// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை

பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து தமிழர் நிலத்தில் கட்டப்பட்ட தையிட்டி பெளத்த விகாரை தொடர்பில் இன்று 25/5/2023 அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சிறிலங்கா பாராளுமன்றில் உரை ஆற்றியுள்ளார்.

யாழ்ப்பாணம் தையிட்டியில் கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடந்த சம்பவங்கள் குறித்து இந்த சபையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்

இது குறித்து பல தடவைகள் இந்த அவையில் யாழ்.மாவட்ட்த்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பினும், எமது அமைப்பின் நிலைப்பாட்டை இங்கு நான் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

குறிப்பாக எமது கட்சி செயலாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்கள், சிறீலங்கா பொலிசாரால் காடைத்தனமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் தாக்கப்பட்டமை குறித்தும், அந்த பகுதியில் நடப்பவை பற்றிய உண்மை நிலவரம் குறித்தும் நான் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

யாழ் மாவட்டம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான வகையில், பெளத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இதை ஏன் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டது என கூறுகின்றேனென்றால், இது ஏறத்தாழ 120 பரப்பு அதாவது 7 தொடக்கம் எட்டு ஏக்கர் பரப்பளவுடைய 15 குடும்பங்களின் சட்டபூர்வமான உறுதிகள் கொண்ட ஒரு காணியில் முழுக்க முழுக்க சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை ஆகும்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள் சிறிலங்கா இராணுவத்தால் இவ்விகாரை கட்டப்படுவது குறித்து முதன் முதலில் கேள்விப்பட்ட உடனேயே, தற்போதைய பாதுகாப்பு பிரதானியாக இருக்கின்ற சவேந்திர சில்வாவினால் இந்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டதாக செய்தி வெளிவந்த உடனேயே (2021) நானும் திரு. செல்வராஜா கஜேந்திரனும் இவ்விடயம் குறித்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். அப்போதைய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ( ஆளும் கட்சியுடன் இருந்த) திரு அங்கஜன் ராமநாதன் இந்த விடயத்தை நாம் அங்கு முற்படுத்துவதனை தடுக்க முனைந்தாரெனினும் , இறுதியில் அப்படியாக தனியார் காணிகளில் சட்டவிரோத விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ந்தும்இடம்பெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இச்சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறி இருந்தார்.

ஆனாலும் ,இந்த உறுதிமொழிகளுக்கு மத்தியிலும் இந்த சட்டவிரோத விகாரை கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பின்னணியிலேயே அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் , இந்த சட்டவிரோத விகாரையினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களும் எமது அமைப்பின் அங்கத்தவர்களும் இந்த சட்டவிரோத விகாரைக்கு எதிராக 23 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்து இருந்தார்கள்.

அந்த சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்ற உறுப்ப்பினர் திரு செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் காடைத்தனமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார். இது குறித்த செய்திகள் படங்கள் மற்றும் காணொலிகள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அதேநேரம், திரு கஜேந்திரன் அவர்களை கைது செய்வது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என பொலிசாருக்கு யாரோ அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்களோ தெரியவில்லை, ஆனால் அவரை விடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எமது அமைப்பை சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் உட்பட 9 பேரை, பொலிசார் கைது செய்திருந்தனர்.

அவர்கள் நேற்று வரைக்கும் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்பு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அத்தோடு, இந்த கைதின் போது செயற்பட்ட விதம் குறித்து பலாலி பொலிஸ் பொறுப்பதிகாரி மீது விசாரணை செய்யுமாறு யாழ் பொலிஸ் தலைமையகத்தை நீதிமன்று பணித்திருக்கின்றது.

எனக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் பிரகாரம், இந்த அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட பலாலி பொலிஸ் பொறுப்பதிகாரி பல்வேறு மோசடிக் குற்றசாட்டுகளுக்கு உள்ளானவர் என்பதோடு ஒரு கொலை வழக்கும் அவர் மேல் பதியப்பட்டு இருக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன் உட்பட எமது அமைப்பை சேர்ந்து 9 பேர் சட்டவிரோதமான முறையில் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதன் பின்னணி இது தான்.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இங்கு பொலிசார் நடந்து கொண்ட முறைமை தான்.உண்மையில் பொலிசார் எமது ( மக்களின் ) நலன்களை பேணுவதற்காகவே பொலிசார் பணிபுரிவதாக சொல்லப்படுகிறது, ஆனால் இங்கு நடந்தது அதற்கு நேர் எதிரானது,

இங்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய நடவடிக்கைகள் நடப்பதாக கூறியே நீதிமன்றில் இருந்து குற்றவியல் சட்டக்கோவை 106 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் எமக்கு எதிரான தடை உத்தரவை பெற்றுக் கொண்டு வந்திருந்தார்கள்.

இங்கு அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய வகையில் நடந்தது உண்மையில் என்ன?

உண்மையில் , தனியார் காணியில், அந்த மக்களின் சட்ட பூர்வ காணி உரித்தை முற்று முழுதாக தூக்கியெறிந்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை பாதுகாப்பதற்காக , ஒரு சட்ட விரோத நடவடிக்கையை பாதுகாப்பதற்காக , உண்மையான களநிலவரத்தை நீதிமன்றுக்கு மறைத்து , இந்த் தடை உத்தரவை , பெற்று வந்திருக்கிறார்கள்.

ஒரு சட்டவிரோத நடவடிக்கையை பொலிசார் பாதுகாத்துக் கொண்டும் அந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்த இந்த அவையின் கெளரவ உறுப்பினர் ஒருவரையும் மக்களையும் தாக்கி கைது செய்திருக்கிறார்கள்.

இதில் முரண் நகை என்னவென்றால் , எமக்கு இதுவரை காலமும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான விசாரணை என வரும்போது இத்தகையவர்கள் மீது தான், தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என இந்த அவையின் ஆளும் தரப்பும் ஜனாதிபதியும் கூறிக்கொண்டு வருகிறார்கள் .

உண்மையில் இப்படியான மிக கேவலமான விடயங்கள் தான் எமது மண்ணில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

எனக்கு முன்னர் இங்கு உரையாற்றிய உறுப்பினர் தென்னக்கோன் அவர்கள், இந்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இன்னல்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் அதன் விளைவாக வந்த பல்வேறுபட்ட ஆயுத கிளர்ச்சிகளும் போராட்டங்களும் என கூறியிருந்தார்.

ஆனால் அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்,

உண்மையில் இந்த நாட்டில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கிற ஒரு சமூகமானது, அரசின் அதிகாரத்தை தமக்கே உரியதாக மட்டும் பாவித்துக் கொண்டு, இந்த நாட்டில் அதேயளவு உரிமையும் உரித்தும் உடைய ஏனைய இன மக்களை முழுமையாக உரிமையற்றவர்களாக்கியிருக்கிறது.

நீங்கள் அப்படியான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கின்ற போது, இந்த மண்ணுக்கு உரித்தான ஏனைய சமூகத்தினர்கள் அதை வெறுமனே கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்படி உங்கள் நடவடிக்கைகளால் சொந்த நாட்டிலேயே உரிமையற்றவர்களாக்கப்பட்டவர்கள், அதற்கு எதிரான தமது எதிர்வினையை காட்டும் போது, அந்த எதிர்வினைகள் தான் இப்போது நாம் எதிர்கொள்ளும் இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு காரணம் என சொல்லுகிறீர்கள்.

நீங்கள் இங்கே இப்படி பேசிக்கொண்டிருக்கின்ற போது , இந்த கொள்கைகளால் இப்படியான பொருளாதார நெருக்கடிக்கு பின்னரும், உங்களது சொந்த அரசாங்கம் அதே இனவாத கொள்கைகளினால், தனது இராணுவத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் தமிழர்களை உரிமையற்றவர்களாக மாற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.

ஆனால் நீங்கள் இங்கே இருந்து கொண்டு, கடந்த 75 வருட தவறை மீளவும் விடப்போகிறீர்களா என கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கிறீர்கள்?

ஆனால் உண்மையில் நீங்கள் அதே தவறை , நாட்டை இந்தளவு நெருக்கடிக்குள் கொண்டு வந்து நிறுத்திய அதே தவறை நீங்கள் மறுபடியும் மறுபடியும் இழைக்கிறீர்கள் இழைக்க போகிறீர்கள்.

ஏனெனில் நீங்கள் வரலாசான்றாதாரம் பாடம் எதையும் கற்றுக் கொள்ள தயாராகவும் இல்லை.

நீங்கள் வரலாற்றில் இருந்து தவறுகளை திருத்திக் கொள்ளாதமையா, இந்த நாடு தனது சொந்த காலில் எழுந்து நிற்பது துர்லபமே.

இனிவரும் அடுத்த 75 வருட காலத்துக்கும் உலக நாடுகளிடம் கையேந்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.

உங்களுக்கு வாக்களித்த மக்களின் நலன் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி இந்த நாட்டின் ஒவ்வொரு சொத்தையும். வெளியாருக்கு விற்பீர்கள், அதில் கொமிசன் மூலம் உங்கள் குடும்பத்தை மட்டும் கவனிப்பீர்கள். இந்தளவு அழிவுக்கு பின்னரும் அந்த பாதையை தான் நீங்க, தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.

ஆகவே, கனம் அவைத்தலைவர் அவர்களே, பொலிசாரால் இழைக்கப்பட்ட மிக மோசமான இந்த சட்டவிரோத காரியத்தை , நீதிமன்றிக்கு பொய்யை கூறி, நீதவானுக்கு பல வெளிப்படையாக சான்றாதாரம் உடைய உண்மைகளை மறைத்து இந்தத்தடை உத்தரவை பெற்றிருக்கும் இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்து இது குறித்து முழுமையான ஒரு விசாரணையை கோருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்