Apr 09

சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை

சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தே காரணம் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில் சிரியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தரப்பில், சிரியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன குண்டுகளை வீசுதல் உள்ளிட்ட தாக்குதல்கள் இனி நடக்கக் கூடாது என்பதற்காக சிரியாவின் மீது அமெரிக்கா சிரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் நேற்று அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதல் வெற்றியடைந்ததாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 4-ம் தேதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது அரசுப் படை போர் விமானங்கள் ரசாயன வாயு குண்டுகளை வீசியது. இதில் 11 குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். ஆனால் நாங்கள் ரசாயன குண்டுகளை வீசவில்லை, கிளர்ச்சிக் குழுக்களே இந்த தாக்குதலை நடத்தின என்று அதிபர் ஆசாத் வாதிட்டு வருகிறார்.

இந்தப் பின்னணியில் ரசாயன வாயு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின்படி அந்நாட்டு கடற்படை நேற்று சிரியா மீது அதிநவீன ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

மத்திய தரைக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ரோஸ், யு.எஸ்.எஸ். போர்ட்டன் போர்க் கப்பல்களில் இருந்து சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படைத் தளத்தை குறிவைத்து 59 டோமாஹாக் ஏவுகணைகள் வீசப் பட்டன. இதில் 6 வீரர்கள், 4 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். சிரியா விமானப் படையின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன.