Apr 06

இலங்கை அரசின் சமநிலையை பாதுகாக்கவே கால அவகாசம்; உருத்திரகுமாரன் பேட்டி

"இலங்கை அரசு தனது ஆட்சியாளர்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.  பலம் மிக்க அரசுகளின் நலன்களுடன் தமது நலன்களை இணைப்பதில் இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் கவனமாக நடந்து கொள்கிறார்கள். இதுவே அரசுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த வித்தையினை மனித உரிமைப் பேரவையில் உள்ள அரசுகளும் இலங்கையும் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்க முடியாது"  எனக் கூறுகின்றார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன்.

கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் ஞாயிறு இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் உருத்திரகுமாரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் இலங்கை குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும்  பின்னணியில் இந்தப் பேட்டியை உருத்திரகுமாரன் வழங்கியுள்ளார். அவரது பேட்டியின் விபரம்:

கேள்வி: ஜெனீவாவில் கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: மனித உரிமைப் பேரவையானது அரசுகள் பலவற்றின் கூட்டான அமைப்பு என்பதனை நாம் முதலில் தெளிவாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அரசுகளின் முடிவுகளில் நீதியும் மனித உரிமை அக்கறையும் முதன்மைப்பங்கு வகிக்காமல் அரசுகளின் பரஸ்பர நலன்களே முதன்மைப்பாத்திரம் வகிக்கும் நிலை இருப்பது கவலைக்குரியது.  இன்றைய அரசியல் உலக ஒழுங்கு நீதியினதும் தர்மத்தினதும் அச்சுகளில் சுழலாமல் நலன்களின் அச்சில் உழல்வது குறித்து தேசியத் தலைவர் அவர்களும் முன்னர் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

மனித உரிமைப்பேரவையில் பலமிக்க அரசுகள் இலங்கை அரசைப் பாதுகாக்க விரும்பின. இலங்கைக்கு தற்போதய ஆட்சி இவ் அரசுகளினால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்பதனையும் நாம் இங்கு கவனத்திற் கொண்டோமானால் மனித உரிமைப்பேரவையின் எந்த நடவடிக்கையும் தற்போதய இலங்கை அரசாங்கத்தைப் பாதிக்காத, பலவீனப்படுத்தாத வகையில் இருப்பதனையே இவ் அரசுகள் விரும்புவதைக் கண்டுகொள்ளலாம். இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டமை இலங்கை அரசாங்கத்தின் சமநிலையைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கொள்ளப்பட வேண்டும். 

கேள்வி: மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 நாடுகளுமே இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளன. உங்களுடைய பிரச்சாரங்கள் எடுபடவில்லை என்பதைத்தானே இது காட்டுகின்றது?

பதில்:. அரசுகளுக்கான ஓர் அவையில் அரசற்ற மக்கள் கூட்டம் தமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு செயற்பட வேண்டிய மார்க்கம் குறித்தே நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். இலங்கை அரசு தனது ஆட்சியாளர்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.  பலம் மிக்க அரசுகளின் நலன்களுடன் தமது நலன்களை இணைப்பதில் இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் கவனமாக நடந்து கொள்கிறார்கள். இதுவே அரசுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது. 

ஆனால் இந்த வித்தையினை மனித உரிமைப் பேரவையில் உள்ள அரசுகளும் இலங்கையும் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்க முடியாது. நாம் எமது தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் இலங்கை அரசு தனது இறுக்கமான இனவாதக்கட்டமைப்பு காரணமாக (னரந வழ வாந சபைனை நவாழெஉசநவiஉ யெவரசந ழக வாந ளவயவந) தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி வழங்காது என்ற கருத்துருவாக்கத்தினை அனைத்துலக அரங்கில் செய்து வருகிறோம். சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கிணையான ஓர் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த 1 மில்லியன் கையெழுத்துப் போராட்டத்தில் உலகமெங்கும் இருந்து 1.6 மில்லியன் மக்கள் பங்குபற்றியிருந்தனர். 

நடந்து முடிந்த மனித உரிமைப் பேரவைக்கூட்டத்தொடரிலும் இலங்கை மீதான அனைத்துலக விசாரணை தேவை என்ற கருத்து மனித உரிமை அமைப்புகளிடையே வலுவாகவே காணப்பட்டது. இலங்கை அரசைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும்வரை நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கேள்வி: கொடுக்கப்பட்ட இரு வருட காலத்துக்குள் பிரேரணையில் சொல்லப்பட்டவைகளை இலங்கை அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

பதில்: இரண்டு வருடங்கள் என்ன இருபது வருடங்கள் காலஅவகாசம் கொடுத்தாலும் இலங்கையின் எந்த ஆட்சியாளர்களும் எந்தவிதமான நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமோ அல்லது தற்போதய மைத்ரி - ரணில் - சந்திரிகா அரசாங்கமோ – எல்லாமே இனவாதம் என்ற குட்டையில் ஊறிய மட்டைகளே. மேலும் நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை ஒரு சில படையினரது வெறும் சில்லறை அத்துமீறல்களோ அல்லது ஒரு சில படைத் தளபதிகளின் அத்துமீறல்களோ அல்ல. இது இலங்கை அரசு திட்டமிட்டு மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு என்பதே உண்மை. இலங்கை அரசு தமிழின அழிப்பை மேற்கொண்டது என்பதனை நேரடியாகக் கூறாவிட்டாலும் ஐ க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அமைபு;புசார் குற்றங்கள் (ளலளவநஅள உசiஅந) என்று இலங்கைப் படையினரின் குற்றச்செயல்களை வர்ணித்ததை நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

கேள்வி: இலங்கை அரசாங்கம் ஜெனீவால பிரேரணைகளை நிறைவேற்றவில்லை என்றால், நீங்கள் செய்யப்போவது என்ன? அதாவது உங்களுடைய அடுத்த கட்டச் செயற்பாடு என்ன?

பதில்: இது குறித்து நாம் விடுத்த பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தில் ஒதுங்கியிருந்து பார்வையாளர்களாய் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்கள் தமது போராட்டத்தைத் தமது கையில் எடுத்து நீதிக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துலக மக்களுடன் இணைந்து செயற்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தச் செயற்பாடுகளை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. 

மனித உரிமைப்பேரவை எமது நீதிக்கான போராட்டத்தில் ஓர் அரங்கு மட்டுமே. இப் போராட்டத்தை நாம் நாடுகள் தழுவியரீதியில் விரிவாக்கம் செய்வோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் திட்டங்களில் இரண்டினை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஓன்று இலங்கை அரசின் செயற்பாடுகளைக் கண்காணித்து அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக கண்காணிப்புக்குழுவின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நாம் நீடித்துள்ளோம். மற்றது சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள், செயற்பாட்டாளர்களைக் கொண்ட செயலணியொன்றினை அமைத்து சிறிலங்கா அரசிற்கும் சிறிலங்கா தரப்பில் இனஅழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களுடனான சட்ட நடவடிக்கைளில் மேற்குலக நாடுகளில் ஈடுபட இருக்கிறோம்.

நாம் இவற்றைச் செய்து கொண்டிருக்கும்போது இலங்கையால் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுவும் அம்பலமாகும். இது இலங்கை மீது அனைத்துலக நடவடிக்கை தேவை என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவும். இலங்கை அரசு தான் இழைத்த குற்றத்தில் இருந்து தப்பித்துப்போகத் தமிழ் மக்கள் இடம் கொடுக்கப் போதில்லை.

கேள்வி: இலங்கையின் பொறுப்புக் கூறல் விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

பதில்: குறிப்பிட்ட காலவரையறைக்குள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் விடாமல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரே மேற் கொள்ள வேண்டும். உதாரணமாக 60 நாட்களுக்குள் பயங்கரவாத் தடைச் சட்டத்தை நீக்குதல், போர்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்தல், தமிழ் மக்களின் நிலங்களை மீளக் கையளிப்பது என்பவற்றை 30 நாட்களுக்குள் ஆரம்பித்து 6 மாதங்களுக்குள் நிறைவு செய்தல் போன்ற நடவடிக்கைகளைக் கூறலாம். நாம் அரசுகளுக்கு கையளித்திருந்த வரைபில் இத்தகைய நடவடிக்கைகள் இவ்வருட தீர்மானத்தில் இடம்பெறாததை குறிப்பிட்டிருந்தோம். 

கேள்வி: இலங்கையின் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் வழங்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா? உங்கள் பதிலுக்கு காரணம் என்ன? 

பதில்:இலங்கை அரசு மிக இறுக்கமான பௌத்த இனவாத அரசாக மாற்றமடைந்து பலகாலமாகி விட்டது. இந்த அரசால் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இலங்கை அரசை மறுசீரமைப்புச் செய்யும் முயற்சிகள் எதுவும் இதுவரை வெற்றி பெறவில்லை. இனி வெற்றி பெறப்போவதுமில்லை. இலங்கை அரசு இனவாத அரசாக இறுக்கமடைந்திருப்பதனால் இந்த அரசைத் தலைமை தாங்குவோர் எவராக இருந்தாலும் இனவாதப் போக்குடன்தான் செயற்படுவார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டம்,  P-வுழுஆளு ஒப்பந்தம் எல்லாமே இனவாதப்பூதத்தால் விழுங்கப்பட்டவையே. 

இதனால் இலங்கை அரச கட்டமைப்பில் இருந்து விடுபட்டதொரு நிலையிலேயே தமிழ் மக்கள் தமது தேசியப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியும்.

கேள்வி: நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்ன?

பதில்:நாம் அடிப்படையில் மூன்று தளங்களில் செயற்படுகிறோம். இடைமாறுகாலகட்டத்து நீதி, தேச நிர்மாணம், புவிசார் அரசியல் கரிசனைகளுடனான இராஜதந்திரம் ஆகியவையே இம் மூன்று தளங்கள். 

இடைமாறுகாலகட்டத்து நீதி குறித்த நடவடிக்கைகளை நான் நான்காவது கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுள்ளேன். இலங்கை அரசினைக் கண்காணிக்கவென நாம் நியமித்த நிபுணர்குழுவின் தவணை  நீட்டிக்கப்பட்டமையும் சட்ட நடவடிக்கைகளுக்கான புதிய செயலணிக்குழு அமைக்கப்பட்டமையும் இது சார்ந்த நடவடிக்கைகள்.

எமது தேச நிர்மாண நடவடிக்கைகளை நாம் பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கிய பெரும் செயற்திட்டமாக 2016 ஆம் ஆண்டில் வடிவமைத்துள்ளோம். இத் திட்டங்கள் துறைசார் வல்லுனர்களுடன் நீண்ட கலந்துரையாடல் ஊடாக வடிவமைக்கப்பட்டவை. இதில் உள்ளடங்கும் செயற்திட்டங்களாவன.

1. வெளியீடுகள் - ஆவணக்காப்பகம்,

2. மக்கள் வாக்கெடுப்பு ஆதரவுப் பரப்புரை இயக்கம்,

3. நிலப் பாதுகாப்புத் திட்டம்,

4. உலகத் தமிழர் பல்கலைக்கழகம்,

5. தமிழ்க் கல்வி ஆலோசனைச் சபை,

6. மாவீரர் நினைவகம்,

7. உலகத் தமிழர் வணிக சம்மேளனம்,

8. நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையப் பணிமனைகள் - சென்னை – புதுடில்லி,

9. உலகத் தமிழர் நல்லெண்ணத் தூதுவர்;கள் செயற்திட்டம்,

10. தாயக சுயதொழில் மேம்பாட்டுத் திட்டம், 11. மாவீரர் - போராளிகள் குடும்பத் தொடர்பகம்,

12. இயற்கையைக் காப்போம் செயற்திட்டம்,

13. மனித உரிமைகள் பீடம்,

14. தமிழ் அகதிகள் நலன்பேண் தொடர்பகங்கள்,  

15. பெருவிழாக்கள் - போட்டிகள் நிறைவேற்றகம்.

தொலைநோக்குக் கொண்ட இப் பெரும்பணித் திட்டம் இன்றோ நாளையோ நிறைவேறும் திட்டங்கள் கொண்டது அல்ல. முhறாக இன்றைய நெருக்கடிகளையும் தாங்கியவாறு எமது இனத்தின் இருப்பு பாதுகாக்கப்படும் பணிகள் நடைபெறும் அதேவேளையில் ஏதோ ஒரு வகையில் தேசம் எனும் எமது கோட்பாடும் கனவும் சிதைவுறா வண்ணம்; அத்தேசம் கட்டியெழுப்பப் படவேண்டும் எனும் வேணவாவின் வெளிப்பாடே இப் பெரும்பணித் திட்டமாகும். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பல்வேறு வளங்களைத் திரட்டி அவர்களின் பங்களிப்பினை நெடுங்கால நோக்கில் பிணைத்து வைக்கும் இவ்வகை சிந்தனையை முன்னெடுப்பதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனித்து முன்வந்துள்ளபோதும் அனைத்து தமிழின ஒத்துழைப்புடனும் தான் இவற்றை நாம் நிறைவேற்ற முடியும். 

மூன்றாவது தளமான இராஜதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புவிசார் அரசியல் போக்கையும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் இணைத்து தமிழ் மக்களின் நலன்களையும் உலகில் பலமிக்க அரசுகளின் நலன்களையும் இணைக்கக்கூடிய நிலைமைகளை உருவாக்க முயலும். உலகில் தமிழ் மக்கள் ஒரு வலுமையமாக திரட்சியடையும் போது இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் மேற்குறிப்பிட்டது போல நாம் உலகத் தமிழ் மக்கள் ஒரு வலுமையமாக திரளச் செய்வதில் கூடுதல் அக்கறையுடன் இன்று செயற்பட்டு வருகிறோம்.