Aug 04

தென்னமரவாடி மீள்குடியேற்றத் திட்டத்திற்கு ஆதரவு தர தமிழ்க் கனடியன் நடைபவனி 2017

கனடியத் தமிழர் பேரவை, செப்டெம்பர் 10ந் திகதி  தொம்சன் மெமோரியல் பார்க்கில் நடைபெறவிருக்கும் 9 வது 'தமிழ்க் கனடியன் நடைபவனி' மூலம் சேகரிக்கப்படும் நிதியானது கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் தென்னமரவாடிக் கிராமத்தின் மீள் குடியேற்றத்திற்கும்,  அங்கு நிலையான பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கவும் வழங்கப்படவுள்ளது  எனத் தெரிவித்துள்ளது. 

இனக் கலவரத்தை தொடர்ந்து  1984ம் ஆண்டு பண்டைய தமிழ் கிராமமான தென்னமரவாடி அழிக்கப்பட்டு,  உள்ளூர் மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தசாப்தங்களாக இடப்பெயர்ந்திருந்த இக் கிராமத்தவர் தமது பூர்விக நிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 2010 ஆண்டுதான் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வந்த சில குடும்பங்களும்,  தென்னமரவாடி  பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்த காரணத்தால், அங்கு மீளக் குடியேறுவதிலும், அதனை மீளக் கட்டுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.    

"பல தசாப்தகால இடம்பெயர்வின்பின் மீளக் குடியேறி, தம் சமூகத்தை  மீளக் கட்டியெழுப்ப இக் குடும்பத்தினர் பெரும் ஆர்வம் காட்டினாலும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்." என்றார் தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான புஷ்பராஜா. "பொருளாதார வாய்ப்புகள், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் இதர சேவைகள் இல்லாத காரணத்தால்  கிராமத்திற்கு திரும்பிய குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் திண்டாடுகின்றன."

2017 தமிழ்க் கனடியன் நடைபவனி மூலம் சேகரிக்கப்படும் தொகை முழுவதும் சுயதன்னிறைவு கொண்டதாகவும் பயிர்ச் செய்கை மற்றும் கால்நடைகளை கொண்டிருப்பதாயும் அமையும் 10 ஏக்கர் அளவிலமைந்த பண்ணை ஒன்றினை தென்னமரவாடியில் உருவாக்க வழி வகுக்கும். அப் பண்ணை தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் நிர்வாகிக்கப்படும்.  

நிலையான இந்தப் பண்ணைத் திட்டமானது, வேலைவாய்ப்புக்களையும், இதே கிராமத்திற்கே திரும்பத்திரும்ப முதலிடக்கூடியதாய் அமையும் வருமானங்களை ஈட்டும் வழிகைளையும் உருவாக்குவது மட்டுமல்ல, இளம் வயதினர் இந்தப் பகுதியை நோக்கி வரத்தக்கவிதமாகவும், ஒரு துடிப்பான சமூகத்தை மீண்டும் கட்டமைக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கும்" என்று தெரிவித்தார் 9 வது தமிழ் கனடியப் நடைபவனியின் இணைத் தலைவரான திரு. பிரகல் திரு 

"கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்க் கனடியன் நடைபவனி கனடாவிலும், மற்றும் தாயகத்திற்கும் தேவையான பல திட்டங்களை ஆதரிக்கும்வகையில் நிதிசேகரிப்பை செய்து காட்டியிருக்கிறது,  'Canadian Heart and Stroke Foundation',  'Center for Addiction and Mental Health', 'சம்பூர் வீடமைப்பு' என்பன அத்திட்டங்களில் சிலவாகும்.”என்றார் கனடிய தமிழர் பேரவையின் தலைவரான டாக்டர்  வி. சாந்தகுமார். "இத்தகைய வெற்றிகரமான முன்னெடுப்புகள் மூலம், தாயகத்தின் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றொரு பயனுள்ள திட்டத்திற்கு கனடாவில் உள்ள தமிழர்கள் இன்னுமொருமுறை பங்களிக்கிறார்கள் என்று நம்புகிறோம்."

நிகழ்வு:           9 வது 'தமிழ்க் கனடியன் வருடாந்த நடைபவனி' 2017

திகதி:              செப்டெம்பர் 10, ஞாயிற்றுக் கிழமை

இடம்:               தொம்ஸன் பார்க், (Brimley Rd. / Lawrence Ave.) ஸ்காபரோ

நேரம்:             காலை 8:30 (பதிவுகள்); காலை 9:30 (நடைபவனி ஆரம்பம்)

மேலதிக விபரங்களுக்கும்,  உறுதிமொழிப்படிவத்தை பெறுவதற்கும்  416-240-0078 என்ற இலக்கத்தை அழைக்கவும். 

ஊடக விசாரணைகளுக்கு: பிரகல் திரு (416) 727 3430