Sep 01

மக்களின் இதயங்களில் ராணியாக வலம் வரும் இளவரசி டயானாவின் அறிந்திராத பக்கங்கள்!

ஒருவரை கவர்வதற்கு நமக்கு என்னவெல்லாம் தகுதிகள் இருக்க வேண்டும் என்பது யாராலும் வகுத்து சொல்ல முடியாது ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பு வெறுப்புகள் இருப்பதுண்டு.

இளவரசி டயானா, பார்ப்போர் எல்லாருமே தன்வீட்டு பிள்ளை என்று நினைக்கும் அளவிற்கு ஒரு அந்நியோன்னியமான முகம், அரச குடும்பத்தின் இளவரசி என்றாலும் ஆடம்பரம் இல்லாத அவரது குணம், அவர் மறைந்து 20 ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் மனதில் இன்றளவும் வாழ்கிறார்.

இந்நிலையில், அவர் தொடர்பான ஒரு சிறு மீட்டல்...

அரச குடும்பம்

எலிஸபெத் மகாராணியின் செயலாளரைத் தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

அக்காவைப் பார்க்கச் செல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு.

தவிர டயானாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.

இளவரசர் சார்ள்ஸ் டயானாவை பார்த்தது அப்படி ஒரு விழாவில் தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த சார்ள்ஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டார் டயானா.

காதல் திருமணம்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்ள்ஸ், டயானாவின் காதல் திருமணம் தான். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான டயானா மகன் சார்ள்ஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார்.

டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்? எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னரே பிரபலமாகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.

உயர்ந்த மதிப்பு

டயானா சார்ள்ஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.

பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு. ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால் சிறுவர் பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார்.

ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது மதிப்பு வெகுவாக ஏறத் தொடங்கியது.

அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவது தான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வெளியானது.

குழந்தைகள்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள் தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆனால், தன் மகன்கள் விடயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச் சென்று தான் படிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போது தான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.

வருத்தத்தில் டயானா

சார்ள்ஸுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்து மிகவும் நொந்து தான் போனார் டயானா. இந்தப் பிரச்சினையால் சில முறை தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

அதோடு எதைச் சாப்பிட்டாலும் உடனே ஒவ்வாமை ஏற்படுகின்ற நோயும் தாக்கியது. மிகவும் மன வருத்தத்துடனேயே காணப்பட்டார். தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.

மக்களின் ராணி

குழந்தை ஹாரி, முன்பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்ள்ஸ், டயானா விரிசல் பகிரங்கமானது. இது குறித்து எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில், ‘‘நான் ராணியாக விரும்புகிறேன். ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல!

மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்! என்று டயானா கூறியது மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டது.

விவாகரத்து

டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை.

அதுபோல கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை சார்ள்ஸூம் பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்.

சார்ள்ஸ், டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்து தான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, 1996 ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது.

மரணத்தின் வாயில்

இதற்கு பிறகு அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன் டயானாவுக்கு ஏற்பட்ட பழக்கம் புதிய சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது.

குறிப்பாக டயானாவின் மரணத்திற்கு இது தான் வழி வகுக்கும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

பாரீஸில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் சென்று கொண்டிருந்தார்கள்.

விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிகைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார்.

விளைவு கார் கோர விபத்தில் சிக்கியது. டோடியும் பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட டயானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே டயானா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மர்மங்கள்

கார் ஓட்டுநர் போதையில் இருந்தார், டயானா பயணித்த கார் மிகவும் பழைய கார் அதில் 30 கி.மீ வேகமாக பயணிக்க கூடாது. அதில் 150 கி.மீ வேகத்தில் பயணித்தது தான் விபத்திற்கு காரணம், டயானா அரசு குடும்ப இரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தார்.

அதோடு, அவர் விவாகரத்து செய்தது அரசு குடும்பத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. எனவே அவரைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது என முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி ஜான் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரது மரணத்தில் பல குழப்பங்கள் நீடித்தாலும் இன்று வரை அனைவரது இதயங்களிலும் மக்களின் ராணியாக வலம் வருகிறார் டயானா.