day, 00 month 0000

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட வருவாய்த்துறை அதிகாரியின் மனு தள்ளுபடி

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், தமக்கு எதிராகத் தீர்ப்பை அறிவித்த தீர்ப்பாயத்துக்கு எதிராகத் தாக்கல் செய்த பேராணை மனுவில் தலையிடச் சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நேற்றைய தினம் (15.03.2023) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த நிலைப்பாட்டை அறிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை ஏழு நாட்கள் உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டமை மற்றும் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையை எதிர்த்து காங்கிரஸின் தலைவருக்குக் கடிதம் எழுதியமை தொடர்பில், இந்திய வருவாய் சேவை அதிகாரியான ஜி.பாலமுருகனுக்கு எதிராகத் திணைக்கள ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அவருக்கு மூன்று ஆண்டுக்கு மூன்று தடவைகளாக ஊதியக்குறைப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து மனுதாரரான பாலமுருகன், குடியரசுத் தலைவருக்கு இரண்டு முறை விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை. 

எனவே, குறித்த தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அவர், நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது, அரச ஊழியராக இருந்தும், அரசின் கொள்கைகளை விமர்சித்த மனுதாரரின் நடத்தையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அரச தரப்பு தனது வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தாம் தனிப்பட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் அரச ஊழியர் என்ற அடிப்படையில் அவர் தமது கருத்துக்களைக் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும் என்றும் அரசதரப்பு சட்டத்தரணிகள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.

இந்தநிலையில் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை மேல் நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரியின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்