// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழர்களை அடிமைப்படுத்தும் இந்திய அரசு! இது அன்னை பூபதிக்கு செய்யும் துரோகம்

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி திருகோணமலையை வந்தடைந்துள்ளது.

திருகோணமலையில் குறித்த ஊர்தி பவனியை திருகோணமலை தமிழர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் தபால் கந்தோர் சந்தியில் வரவேற்று அஞ்சலி செலுத்தினர்.

அன்னை பூபதியின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி இன்று (17) மாலை 6.00 மணியளவில் திருகோணமலையை வந்தடைந்தது.

இவ்வாகன தொடரணியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இன்றைய தினம் அன்னை பூபதி தாயினுடைய திரு உருவப்படம் தாங்கிய ஊர்தியோடு  தமிழர் தேசத்தினுடைய தலைநகர் திருகோணலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.

35 வருடங்களுக்கு முன் தமிழீழ மண்ணிலே வந்திரங்கிய இந்திய படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தி பாரிய படுகொலைகளை கட்டவிழ்த்து கொண்டிருந்த நேரத்திலே, வகை தொகையின்றி தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்து கொண்டிருந்தது.

அந்தக் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை  இந்திய படைகள்  நிறுத்த வேண்டும் எனக்கோரியும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் தமிழர்களுடைய நீண்ட கால அரசியல் நோக்கம் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி மட்டு மண்ணில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.

இவர் 31 நாட்கள் உணவு உண்ணாமல் பசியோடு பட்டினியுடன்  ஈழ தேச பிள்ளைகளை காக்க வேண்டும் என்ற நோக்குடன் உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தினார். 

31வது நாளில் அவர் துடிதுடித்து இறந்து கொண்டிருக்கின்ற பொழுது இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 31வது நாள் அவருடைய உயிர் பிரிந்தது.

இந்திய அரசு சிங்கள பேரினவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தமிழர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்து வருகின்றது.  அதை ஏற்றுக் கொள்வது என்பது அன்னை பூபதிக்கு செய்யும் துரோகம் எனவும் செல்வராஜா கஜேந்திரன் இதன் போது சுட்டிக்காட்டினார்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்