Apr 08

சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு முக்கியத்துவ விஜயம்

 அமெரிக்காவுக்கு முக்கியத்துவம்  மிக்க விஜயத்தை மேற்கொண்டு சென்ற சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்  நேற்று  வியாழக்கிழமை  அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பை புளோரிடா மாநிலத்திலுள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 அவர்கள் இருவரும்  மார் ஏ லாகோ  மாலை போசனத்தை அருந்தினர். வட கொரியாவின் அணுசக்தி பரிசோதனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க அந்நாட்டின் நட்பு நாடான  சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளார்.

 இந்த சந்திப்பின் போது   சீன ஜனாதிபதிக்கும் தனக்குமிடையே நட்புறவு காணப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.அவர்   கடந்த வருடம் சீனா அமெரிக்காவை பலவந்தப்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 அத்துடன் அவர் தேர்தல் பிரசார காலத்தில் சீனா தொடர்பில் குறிப்பிடுகையில்,   பாரிய வர்த்தக பற்றாக்குறை நிலை மற்றும் வேலைவாய்ப்புகளிலான இழப்புகள் குறித்து இனிமேலும் சகிப்புத்தன்மை கடைபிடிக்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தார்.

 ஆனால் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாலை விருந்துப்சாரத்தின் போது  டொனால்ட் ட்ரம்ப் சீனத் தலைவருக்கு இன்முகத்துடன் வரவேற்பளித்தார்.

மேற்படி  விருந்துபசார நிகழ்வில்  அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் மற்றும்  சீன முதல் பெண்மணி பெங் லியுவான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 இதன்போது சீனாவுக்கு இந்த வருடத்தில் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறுஸி ஜின்பிங்கால் விடுக்கப்பட்ட அழைப்பை  டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். 


இந்நிலையில் சீனாவின் தென் சீனக் கடல் தொடர்பான கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில ஆர்ப்பாட்டக்காரர்கள்  புளோரிடா மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற  சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம்  தொடர்பான  பரபரப்பு  சிரியா மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் விவகாரத்தால் தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.