Sep 13

அறுபது நாட்களைத் தீர்வின்றித் தொடரும் மக்கள் போராட்டம்

புத்தூர் மேற்கில் கலைமதி மக்கள் மண்டப முன்றலில் 62 நாட்களுக்கு மேலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்களை அகற்றக் கோரிய தொடர் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகப் போராட்டமானது வடக்கு மாகாண சபையினால் இதுவரை எவ்வித தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தொடர்கின்றது.

அதில் ஈடுபட்டு வரும் மக்கள் இப் போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு இதுவரை க. சிவாஜிலிங்கம் ஒருவரைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாண சபை உறுப்பினரோ வருகை தரவில்லை என்றும், ஏன்? சுவிஸ் குமாரைக் காப்பாற்ற ஓடோடிப்போன ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திருமதி விஜயகலா மகேஸ்வரனோ, தமிழர் அரசின் தலைவராக விளம்பரப்படுத்தப்பட்டு முடிசூட்டப்பட்ட வட மாகாணத்தின் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனோ, அதன் எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராஜாவோ இதுவரை தங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்றும், ஐ.நா., அமெரிக்கா தலையிட்டுத் தமிழருக்குத் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என ஜெனிவா வரை செல்பவர்கள் தம்மால் மிக இலகுவாகத் தீர்க்கப்படக்கூடிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துப் போராடும் தம்மைப் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்து, சொகுசு வாழ்வை அனுபவிக்க வைத்த மக்களின் கோரிக்கையைச் செவிமடுக்கத் தயாராயில்லாமல் இருப்பது தமக்குப் பெரிதும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.