day, 00 month 0000

கொழும்பு வந்த சீனக் கப்பலால் பெரும் இராஜதந்திர சிக்கல்

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல்  (28) புறப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Shi Yan 6 ஆய்வுக் கப்பலை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக் கடலுக்குள் நுழைந்த சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6ஐ அடிப்படையாகக் கொண்டு, சீன மற்றும் இந்தியத் தரப்புகளுக்கு ஆதரவான ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்த கப்பல் தொடர்பில் இந்திய ஊடகங்கள் அண்மைய நாட்களில் வெளியிட்ட விமர்சன அறிக்கைகளுக்கு சீன ஊடகங்களும் பதிலளித்துள்ளன.

சீனாவின் சர்வதேசப் புகழை இந்திய ஊடகங்கள் கெடுக்கின்றன

சீனாவின் புவி இயற்பியல் செயல்பாடுகளை இந்திய ஊடகங்கள் அரசியலாக்குவதை சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கண்டித்துள்ளது.

சீன கப்பலின் வருகை தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இந்தியாவின் பிராந்திய மூலோபாயத்திற்கு உதவும் வகையில் மட்டுமே ஒருதலைபட்சமான அறிக்கைகள் என்று சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Xin Hua பல்கலைக்கழகத்தின் தேசிய மூலோபாய நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் நிறுவனப் பணிப்பாளர் கியான் ஷின், Shi Yan 6 கப்பல் இந்தியப் பெருங்கடலில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக குளோபல் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சில இந்திய ஊடகங்கள் சீனாவின் சர்வதேசப் புகழைக் கெடுக்கவும், சீனாவைக் கோபப்படுத்தவும் இராணுவ நடவடிக்கைகளுடன் தனது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வேண்டுமென்றே தொடர்புபடுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிக் கப்பல் தொடர்பான இந்த சித்தாந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பரஸ்பர நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்க நேர்மறையான முயற்சிகளை எடுக்குமாறு அவர் இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறார்.

சீனாவுக்கு எதிராக இந்தியா அறிக்கை

Shi Yan 6 கப்பலின் செயற்பாடுகள் சர்வதேச சட்டம் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே அமைந்துள்ளதாக தென் சீனக் கடல் ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தின் உலக கடல்சார் ஆராய்ச்சி பணிப்பாளர் சின் ஷின் மியாவ் குளோபல் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

சீனக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழையும் போதெல்லாம், அவை வணிகக் கப்பல்களாக இருந்தாலும் சரி, மீன்பிடிக் கப்பலாக இருந்தாலும் சரி, அப்பகுதிக்கு அச்சுறுத்தலாகக் கருதி சீனாவுக்கு எதிராக இந்தியா அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் நேற்றைய தினம் புறப்படவிருந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

Shi Yan 6 உடன் இணைந்த நாரா குழு

இதனிடையே, Shi Yan 6 கப்பலைக் கொண்டு ஆய்வு நடத்த நாரா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

அதன்படி, இன்று (29) Shi Yan 6 கப்பலுடன் நாரா நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் மற்றும் இரண்டு கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல், சீன ஆய்வுக் கப்பல் முன்பு திட்டமிட்டபடி 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடல் பிராந்தியத்தில் தங்கியிருப்பதற்கான அனுமதியுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை Shi Yan 6 இலங்கையில் நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்