Sep 06

கனவுகள் கலையும் போது உடைந்து போகாதீர்கள் கடந்து போங்கள்!

- யாழினி வளன்

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு வாழ்க்கையில் இருக்கிறது. அந்தக் கனவுகளே நம் கை பிடித்து முள்ளையும் கல்லையும் தாண்டி தோல்வியில் விழுந்து எழுந்து கற்று சில பாடங்கள் சொல்லித் தந்து நம்மை வெற்றியின் உயரத்திற்கு இழுத்துச் செல்வது. ஒவ்வொரு முறை நாம் விழும்போதும் நம்மை பந்து போல எழச்சொல்லி நம்மை உந்துவது நமக்குள் மவுனமாய் இசைத்துக் கொண்டிருக்கும் நம் கனவுகளே.

கனவுகள் இல்லாத மனிதனும் உண்டா உலகிலே. கனவுகள் இல்லாத மாணவன் உண்டோ. சரி இப்படி எல்லோருக்குள்ளும் கட்டாயம் இருக்க்கின்றது என்று சொல்லப்படும் கனவுகள் என்று பிறக்கின்றன. எங்கிருந்து தோன்றுகின்றன என யோசித்துப் பார்க்கிறேன்.

அலுவலகம் சென்று பையோடு திரும்பி வரும் தந்தையைக் கண்டவுடன் மகனுக்கும் பள்ளி செல்லும் முன்னே அலுவலகம் செல்லும் ஆசை வருகிறது. பையைத் தோளில் போட்டு நடப்பது போல பாவனை செய்கிறது குழந்தை.பள்ளி சென்றதும் டீச்சர் பாடம் நடத்தும் எழிலைக் கண்டதும் தனக்கும் டீச்சர் ஆகத் தோன்றுகிறது. கையில் கம்பை எடுத்து பாவனை செய்யத் தொடங்குகிறான்.

தெருவில் மிடுக்காக நடக்கும் காவல் அதிகாரியை பார்க்கிறான். ஆகா எல்லாரும் பயம் கொள்கிறார்களே அவரைப் போல ஆனாலென்ன என்று இல்லாத மீசையை முறுக்கிறான் சிறுவன். ஒரு நாள் வீட்டிற்கு வரும் எலெக்ட்ரிசியன் எதையெல்லாமோ எளிதாக கழற்றி மாற்றுவதை ஆச்சரியமாக பார்க்கும் அவன் தானும் எலக்ட்ரிக் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அந்த நொடியில் பல்ப் போல அவனுள் எரியத் தொடங்கும்.

பின்னொரு நாள் அப்பாவோடு மெக்கானிக் கடைக்கு செல்லும் போது மெக்கானிக் வேலை செய்பவர் சுழன்று சுழன்று செய்யும் வேலையை என்ன என்று தெரியாமலே ஆ வண்டியை கழற்றுறாரே இது ரொம்ப நல்லா இருக்கே என அவனுக்குள் ஒரு மெக்கானிக் கனவு துளி சிறு ஒளியாய் எரியத் தொடங்கும். தொலைக்காட்சியில் அலை பரப்பும் தலை முடியோடு உரக்க பேசி சண்டையிடும் கதாநாயகனைக் கண்டதும் தன்னை அவன் போல பாவித்து தலையைக் குலைத்து விட்டு நடக்கத் துவங்குகிறான் வளர் பருவத்தில்.

அந்தக் காலத்தில் இப்படித் தான் கனவுகள் உருவாகின சில பிஞ்சு இதயங்களில். சில தருணங்களில் சில மனதுக்குள் சில்லென்று உதயமான இப்படியான சின்ன சின்ன கனவுகள் யாராலும் திணிக்கப்படமால் வெகு இயல்பாய் இயற்கையான சுக பிரசவத்தைப் போல. இந்தக் காலத்தில் குழந்தைகள் மனதில் முளைக்கும் கனவுகள்? இப்படியானது தானா? அவை முளைத்தால் தானே? எங்க நாம் தான் அவங்க கனவுகளை முளைக்க விடுவதில்லையே. அதற்குத் தேவையான காலத்தைக் கொடுப்பதில்லையே .

அதற்குள் நம் மனதில் பதுங்கி இருக்கும் ஆசைச் செடியை எடுத்து அவர்கள் கனவு என பெயரிட்டு அவர்கள் மனதில் நட்டு விடுகிறோம். அதையே அவர்களையும் உருப்போட்டு சொல்லவும் வைத்து விடுகிறோம். நான் இதுவாக விரும்புகிறேன் என அவனுக்குள் இயற்கையாய் மழையென துளி துளியாய் சேர வேண்டிய கனவுகளை டேய் கண்ணா நீ டாக்டர் ஆகனும்டா என்று சொல்லி சொல்லி கனவுகளை மோட்டார் பம்ப் தண்ணிப் போல அடிச்சுப் பீச்சுகிறீர்கள் அவர்கள் மனதில். என்னடா டாக்டர் னு சொல்றேன் னு பாக்கறீங்களா பெரும்பாலான பெற்றோர்களுக்கு இதன் மேல் தானே மோகம். படித்த, படிக்காத எல்லா பெற்றோர்களும் இதில் அடக்கம்.

கனவுகளை மெல்ல மெல்ல மெல்ல மலர விடுங்கள், வாசம் பரப்பும் மலர்களை போல. கனவுகளை கனவுகளாக கனிய விடுங்கள் மெல்ல மெல்ல மரத்தில் தானாகவே பழுக்கும் பழங்களை போல. தன் பழத்தின் ருசி எப்போதும் கல்போட்டு பழுக்க வைக்கும் பழங்களைவிட ஆயிரம் மடங்கு அதிகம் என நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கனவுகளைத் திணிக்காமல் அவர்களின் கனவுகளைக் கேட்டு அவர்களை அணைத்துக் கொள்ளுங்கள். அது எதுவாக இருந்தாலும் ஆட்டோ ஓட்டுவேன் என்று சொன்னாலும் சரி நான் சமையல் காரன் ஆவேன் என்றாலும் சரி விமானம் ஓட்டுவேன் என்றாலும் சரி சாகசம் செய்வேன் என்றாலும் சரி. எல்லாம் ஒவ்வொரு வகையிலும் சிறப்பே. உங்கள் வழியில் அவர்களைத் தரதரவென இழுக்கவும் செய்யாதீர்கள். அவர்கள் வழியில் எப்படியோ போவென்று விட்டும் விடாதீர்கள். அவர்கள் விரும்பும் வழியில் அவர்கள் கை பிடித்துக் கொள்ளுங்கள் கெட்டியாக. நிச்சயம் அவர்கள் போவார்கள் உயரங்கள்.

கனவுகளின் பாதையில் வரும் முட்களை எடுத்துக் போடச் சொல்லி கொடுங்கள். முட்கள் குத்தும் முன் அல்ல. குத்திய பின் ஏனென்றால் வலி தான் வெற்றியின் ரகசியம் என அந்த முட்கள் சொல்லி செல்லட்டும் உங்கள் குழந்தைகளிடம். கற்கள் இல்லாத பாதையைக் கட்டாயம் காட்ட வேண்டாம். கற்கள் குத்திய பாதங்கள் வலிமையானது. உங்கள் குழந்தைகளின் பாதங்கள் வலியதாகட்டும்.

அடைக்கப்படாத குறுக்கீடுகள் இல்லாத நேர்வழி பாதைகள் வேண்டாம். உன் குழந்தையின் பாதைகள் அடைக்கப்படட்டும் இன்னொரு கதவு உண்டென்று சொல்லிக் கொடுக்கட்டும். தோல்விகள் ஏமாற்றம் எல்லாவற்றையும் தாண்டி வர சொல்லிக் கொடுங்கள்.

மந்திரமென பெற்றோரும் ஆசிரியர்களும் உருப்போடும் மதிப்பெண் என்ற மகுடிக்கு மயங்கி அவர்கள் ஆடி ஆடி தங்களை இழக்க வேண்டாம். கற்றல் இனிதாக இசையைப் போல அவர்களுக்குள் நிகழட்டும், ஒரு இடியைப் போல அவர்களுக்குள் இறங்க அல்ல. பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், டியூஷன் வாத்தியார், பொதுத் தேர்வு, மதிப்பெண், என எல்லாரும் அவர்களை இறுக்கி அது தான் வாழ்வே என கசக்க வேண்டாம் அந்தப் பிஞ்சுகளை. மதிப்பெண் என்ற சூனிய சுழிகளுக்குள் சிக்கிப் பாழாக வேண்டாம் நம் குழந்தையின் எதிர்காலங்கள். மதிப்பெண்கள் சில உயிர்களின் முடிவுரை எழுதிட வேண்டாம்.

உழைத்தும் அவரர்களின் கனவுகள் கலையும் போது உடைந்து போக வேண்டாம். கடந்து போகட்டும் அவர்கள் நம் துணையோடு.. மதிப்பெண்கள் குறையும் போது இப்படி ஆயிடுச்சே என்ற அம்மாவின் புலம்பலோ அல்லது உச் கொட்டியபடி அதிகம் வரும் னு நினச்சேன் என உறுமும் அப்பாவும் என்ன இவ்வளவு தானா என சொல்லும் ஊரும் இனி வேண்டாம் . நீ நல்லா தான் படிச்சேடா .. என்ன செய்ய .. ஒன்னும் இல்லமா... போகட்டும்.. என்று சொல்லும் அம்மாவின் மடியில் குழந்தை உதிர்க்கும் கண்ணீரில் கரைந்து போகட்டும் அந்த ஏமாற்றங்கள். சரி விடுடா பாத்துக்கலாம் என்ற அப்பாவின் அன்பான கையணைப்புக்குள் அவர்கள் பாதுகாப்பை உணர்ந்து புது உலகம் காணட்டும். கனவுகளில் கரைந்த அனிதாவின் கண்ணீரின் ஈர துளிகளில் நனைந்து.. டாக்டர் கனவுகளை நானும் கொண்டிருந்த நினைவுகளில் எழுந்து!