// print_r($new['title']); ?>
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் ரோபோ ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் புனைவு நாவல்களில் படிப்பது போல், கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் இடத்தை, அவர்களின் தொழில்களை இயந்திர மனிதர்கள் செய்யத் தொடங்கி விட்டனர்.
ரோபோ வழக்கறிஞர் டோனோபே (DoNoPay) என்ற நிறுவனத்தின் மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு அந்த ரோபோ வழக்கறிஞராக செயல்பட இருக்கிறது. நியூயார்க் போஸ்ட் தகவலின்படி, இந்த ரோபோ போக்குவரத்துக் குற்றத்துக்கான வழக்கு விசாரணையில் வாதாட இருப்பதாக தெரிய வந்துள்ளது. பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு இலவசமாகச் சட்டச் சேவைகளை வழங்குவதற்காக இந்த ரோபோ செயல்படும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த மாதத்தில் இருந்து நீதிமன்றத்தில் குற்றவழக்குகளை இந்த ரோபோ கண்காணிக்கவுள்ளது. வழக்கறிஞர் அளிக்கும் அனைத்து சட்டரீதியான தகவல்களையும் இந்த ரோபோவும் கொடுக்கும் வகையில் அதனை உருவாக்கியுள்ளனர். எதிர்தரப்பின் மொத்த வாதங்களையும் கவனித்து, பின்னர் அதற்குத் தேவையான பிரதி வாதங்களை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இந்த ரோபோவானது வெளிப்படுத்தும். ஏற்கனவே இதே மாதிரி ரோபோ தொழில்நுட்பம் சீனாவிலும் உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ தான், உலகின் முதல் இயந்திர வழக்கஞர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2015ல் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ பார்க்கிங் டிக்கட் வழக்குகளை பார்க்க உபயோகிப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன்முறையாக வழக்கறிஞராக ஒரு ரோபோ வாதாட உள்ளது என்ற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மற்ற வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சலசலப்பையே உருவாக்கியுள்ளது. மனிதனைவிட இது சிறப்பாக செயல்படும் என்பதால், எதிர்காலத்தில் இத்தகைய ரோபோ வழக்கறிஞர்களை, நிஜ வழக்கறிஞர்கள் எதிர்கொள்வது மிகவும் சவாலானதாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.