// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மும்பைபயங்கரவாத தாக்குதலுக்கு 14 வருடங்கள்

இந்தியாவின் மும்பை நகரம் என்றாலே 2008 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதலே முதலில் நினைவுக்கு வரும். மக்களை அந்தளவு அச்சத்திற்குள் தள்ளிய சம்பவமாகவே மும்பை தாக்குதல் காணப்படுகின்றது.முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தாக்குதல் இடம்பெற்று இன்று சனிக்கிழமையுடன் (26) 14 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அந்த நினைவுகள் இன்றுவரை இந்திய மக்கள் மாத்திரமல்ல அனைத்துலகத்தினரினதும் உள்ளங்களிலிருந்து அழியா சுவடுகளாகியுள்ளன. தீவிரவாதிகளின் கொடூரமான  தாக்குதல்களினால் மும்பை நகரம் அதிர்ந்த போது அங்கு சென்றிருந்த பன்னாட்டவர்களின் நிலை குறித்து அறிய உறவினர்கள் தூதரகங்கள் ஊடக தொடர்புக்கொண்டிருந்தனர். மறுபுறம் இந்திய ஊடகங்கள் பல  தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன. இதுவே முழு உலகத்தின் பார்வையிலும் மும்பை தாக்குதல் சென்றடைய காரணமாகியது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்த பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் மும்பை ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்டவற்றில்  கடும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் கொல்லப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர். சுமார் 60 மணித்தியால போராட்டத்தின் பின் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாதுகாப்பு துறையினர் அனைத்து தீவிரவாதிகளையும் சுட்டுக்கொண்டதுடன் கசாப் என்ற தீவிரவாதியை உயிருடன் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பாதுகாப்பு துறையினர் அமெரிக்க புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ இன் உதவிகளையும் பெற்றுக்கொண்டனர். இதில் தீவிரவாதிகள் கடல்வழியாக வருவதற்குப் படகைப் பயன்படுத்தியிருந்தனர். அந்தப் படகில் பயன்படுத்திய யமாஹா என்ஜின் மூலமே தாக்குதல்தாரிகள் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க முடிந்தன.

தீவிரவாதிகள் 10 பேர் பாகிஸ்தானில் இருந்து ஒரு படகுமூலம் இந்தியக் கடற்பகுதிக்குள் வந்தவுடன் எம்.வி.குபெர் என்ற கப்பலைக் கடத்தியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனூடாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில்  சம்பவ தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் அதாவது நவம்பர் மாதம் 23ஆம் திகதி, கடத்தப்பட்ட கப்பலின் கேப்டன் அமர்சந்த் சோலங்கி என்பவரை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி கப்பலை மும்பைக்குச் செலுத்தியுள்ளனர். ஏனெனில் தாக்குதலை திட்டமிட்ட தீவிரவாதிகள் மும்பை கடற்பகுதி குறித்து அறிந்திருக்க வில்லை.

இதன் போது சுமார் 30 மணிநேரம் மும்பை நோக்கி தீவிரவாதிகள் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் மும்பைக்கு அருகே வந்ததும் கப்பலின் கேப்டன் சோலங்கியை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

அதன்பின் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் இந்தியக் கடற்பகுதிக்குள் நுழைய பயன்படுத்திய சிறிய படகு மூலம் மும்பை கடற்பகுதிக்குள் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் தீவிரவாதிகள் இரவு 8.15 மணிக்கு நுழைந்துள்ளனர். அந்த நிமிடம் தொடக்கம் கடுமையான துப்பாக்கி பிரயோகங்களை முன்னெடுத்தனர். பொதுமக்களை இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிறு குழுக்களாக பிரிந்த தீவிரவாதிகள் வாகனங்களை கடத்தி , சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மும்பையின் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டல், ஒபராய் டிரைடண்ட் ஹோட்டல், யூத கலாசார மையம் மற்றும் மருத்துவமனைகளை இலக்காக கொண்டு கடும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும் விசாரணைகளை தொடர்ந்த பொலிசார் பத்வார் கடற்பகுதியில் ஆதரவின்றி இருந்த சிறிய படகு ஒன்றை கண்டுபிடித்தனர். அதன்பின் அமெரிக்க எப்.பி.ஐ உதவியுடன் படகில் பொருத்தப்பட்டிருந்த யமாஹா எஞ்சின் கொள்வனவாளர் தொடர்பில் அறிய முனைந்தனர். ஆனால், யமஹா எஞ்சினின் பதிவிலக்கம் அழிக்கப்பட்டதால், கண்டுபிடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின் ஜப்பானில் உள்ள யமஹா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு குறித்த எஞ்சினின் பதிவிலக்கத்தை கண்டுபிடிக்க கோரினார்கள்.

எஞ்சின் பதிவிலக்கம் அழிக்கப்பட்டதால், அதில் உள்ள சிலிண்டர்களில் இருக்கும் இலக்கங்களை கொண்டு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த யமாஹா  படகு எஞ்சின் கராச்சியில் உள்ள ஒரு விற்பணை நிலையத்திற்கு வழங்கப்பட்டமை தெரியவந்தது. அதன்பின் அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் கராச்சியில் உள்ள அந்த குறிப்பிட்ட முகவரிடம் கேட்டபோது, அதேபோன்று 8 யமஹா எஞ்சின்களை  லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிதியாளர் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்ததாகத் தெரிவித்திருந்தார்.  

10 ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்த  படகு எஞ்சின் மூலம் மும்பைக்கு வந்த 10 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது முதல்முறையாகக்  இதன் போது உறுதி செய்யப்பட்டது. இதே வேளை, யமஹா நிறுவனத்திடம் இருந்து பெற்ற படகு எஞ்சின்  பதிவிலக்கம் உள்ளிட்ட ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்திய அரசு அளித்து குற்றவாளிகளைப் பிடிக்க வலியுறுத்தியது. அமெரிக்காவும் கடும் நெருக்கடி கொடுத்ததையடுத்து பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தலைவர் ஜகி உர் ரஹ்மான்லக்வி உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தது.

பாகிஸ்தானின் விசாரணை அமைப்பான எப்.ஐ.ஏ மும்பை தாக்குதல் வழக்கில் 27 பேரை குற்றவாளி என அறிவித்து கைது செய்தது. மேலும் மற்றொரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் உதவினர். அதாவது மும்பை தாக்குதல் நடந்தபோது, கொலாபா  என்ற இடத்தில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் குண்டுகள் குறித்து எப்.பி.ஐ அதிகாரிகளும், இங்கிலாந்து புலனாய்வு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வெடிபொருட்களில் இருக்கும் கைரேகைகளை ஒப்பிட்டுப்பார்த்த போது அது லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினரது என்றும் முடிவு செய்தனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்