில் சாதவீக போராட்டத்தின் தந்தையென கூறப்படும் இந்தியாவின் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான ஒக்டோபர் 2 ஆம் திகதியை தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை சபையில் பல நினைவு தினங்கள் நடைபெற்றன.இவற்றை இந்திய தூதுவராலயம் உட்பட சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தின.
 
இப்படியாக நடைபெற்ற கூட்டத்தில் கருத்து கூற அனுமதிக்கப்பட்ட வேளையில், என்னால் இந்திய தூதுவரை நோக்கி சில கருத்துகள் கூறப்பட்டன. ஒன்று சாத்வீக போராட்டம் என்பது எங்கு, யாரிடையே மேற்கொள்கிறோம் என்பது.இதற்கு உதாரணமாக இலங்கை தமிழரும் தீபெத்தின் ஆன்மீக தலைவரான தலாய்லாமா விளங்குவதாக கூறினேன்.
 
அடுத்தபடியாக இன்றுவரை மகாத்மா காந்திக்கான நோபல் பரிசிற்கான விண்ணப்பம் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருதனால்  இந்த  நோபல் பரிசு பெறுவதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டுமென கூறினேன்.
 
இதற்கு பதில் அளித்த இந்திய தூதுவர், மகாத்மா காந்தியின் சேவைக்கு நோபல் பரிசு என்பது ஓர் அற்ப விடயம் என்று பதில் அளித்தார்.சிறிதோ பெரிதோ மகாத்மா காந்தி இதற்கு தகுதியற்றவரென நோபல் பரிசு கூறுவது கவலைக்குரிய விடயம்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்