Sep 13

இர்மா புயலால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும்.

இர்மா புயல்காரணமாக கரீபியன் தீவுகளில் சிக்குண்டு பாதிப்புகளை எதிர்நோக்கிய கனேடியர்கள் தொடர்பில் தனது கவலை வெளியிட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ரொரன்ரோவில் இருந்து இணைய காணொளி மாநாடு ஊடாக விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிக்குண்டுள்ள கனேடியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவற்கு அரசாங்கம் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அதனை நிறைவேற்றும் வரையில் தனிப்பட்ட ரீதியில் தானும் ஓயப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்குண்டுள்ள அனைத்து கனேடியர்களையும் மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கு அரசாங்கம் மிக கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் கனேடிய மத்திய அரசாங்கம் மிகவும் தாமதாக செயற்படுவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஃபிறீலான்ட் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வார இறுதியில் சுமார் 390 பேர் கனடாவுக்க அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் வர்த்தக வானூர்திகள் மூலம் மேலும் பலர் அழைத்துவரப்பட உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.