Sep 13

ஈஸ்ட் யோர்க்கில் கத்திக்குத்து: ஒருவர் உயிராபத்தான நிலையில்

ஈஸ்ட் யோர்க் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதான வீதி மற்றும் டாண்ஃபோர்த் அவனி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்று்ளளது.

தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, குறித்த அந்த நபர், அந்த கட்டிடத்தின் வரவேற்பு பகுதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த கட்டிடத்தின் பின்பகுதியில் வைத்தே அவர் கத்தியால் குத்தப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கானவரின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்களோ, சந்தேக நபர் குறித்த தகவல்களோ வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.