Aug 29

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் வெளியீட்டு தேதி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் உறுதி செய்துள்ளது.

ஐபோன் 8, ஐபோன் 7S, ஐபோன் 7S பிளஸ் மற்றும் சிம் கார்டு வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்ட வந்த நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதே தேதியில் ஆப்பிள் சாதனங்கள் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து வால் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 8 மட்டுமின்றி ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S பிளஸ் போன்களின் விற்பனை அறிமுகமான பத்து நாட்களில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐபோன் 8 ஆண்டுவிழா சிறப்பு எடிஷனாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதுவரை வெளியான ஐபோன்களை விட விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது. ஐபோன் 8 விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 8 புதிய வடிவமைப்பு, இரண்டு அடுக்கு கிளாஸ் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய ஐபோன் 8 சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் 5.8 இன்ச் OLED பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோன்ற திரை சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஐபோன் திரை அளவு தெளிவாக அறியப்படாத நிலையில், இவை திரையை சுற்றி நிச்சயம் மெல்லிய பெசல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 8-இல் வழக்கமான ஹோம் பட்டன் நீக்கப்படும் என்றும், டச் ஐடி சார்ந்து இருவித தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்றில் புதிய டச் ஐடி ஐபோனின் பின்புறம் இருக்கும் ஆப்பிள் லோகோவில் வழங்கப்படலாம் என்றும், மற்றொரு தகவலில் முன்பக்கம் இருக்கும் கிளாஸ்-இன் கீழ் பொறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.