Mar 02

அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு விரைவில்: மஹிந்த அமரவீர

நிறைவேற்று ஜனாதிபதி முறை அடங்கலான சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவுக்கு வழங்க இருப்பதாக ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டு நலனுக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க தயார் என்று குறிப்பிட்ட அவர், யாப்பு திருத்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளின் நகர்வுக்கேற்ப இது முடிவாகும் எனவும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் யாப்புத் திருத்தம் என்பன தொடர்பான சு.க நிலைப்பாடு குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக ஒழிக்கக் கூடாது என்பதோடு சர்வஜனவாக்கெடுப்பிற்கு செல்லாத திருத்தங்களே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சு.க வின் நிலைப்பாடாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். ஆனால் அவர் கூறுவதோ நான் சொல்வதோ அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. ஜனாதிபதி சொல்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அவர் அரசின் நிலைப்பாட்டை வெளியிடுவார்.