Aug 31

அனைத்துத் தரப்பையும் மகிழ்ச்சிப்படுத்திய பிரமாண்டமான தமிழர் தெருவிழா 2017

கனடியத் தமிழர் பேரவை வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் தமிழர் தெருவிழா மூன்றாவது முறையாக கடந்த வாரஇறுதி நாட்களான ஆகஸ்ட் 26 மற்றும் 27 திகதிகளில் கோலாகலமாக நடந்தேறியது.

இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியே நடக்கும் மிகப்பெரிய வீதிக்கொண்டாட்டமான 'தமிழர் தெருவிழா'வில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்து கொண்டு சிறப்பித்தமை உலகெங்கும் ஈழத்தமிழர் வாழும் நாடுகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஒரு தமிழர் கொண்டாட்ட நிகழ்விற்கு, பதவியில் இருக்கும் பிரதமர் வருகை தந்திருப்பது இதுவே முதன்முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விழா நடந்த இடத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருகை தந்தபோது, அவரை ஒரு பிரபல நட்சத்திரம்போலக் கண்டு மக்கள் குதூகலித்து ஆரவாரித்து வரவேற்றனர்.  பிரதமரும் வயது வித்தியாசம் இன்றி அனைவருடனும் கைகுலுக்கி, அரவணைத்து தெருவிழாவினை குதூகலப்படுத்தினார். 

தெருவிழாவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் 155 தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டபோது பயணம் செய்த படகுகளில் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பார்வையிட்டதுடன், அதில் பயணம் செய்திருந்த சிலரையும் சந்தித்தார். மேலும் வர்த்தக அங்காடி ஒன்றிற்குச் சென்று அங்கு நொங்கு, இளநீர் என்பவற்றை அருந்தியும் மகிழ்ந்தார். அவற்றின் பின்னர் பார்வையாளர்களுக்கு உரையாற்றியபோது கனடியப் பிரதமர் தமிழ் சமூகத்தை பெரிதும் பாராட்டினார்.

தன் பேச்சின்போது பிரதமர், "1980ம் ஆண்டுகளிலிருந்து கனடாவிற்கு குடிபெயர ஆரம்பித்து, கனடிய சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்காக குறுகியகாலத்துள் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் தமிழ் மக்களின் பங்களிப்பை அங்கீகரிக்குமுகமாகவும், செழுமை வாய்ந்த தமிழ்க் கலாச்சாரத்தை பாதுகாக்கவுமே கனடிய அரசு ஜனவரி மாதத்தை தமிழர் மரபுத்திங்களாக அங்கீகரித்தது" என தெரிவித்தபோது கூடியிருந்த மக்கள் கரகோஷங்களை எழுப்பி ஆரவாரித்தனர்.  பிரதமர் தொடர்ந்து பேசும்போது, "இங்கும், உலகங்கும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக செய்துவரும் மகத்தான வேலைக்காக நிச்சயமாக நான் கனடியத் தமிழர் பேரவைக்கு நன்றி சொல்ல வேண்டும். தாங்க் யூ சி.ரி.சி.!” என கனடியத் தமிழர் பேரவைக்கு உரத்த குரலில் நன்றி ‌தெரிவித்தார். 

கனடாவின் பூர்வ குடியினர் பிரதிநிதி ஒருவர் ஆசிவழங்கிய பின்னர், ரொறன்ரோவின் மேயரான ஜோன் ரோறி அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட தமிழர் தெருவிழாவிற்கு பிரத‌ம‌ருடன்  மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ரொறன்ரோ காவல்துறையின் தலைவர் என பல்வேறு தரப்பினரும் இரு தினங்களும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் இலங்கையிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், வடமாகாணசபை கவுன்சிலர் இம்மானுவேல் ஆனல்ட் ஆகியோரும் வருகை தந்திருந்தார்கள். பார்வையாளர்களைப் பொறுத்தவரை பெருநகரத்தை அண்டிய பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாகாணங்கள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் இருந்தும் இந்த இலவச நிகழ்வு பலரையும் கவர்ந்திழுத்திருக்கிறது. 

இரு தினங்களும் உணவு அங்காடிகளில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, வேற்றின மக்களும் வரிசையாக நின்று உணவுகளை வாங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தமை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. விழாவில் அமைந்திருந்த இரண்டு மேடைகளிலும் நடந்த கலைநிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான நமது கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய மற்றும் நவீன கலைப்படைப்புக்களைத் தந்து பார்வையாளர்களை குதூகலப்படுத்தினர்.

அத்துடன் பல்கலாச்சாரக்கலைநேரத்தின்போது பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வேற்றினக் கலைஞர்கள் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இவை தவிரவும் தாயகத்தில் நாம் பார்த்து பயணித்து மகிழ்ந்த பழைய கார்களைக் கொண்டிருந்த கண்காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. தாயகத்து மக்களின் நல்வாழ்க்கைக்கு உதவிடும் அங்காடிகளுக்கும் மக்கள் ஆர்வத்துடன் சென்றதுடன், தாயகத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட ‌கைவினைப் பொருட்களையும் பெருமளவில் வாங்கி உதவினர்.

 "தமிழர் தெருவிழாவானது கனடாவின் கண்கவர் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன், தமிழ்க் கலை, பண்பாடு, உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை சிறந்த முறையில் சக கனடியர் மத்தியில் வெளிக்கொண்டுவருவதாயும், தாயகத்துடன் இங்குள்ள மக்களுக்கு உள்ள பிணைப்பினை வலுப்படுத்தும் விதமாகவும் நடத்தப்படுகிறது" என்று கனடிய தமிழர் பேரவையின் தலைவரான டாக்டர் சாந்தகுமார் தெரிவித்தார். ஸ்காபரோவின் மிகப்பெரிய கொண்டாட்டமான விளங்கிவரும் தமிழர் தெருவிழாவில்  இந்த ஆண்டு பார்வையாளர்களாக வந்தவர்களின் தொகை 2,00,000க்கும் அதிகம் என தற்போது கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.