Sep 13

முச்சக்கர வண்டிச் சாரதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை – பிரதேச சபை முன்றலில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பில் கோறளைப் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரி இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கறுவாக்கேணி பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் பிரதேச மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் ஐக்கிய தேசிய கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

10.07.2017 அன்று வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சுற்று வட்டாரத்திலிருந்து மட்டக்களப்பு பாதை தமிழ் தரப்பினர் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை பயன்படுத்த முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது

கூட்டம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கோறளைப்பற்று பிரதேச சபை கூட்டத்தின் தீர்மானத்தினை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.