day, 00 month 0000

வெடுக்குநாறி ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை

 வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் விக்கிரங்களை மீள பிரதிஸ்டை செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்வது தொடர்பில் நேற்று (01.04.2023) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் ஆதி சிவன் ஆலய விக்கிரகத்தையும் உடைக்கப்பட்ட ஏனைய விக்கிரகங்களையும் இன்று (02.04.2023) மீள பிரதிஸ்டை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆலய நிர்வாகத்தினர் முன்னெடுத்திருந்தனர். அதனடிப்படையில் அதற்கான வேலைகள் நேற்று (01.04.2023) காலையில் இருந்து நடைபெற்றன.

இதன்போது அங்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்துவதாக பொலிஸாருக்கு எழுத்து மூலம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் பிள்ளையார், முருகன் உள்ளிட்ட ஏனைய விக்கிரகங்களையும் எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். நான் ஆலயத்தில் நின்றமையால் விக்கிரங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. பொலிஸாருடன் கடுமையாக தர்க்கத்தில் ஈடுபட்டு ஒரு தொகுதி விக்கிரகங்களை அங்கிருந்து எனது வாகனத்தில் கொண்டு வந்து வேறு ஒரு ஆலயத்தில் தற்காலிகமாக வைத்துள்ளோம்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் அவரின் ஊடாக பொலிஸ் மா அதிபர் ஆகியோருடனும் பேசியிருந்தேன். நீண்ட இழுபறியின் பின் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று (02.04.2023) அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் வடமாகண பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் வெடுக்குநாறி மலைக்கு வருகை தரவுள்ளனர்.

இதன்போது ஆலய பிரதிஸ்டை தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டு ஆலய பிரதிஸ்டை விரைவாக இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்