// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஆப்கானிய பெண்கள் மீதான தலிபான்களின் அடக்குமுறை

அமெரிக்காவின் படை விலகலின் பின்னர் தாலிபானின் கடந்த ஓர் ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான ஆப்கானிய மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது என்பதே உண்மை.
 
ஆப்கான் பெண்களின் மேலான அடக்குமுறையின் தொடர்ச்சியாகப் பெண்களின் கல்லூரிப் படிப்பை தடை செய்ததோடு, பெண்கள் பயிலும் பல்கலைக்கழகங்களை மூடவும் தற்போது தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். நீண்ட காலமாக அவலத்தோடு வாழும் மக்களின் துயரங்களுக்கு முடிவு கானல் நீராகவே புலப்படுகிறது.
 
அமெரிக்க படை விலகலின் பின் ஆப்கானில் இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் திரைச்சீலை கொண்டு மாணவர்களையும் மாணவிகளையும் பிரிக்க வேண்டும் என அந்நாட்டு தலிபான் அரசு கடந்த வருடம் கூறியிருந்தது.
 
ஆப்கான் பல்கலைகழக தடை :
 
தற்போது ஆப்கானிய உயர் கல்வித்துறை அமைச்சகம் மற்றொரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெண்களுக்கு இருந்த தடை காரணமாக அலுவலகங்களில் அவர்கள் பணியிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் இந்த புதிய தடை உத்தரவு மூலம் பெண்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என சர்வதேச ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து காபுலில் மாணவிகள் கண்ணீருடன் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
 
தலிபான்களின் பிற்போக்கு ஆட்சி :
 
இதுபோன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய பாடசாலை கல்வி தடை அறிவிப்பை தலிபான்கள் அரசு திரும்ப பெற்றது.
 
ஆனாலும் அதன் பின்னரான நாட்களில் பெண்களுக்கு எதிரான தொடர் சட்டங்களை மேலும் இயற்றி வந்தது. பொது இடங்களுக்கு ஆண் துணையின்றி செல்லக்கூடாது. உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
 
தாலிபான் ஆட்சியில் பழமைவாதக் கருத்து :
 
பழமைவாதக் கருத்துகளை நடைமுறைப் படுத்தும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி்1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சியின் கீழ் இருந்த போது ஆண் துணை இல்லாமல் பெண்களால் வெளியே வர முடியாது, கல்வி கற்கக் கூடாது, வாகனம் ஓட்டக் கூடாது எனப் பெண்களை வீட்டுக்குள் முடக்கும் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 
இவற்றை மீறும் பெண்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். வன்முறைத் தாக்குதலுக்கும் உள்ளாகினர்.
 இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்கு உட்பட்டே பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்று தாலிபான்கள் கூறியிருப்பது பெண்களின் நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
 
உரிமைகளுக்காகப் அறவழிப் போராட்டம் :
ஆயினும் இக்கட்டான இசசூழலில் தலைநகர் காபூலில் கறுப்பு உடையும் பர்தாவும் அணிந்திருந்த பெண்கள் தாலிபான்கள் முன்னிலையில் தமது கல்வி, பணி மற்றும் அரசியல் பங்கேற்பு உரிமை களுக்காகப் பதாகைகளை ஏந்தி அறவழிப் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
 
இந்தக் காணொலிச் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆப்கானின் வேறு சில பகுதிகளிலும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் ஆப்கான் பெண்கள் தாலிபான்களுக்கு எதிராகப் போராடிய செய்திகளும் வெளியாகின.
 
உலக வல்லாதிக்க நாடுகள் கைவிட்டுவிட்ட நிலையில் ஆப்கான் பெண்களே தமது உரிமைகளுக்காக தாலிபான்களை எதிர்த்துப் போராடத் தொடங்கியிருப்பது கவனத்தை பெறுகிறது.
 
ஆப்கான் பெண்களின் உரிமைப் போராட்டம் :
 
ஆப்கானில் பெண்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர். இதன்போது மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். டகார் மாகாணத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
 
இந்தத் தடை அறிவிக்கப்பட்ட பின்
நூற்றுக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழகம் நுழைவதை காவலர்கள் தடுத்தனர்.
தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பெண்கள் கல்வி மீது விதித்து வரும் கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தத் தடை வந்துள்ளது.
 
இந்நிலையில் கடந்த வாரம் காபுல் வீதிகளில் ஹிஜாப் அணிந்த பல பெண்கள் இந்தத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோசங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் பேரணி செல்லும் காட்சி சமூக ஊடகத்தில் வெளியானது.
 
இதன்போது பெண் தலிபான் அதிகாரிகளால் தாம் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பல பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
அமெரிக்கப் படை விலகலின் தோல்வி:
 
2001 அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு தாலிபான்களை ஒடுக்குவதற்காக ஆப்கானில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் கடந்த 2021 ஜூலை மாதத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டு, தற்போது தாலிபான்கள் ஆப்கானை மீண்டும் ஆளுகின்றனர்.
 
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் நிலவிவந்த ஜனநாயக ஆட்சியில் ஒப்பீட்டளவில் பெண்களுக்குச் சுதந்திரம் இருந்தது. லட்சக்கணக்கான பெண்கள் பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களில் கல்வியைப் பெற்றனர். திரைப்பட இயக்குநர்கள் உருவாகினர்.
மேயர் உள்ளிட்ட அரசியல் பதவி களுக்கும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீண்டும் ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றனர்.
 
ஆனால், களத்திலிருந்து வரும் செய்திகள் அதற்கு நேரெதிராக உள்ளன. அலுவலகப் பணிகளில் இருந்த பெண்களை நீக்கிவிட்டு அந்தப் பணியிடங்களில் ஆண்களை நியமிக்க தாலிபான்கள் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
 
அடிப்படை உரிமைகள் பறிப்பு ;
 
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு தரப்பிலும் அந்நாட்டு மக்களின் பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
 
குறிப்பாக பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, சர்வதேச ஆதரவைப்பெற தாலிபான்கள் ஆரம்பத்தில் மிதமான பிம்பத்தை முன்வைக்க முயன்றனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாக சர்வதேச சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாகச் செய்து, அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைத் திட்டமிட்டு ஒடுக்கி வருகின்றனர்.
 
சோவியத் கால ஆப்கான் :
 
வரலாற்றின் படி 1973 முதல் 1978 வரை 'முகம்மது தாவூத் கான்' ஆப்கானியக் குடியரசின் அதிபராவார்.
இந்த இடது சாரி அரசும் உட்பிரச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு கடுஞ்சிக்கல்களை எதிர்கொண்டது. ரஷ்யா அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் ஆப்கானித்தானும் அப்போது அகப்பட்டுக்கொண்டது.
 
1979 இல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு, அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் "சிக்னீவ் பிரசின்கி" (Zbigniew Brzezinski) – அவர்களின் ஆலோசனையினால் பாக்கித்தானின் ஐ. எசு. ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முச்சாகதீன்களுக்கு உதவி அளித்தது.
 
பல்வேறு பன்னாட்டு அழுத்தங்களினாலும், சுமார் 15,000 துருப்புக்களை முச்சாகதீன்களுடனான போரில் இழந்ததனால், சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 இல் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.
 
சோவியத் வெளியேற்றத்தின் பின்னர் ;
 
அமெரிக்கா போரினால் சிதைந்துபோன ஆப்கானித்தானைச் சீரமைக்க உதவவில்லை. சோவியத் அரசால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் இன்றும் உள்ளன. அத்துடன் சோவியத் ரசியா தொடர்ந்தும், அதிபர் நச்யிபுல்லாவிற்குத் தமது ஆதரவை வழங்கியது; ஆயினும் 1992 இல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகள் வெளியேறியமை, இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும், தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.
 
பல சிறுபான்மையினரும், அறிவுஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானித்தானைவிட்டு வெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும், முச்சாகதீன்களின் பல உட்பிரிவுகளுக்கிடையில் போர்கள் மூளலாயின.
இதன் உச்ச கட்டமாக 1994 இல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர்.
 
இக்காலகட்டத்தில் தாலிபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் எல்மான்ட், கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த பட்டாணியர்கள் (Pashtuns) ஆவர்.
 
தாலிபான் ஆட்சி அடக்குமுறை :
 
தாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக் கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை "வடக்கு முண்ணனி" எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது.
 
தாலிபான்கள், ஷரீயா எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், "அல்-காயிதா" தீவிரவாதியான உசாமா பின் லாதினைப் பாதுகாத்தனர்.
 
தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது.
 
பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்லநிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் "ஆப்கானின் அபின்" எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும்.
 
காபூலில் கதறியழுத மாணவிகள்:
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் நிலை குறித்துக் கவலை அளிப்பதாக உலக நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
பல்கலைகழகங்களை தாலிபான் அரசு மூடியதை இட்டு கதறியழுத மாணவிகள், இதனை “பெருந்தவறு" என்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில அந்நாட்டு தாலிபன்கள் அரசு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், வகுப்பறையில் பெண்கள் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
தாலிபன் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
 
கடந்த 20 ஆண்டுகள் வரை அமெரிக்காவின் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தான் சமீபத்தில் அந்நாட்டை தாலிபன்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு கிளம்பிய பின்னர்
பல்கலைகழகங்ககளை மூடிய தாலிபான்கள் செயலை முழு உலகமே கண்டித்துள்ளது.
 
 ஆப்கான் பெண்களின் மேலான அடக்குமுறையின் தொடர்ச்சியாகப் பெண்களின் கல்லூரிப் படிப்பை தடை செய்ததோடு, பெண்கள் பயிலும் பல்கலைக்கழகங்களை மூடவும் தற்போது தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். நீண்ட காலமாக அவலத்தோடு வாழும் மக்களின் துயரங்களுக்கு முடிவு கானல் நீராகவே புலப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்