Apr 07

புத்தர் உங்களை மன்னிப்பாராக

ஜப்பானிய கலைஞர் யோன்ஜி இனாமுரா வண்டுகளை வைத்து புத்தரின் உருவத்தை வடித்திருக்கிறார்! 6 ஆண்டுகள் பல்வேறு விதமான வண்டுகளைச் சேகரித்து, புத்தர் சிலையை உருவாக்கியிருக்கிறார். இவர் வசித்த பகுதியில் பூச்சிகளும் வண்டுகளும் ஏராளமாக இருந்தன. 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வண்டுகளைச் சேகரிப்பதைப் பொழுது போக்காக வைத்திருந்தார். 1970-ம் ஆண்டு தன்னிடமிருந்த 5 ஆயிரம் வண்டுகளை வைத்து, 10 மாதங்களில் சாமுராய் உருவத்தைச் செய்து முடித்தார். பலரும் ஆச்சரியப்பட்டுப் பாராட்டினர். சிலர் வண்டுகளைக் கொன்று கலையை உருவாக்குவதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால் இவர் விமர்சனத்தைப் பொருட்படுத்தவில்லை. இரண்டே ஆண்டுகளில் 5 அடி உயர போதிச்சத்துவரை வண்டுகளால் உருவாக்கிவிட்டார். அதற்குப் பிறகு 6 ஆண்டுகளில் 20 ஆயிரம் வண்டுகளைச் சேகரித்து புத்தரைச் செய்து முடித்தார். 

சாமுராய், போதிச்சத்துவரை விட புத்தர் மிக நேர்த்தியாக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குநர், வண்டு புத்தரைக் கண்டுபிடித்தார். 

யோன்ஜியின் அனுமதியோடு இடாகுரா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்தார். கடந்த ஆண்டு 98 வயதில் மறைந்துபோன யோன்ஜி, கடைசிவரை வண்டுகளை வைத்து ஏன் உருவங்களைச் செய்தார் என்ற காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை.