இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இரண்டு இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விசாகபட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி பயணித்த விசேட பயணிகள் இரயில் மற்றும் விசாகபட்டினத்தில் இருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கி பயணித்த அதிவேக இரயில் ஆகியன இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதிவேக இரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மறுபுறம் பயணித்த இரயில் அதனுடன் மோதியுள்ளது.
சமிக்ஞை கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த விபத்தில் சிக்குண்ட மக்களை மீட்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சில மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்ததுடன், 1,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.