Mar 02

புதுக்குடியிருப்பு காணி கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்: அரசாங்க அதிபர் அறிவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவதுடன் நாளை முதற்கட்ட காணி விடுவிப்பு இடம்பெறும் என முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக் குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே நாளை முதல் இக்காணிகளை படிப்படியாக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபரை தினகரன் சார்பில் சந்தித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

"படையினர் வசமிருந்த முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்புலவு நிலக்குடியிருப்பு காணிகள் முழுவதுமாக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 42 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன் இதனை விமானப்படையினரே இதுவரை காலமும் தம்வசம் வைத்திருந்தனர்.

புதுக்குடியிருப்பில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அரசாங்கம் இக்காணிகளைப் படிப்படியாக விடுவிக்கத் தீர்மானித்துள்ளது.

மூன்று கட்டங்களாக இந்த காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளதுடன் நாளை 4ம் திகதி முதற்கட்ட காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளது. அடுத்து 3 மாத காலத்திலும் அதற்கடுத்து 6 மாதகாலத்திலும் இந்த காணி விடுவிப்பு இடம்பெறும்.

காணிகள் விடுவிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதா? என அரசாங்க அதிபரிடம் வினவியபோது பெரும்பாலும் அம்மக்கள் நாளை மறுதினம் தமது போராட்டத்தைக் கைவிடுவர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.