Apr 06

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஜி.கே வாசன் தனது ஆதரவை அளித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இன்று (வியாழக்கிழமை) காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தேர்தலில், மதுசூதனனை ஆதரிக்க வேண்டி இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறும்போது, "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தமாகா ஆதரவு அளிக்கிறது. எம்.ஜி.ஆரின் நம்பிக்கை பெற்ற வேட்பாளர் மதுசூதனன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவால் முதல்வராக அடையாளப்படுத்தப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்ததுக்கு தமாகா துணை நிற்கும். தமிழக மக்களால் நல்ல மனிதர் மற்றும் அரசியல் ஆர்ப்பாட்டம் இல்லதவராக ஓ,பன்னீர் செல்வம் பார்க்கப்படுகிறார். தமாகா - அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் இந்தக் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி.

ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன். இந்தக் கூட்டணி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும்" என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலிலாதவின் மறைவை அடுத்து ஆர்.கே நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. சட்டப் பேரவை தேர்தலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்ககாதலால் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தமாகா விலகி தனித்து செயல்பட்டு வருகிறது.

ஆர்.கே, நகர் தேர்தலில் தமாகா யாருக்கு தன்னுடைய ஆதரவை அளிக்கும் என்ற எதிர்பார்த்திருந்த நிலையில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.