// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வடக்கில் அரச காணிகளை அபகரிக்கும் முயற்சி அம்பலம்

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு பிரஜைகளுக்கு ஒரு சிப்பாய் வீதம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை சட்டப்பூர்வமாக உரிமையாக்கும் இராணுவத்தின் முயற்சி அம்பலமாகியுள்ளது.

அரசின் மற்றொரு திணைக்களத்திற்கு அவசியமான காணியையே இவ்வாறு கையகப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் 64ஆவது பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணியை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக சுவீகரிக்கும் முயற்சியை மேற்கொண்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கே. காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பி.ஜெயராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அந்தச் சந்திப்பின்போது இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் தர அதிகாரி ஒருவர், இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தானிடம், யுத்தம் முடிவடைந்த பின்னர், 64ஆவது பிரிவு நிறுவப்பட்ட காணியின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு பிரதேச செயலாளரின் அங்கீகாரம் தேவை என கோரினார்.

"ஐயா, காணிப் பிரச்சினை ஒன்று உள்ளது. 64ஆவது பிரிவு இடம். 2009 முதல் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் கையகப்படுத்தப்படவில்லை." 64ஆவது பிரிவு அமைக்கப்பட்டுள்ள காணிக்குப் பதிலாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வேறு காணியை வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் அரசியல்வாதியிடம் இராணுவ அதிகாரி தெரிவித்த கருத்து உண்மையல்ல என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 25 ஏக்கர் காணிக்குப் பதிலாக வேறு காணியை இராணுவம் வழங்கியதாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இராணுவ அதிகாரி தெரிவித்த கருத்தை மறுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பணிப்பாளர், 64ஆவது படைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடம், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு மிக முக்கியமான இடம் என தெரிவிக்கின்றார்.

பிரதேசத்தில் நீர்ப்பாசனப் பணிகளுக்காகத் தயார்ப்படுத்தப்பட்ட இடம் என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விஹிர்தன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியசாலை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு அது முக்கியமான இடம் எனவும் தெரிவித்துள்ளார்.

64ஆவது பிரிவு அமைக்கப்பட்டுள்ள காணி தமது திணைக்களத்திற்கு சொந்தமாக இருந்த காலத்தில் விவசாய பிரதேசமான முல்லைத்தீவில் உள்ள அனைத்து குளங்களையும் தம்மால் இலகுவாக நிர்வகிக்க முடியுமாக இருந்ததாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்தில் இருந்தும் விவசாயிகள் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு ஏற்ற இடமாக இது காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் நீர்ப்பாசன திணைக்களத்துடன் கலந்துரையாடி பிரச்சினையை தீர்க்குமாறு, இராணுவ அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பி.ஜெயராணி குறிப்பிட்டுள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்