Apr 07

தொடரும் மக்கள் போராட்டங்கள்! அரசாங்கத்தின் மௌனமும்; தமிழரசின் தடுமாற்றமும்!

- சஞ்சையன் -

இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் காணமல்போனவர்கள் குறித்து அரசாங்கமே பதிலளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் குழு, வடபகுதிக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டது. குறிப்பாக மக்கள் போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கும் அவர்கள் நேரில் சென்றிருந்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் அவர்கள் பார்வையிட்டார்கள். அதன்போதே இந்தக் கருத்து மன்னிப்புச் சபையின் பிரதிநிதியால் முன்வைக்கப்பட்டது.

வடபகுதியில் இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் ஒன்றரை மாதங்களையும் தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், அரச தரப்பிலிருந்து உரிய பதில் இதுவரையில் வரவில்லை. அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றது. வடக்குக்கு வரும் அமைச்சர்கள் கால அவகாசத்தைக் கேட்கின்றார்களே தவிர, மக்களின் கேள்விக்குப் பதிலளிக்கத் தயாராகவில்லை. இந்த நிலையில்தான் சர்வதெச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி தெரிவித்திருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போது மக்கள் போராட்டங்களால் நிறைந்துபோயுள்ளன. வவுனியாவில் ஆரம்பித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களும், கேப்பாப்புலவில் தொடங்கிய காணி மீட்புப் போராடட்டங்களும் முடிவற்றவகையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தொடர்ந்துகொண்டிருப்பதுடன் பரவலாகியுமிருக்கின்றது. இதற்கு மேலாக வேலையற்ற பட்டதாரி மாணவர்களின் போராட்டங்களும் வடக்கு கிழக்கை போராட்ட பூமியாக்கியிருக்கின்றது.

தொடரும் இந்தப் போராட்டங்கள் அரசாங்கத்திடம் நீதியை அல்லது தீர்வைக் கேட்டு நிற்கின்றன. அரச தரப்பிலிருந்து இதற்கு உரிய பிரதிபலிப்புக்கள் எதனையும் காணமுடியவில்லை. பாரம்பரிய தமிழ் அரசியல் தலைமைகளை ஒதுக்கிவிட்டு மக்களின் தன்னெழுச்சியில் ஆரம்பமான இந்தப் போராட்டங்கள் வட, கிழக்கில் புதிதொரு அரசியல் சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் அசியல் தலைமைகள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டுவதையும், போராட்டம் தொடர்ந்தால் தாமும் இணைந்துகொள்ளப்போவதாக முழங்கிவிட்டுச் செல்வதயும் காணமுடிகின்றது.

போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் நிறைவடையும் நிலையிலும், தமிழ் மக்களை அழுத்தும் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்பதை இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் பல மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வழிநடத்தப்பட்ட போராட்டங்களாகவே இருந்துள்ளன. சில மணி நேரத்துக்கு நடைபெறும் இந்தப் போராட்டங்களில் ஒரே முகங்களையே மீண்டும் மீண்டும் காணமுடிந்திருக்கின்றது. இது ஒரு வெகுஜனப் போராட்டமாக எழுச்சிபெறவில்லை. வெறுமனே ஒரு அடையாள எதிர்ப்புப் போராட்டமாக பதிவு செய்யப்பட்டது. மக்களைப் போராட்டங்களில் குவிக்கக்கூடிய வல்லமையை அரசியல் தலைமைகள் கொண்டிருக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ காலத்தில் காணப்பட்ட அச்ச நிலையும் இதற்குக் காரணம். போராட்டக்காரர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்களும் அப்போது இடம் பெற்றிருக்கின்றன. வலிகாமத்தில் நில மீட்புப் போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற போது இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெற்றது நினைவிருக்கலாம். ஆட்சி மாற்றத்தின் பின்னர்  இந்த அச்சநிலை பெருமளவுக்கு மறைந்துவிட்டது என்பது உண்மை. அச்சமின்றி போராட்டங்களை நடத்தக்கூடியதொரு நிலை ஏற்பட்டது. இருந்தாலும், அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் அதிகளவு மக்கள் கூட்டத்தைக் காணமுடியவில்லை. அரசியல் தலைமைகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருப்பது மட்டுமன்றி, போராட்டகளில் மக்கள் நம்பிக்கை வைக்காதததும் இதற்குக் காரணம் எனச் சொல்லலாம்.

தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு மக்கள் எழுச்சியுடன் இந்த நிலை மாற்றமடைந்தது. அரசியல் தலைமைகளை நம்மாமல் மக்காளால், குறிப்பாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது இருந்தது. இந்தப் போராட்டம் ஒரு வெகுஜனப் போராட்டமாக விரிவடைந்த போது இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரித்தது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்கவேண்டிய நிர்பந்தம் அரசியல் தலைமைகளுக்கு ஏற்பட்டது. மாநில முதலமைச்சர் டில்லி சென்று மத்திய அரசுடன் பேச நிர்ப்பந்திக்கப்பட்டார். சமூக ஊடகங்கள் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கை வகித்தன. இந்தப் போராட்டத்தின் எதிரொலியை இலங்கையிலும் காணமுடிந்தது.

இதன்தொடர்ச்சியாகவே வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஆரம்பமானது. முதல்முறையாக அரசியல் தலைவர்களை பின்னால் நிறுத்திவிட்டு மக்களால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் தலைமையில் மக்கள் கொண்டிருந்த அதிருப்தியை இவற்றில் நேரில் காண முடிந்தது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன நேரில் வரும் அளவுக்கு அந்தப் போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இருந்தபோதிலும், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவர் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் பேச்சுக்குச் சென்ற பிரதிநிதிகள் ஏமாற்றப்பட்டனர்.

இதனால்தான் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகியிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை அரசாங்கம் முன்வைக்கப்போகின்றது என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கு தனியான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு ஜெனீவா பரிந்துரைகளில் சிபார்சு செய்யப்பட்டுள்ள போதிலும், அதற்கான செயற்பாடுகளைக் காண முடியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயலகம் ஒன்று அமைக்கப்பட்டால், அதற்கு பெருமளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்படும். இராணுவத்தினரை விசாரணைக்குள்ளாக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இராணுவத்தை எந்த வகையிலும்  விசாரணைக்கு உள்ளாக்குவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கைளித்த மகஜர் ஒன்றில், வடக்கில் தொடாரும் போராட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டோரின் துன்பங்கள் தொடர்பாக முக்கியமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு அவர் கொண்டுவந்திருக்கின்றார். இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், காணாமல்போனோர் குறித்த அலுவலகம் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார். இதன்மூலமாகவே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கேள்விகளுக்குப் பதிலைக்கொடுக்க முடியும் என்பதுதான் வடக்கு முதல்வரின் கருத்து.

காணாமல் படையினரை எந்த வகையிலும் விசாரணைக்குள்ளாக்குதலல்லை என்பதுதான் ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாடு. ஜனாதிபதி மட்டுமன்றி, பிரதமர் உட்பட அரசின் முக்கியஸ்த்தர்கள் இதனைப் பகிரங்கமாகவே சொல்லிவருகின்றார்கள். இதனால், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை முடிவுக்கு வரப்போவதில்லை. இதனால், இதற்கான மக்கள் போராட்டம் எந்த எல்லை வரை செல்லும் என்ற கேள்வி இதனால் எழுகிறது.

காணி மீட்புப் போராட்டத்துக்கு சில தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக கேப்பாப்பிலவு பகுதி மே நடுப்பகுதியில் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனைவிட, விடுவிக்கப்படாத மேலும் பல பகுதிகள் உள்ளன. இதற்கான மக்கள் போராட்டங்கள் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழுத்தததைக் கொடுத்திருக்கின்றது. அரசுத் தலைமையுடன் கடுமையாகப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கும் மேலாக போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு வந்து மக்களுடன் அடையாளமாக இருந்துவிட்டுச் செல்ல வேண்டிய நிலைமையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. போர் முடிந்து எட்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும், காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமலிருப்பது நல்லிணக்கச் செயன்முறையில் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட வேண்டும்.

இந்த மக்கள் போராட்டங்களை  வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல், அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை காதில் வாங்கிக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை. மக்கள் போராட்டங்களை நேரில் வந்து பார்த்துச்சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்களான மாவை சேனாதிராஜாவோ அல்லது எம்.ஏ.சுமந்திரனோ அரசுக்கு எதிராக சுட்டுவிரலை நீட்டுவதற்குத் தயாராகவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது. இந்தப் போராட்டங்களினால் அம்பலமாவது அரசாங்கம் மட்டுமல்ல! தமிழரசுக் கட்சியின் தலைமையும்தான்.!!