Apr 10

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னையின் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் புதன்கிழமை, (ஏப்ரல் 12) நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பரில் இறந்ததை அடுத்து காலியான இந்தத் தொகுதியில், அதிமுகவின் பிளவுண்ட இரு அணிகள் மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போது, அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி வேட்பாளரான டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்குகளைப் பெற வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், வருமான வரித்துறையினர் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

ஏப்ரல் 7-ஆம் தேதி வரை, ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், 35 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆணையம் கூறியுள்ளது. பணம் தவிர, விளக்கு, டி-ஷர்டுகள், சில்வர் தட்டுகள், மொபைல் போன், சேலை உள்ளிட்ட பொருட்களும் விநியோகத்துக்காக வைக்கப்பட்டிருந்தது கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் கிடைத்த தகவல்களும் தேர்தல் ஆணையத்துடன் பகிரப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

விஜயபாஸ்கரின் கணக்காளரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு காகிதத்தில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க, பல்வேறு அரசியல்வாதிகளுக்கு 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான விவரங்கள் இடம் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரிடமிருந்து ரூ5 கோடி கைப்பற்றப்பட்டது. 89 கோடி ரூபாய் விநியோகிக்க யார்யாரிடமிருந்து கொடுக்கப்பட்டது என்ற பட்டியல், எம்எல்ஏ விடுதியில் விஜயபாஸ்கரின் அறையிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தொடர்பான தகவல்கள், ஆவணங்கள் குறித்து தேர்தல் ஆணையம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது எனத் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை, நியாயமாக தேர்தல் நடைபெறுவதற்கு உகந்ததாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதாகவும், அதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்த்தால் ஏற்பட்ட தாக்கம் மறைந்து, தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்படும் நேரத்தைக் கவனத்தில் கொண்டு அடுத்த தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அதிமுக (அம்மா ) வேட்பாளர் டிடிவி தினகரன், இது ஜனநாயகப் படுகொலை என்று தெரிவித்துள்ளார். தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என்றும், அதிமுகவை அழிக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவால் 500 ஓட்டுக்கள் கூட வாங்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பணம், பரிசுப் பொருட்களைக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கும் நிலை ஏற்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.