Aug 28

ஆப்பிரிக்காவில் சிலிர்க்க வைக்கும் சிங்க மனிதன்..!

“சிங்கங்களின் சொர்க்கமாக திகழ்ந்த ஆப்பிரிக்க கண்டம், சமீபகாலமாக சிங்கங் களின் நரகமாக மாறிவிட்டது.

காப் பகத்தில் சிங்கங் களுக்கு இழைக்கப் படும் துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பண்ணைகளில் வளர்ந்த பெண் சிங்கங்கள் வலுக்கட்டாயமாக அதிகமுறை கர்ப்பம் தரிக்க வைக்கப்படுகின்றன. குட்டிகள் ஈன்ற ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, தாயிடம் இருந்து பிரித்துவிடுகிறார்கள். காரணம், குட்டிகளுடன் தாய் இருந்தால் அதற்கு மீண்டும் ஒரு முறை கர்ப்பம் தரிக்கும் மனநிலை வராது. பெண் சிங்கங்கள் குட்டிகள் ஈன்று கொடுக்கும் இயந் திரங்களாக மட்டுமே பார்க்கப் படுகின்றன.”

“பெண் சிங்கங்களின் நிலை இப்படி என்றால்... ஆண் சிங்கங்களின் நிலை மிகவும் மோசமானது. உலகம் எங்குமிருந்தும் சிங்க வேட்டைக்கு என சுற்றுலாப் பயணிகள் தென்ஆப்பிரிக்காவுக்கு விமானம் ஏறுகிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்கள். சுமார் 12,000 முதல் 58,000 டாலர் வரை சிங்கத்தின் உருவத்திற்கு ஏற்ப விலை மாறுபடும். பிடரி உள்ள ஆண் சிங்கம் என்றால், விலை மிகவும் அதிகம். அதுவும் வெள்ளைச் சிங்க வேட்டை, செம காஸ்ட்லி” இப்படி ஆப்பிரிக்காவில் நடக்கும் அத்துமீறல் களை ஆதாரத்துடன் வெளியிடுகிறார், கெவின் ரிச்சர்ட்சன்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்கில், ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கெவின் ரிச்சர்ட்சன் விலங்குகளின் மீது அதீத பாசம் கொண்டவர். அதன் காரணமாக விலங்கியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார். பிறகு ஜோஹன்ஸ்பர்கின் புகழ்பெற்ற ‘லயன் பார்க்கில்’ டாவோ, நெப்போலியன் என்ற இரு சிங்கக்குட்டிகளை பராமரிக்கும் பணி கிடைக்க, அந்த வேலைக்கு ஒப்புக்கொண்டார். அங்கு தான் விலங்கியல் பூங்காக்களிலும், சிங்கப்பண்ணையிலும் நடைபெறும் சித்திரவதைகள் கெவினுக்கு தெரியவந்தது.

“ஆப்பிரிக்காவில் இருக்கும் பெரும்பாலான பண்ணைகளில் சிங்கங்கள் வதைக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சிங்கத்தை வேட்டையாட அனுமதிக்கிறார்கள். அத்தோடு நின்றுவிடாமல் சிங்கத்தின் எலும்பு, பிடரி முடி... என எல்லாவற்றையும் விற்றுவிடுவார்கள். இதை கண்கூடாக பார்த்தபோது, அதிர்ந்துவிட்டேன். நான் வளர்க்கும் டாவோ, நெப்போலியன் சிங்கங்களுக்கும் அதே நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன்.

என்ன செய்வது, சிங்கத்தை விலைக்கு வாங்கி பராமரிக் கும் அளவிற்கு என்னிடம் பணமில்லை. அந்தசமயத்தில் தான் நண்பர் ரோட்னியின் உதவி கிடைத்தது. நான் வளர்த்த இரண்டு சிங்கங்களையும் விலைக்கொடுத்து வாங்க தயாராக இருந்தார். அதோடு ஜோஹன்ஸ்பர்கில் இருந்து 35 மைல் தொலைவில் 2 ஆயிரம் ஏக்கரில் ஒரு சிங்கப்பண்ணையையும் அமைத்து கொடுத்தார். அவரது கருணையில் இன்று 90-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் என்னுடைய பண்ணையில் கர்ஜிக்கின்றன” என்பவர் சிங்கங்களை பாசத்தோடு பார்த்து கொள்கிறார்.

சிங்கத்தோடு கால்பந்து விளையாடுவது, குளத்தில் குளிப்பது, சவாரி வருவது, பிடரி முடியை தடவி கொடுப்பது, சிங்கத்தின் வாயில் தலையை விடுவது என... ஏகப்பட்ட சேட்டைகள் செய்கிறார். கெவினின் செல்லச்சேட்டைகளை சிங்கங்களும் ரசிக்கின்றன. அவரை கட்டி தழுவுகின்றன.

“நண்பர் ரோட்னி பண்ணை அமைக்க உதவி செய்தாலும், எல்லா தேவைகளுக்கும் அவரையே எதிர்பார்க்க முடியாது. அதனால் சிங்கங்களை துன்புறுத்தாமல், அவற்றைக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் ஆவணப்படம் தயாரிக்கும் எண்ணம் வந்தது.‘

தோர்’ என்ற வெள்ளை ஆண் சிங்கத்தை நாயகனாகக்கொண்டு ‘வெயிட் லையன்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்தேன். தனித்துவிடப்படும் ஒரு வெள்ளைச் சிங்கக்குட்டி, தன் பலம் உணர்ந்து கம்பீரத்துடன் காட்டுராஜாவாகத் தலை நிமிரும் கதை அது. சுமார் ஐந்து வருடங்கள், தோர் வளர, வளர அதன் போக்கிலேயே நிதானமாக எடுக்கப்பட்ட அந்தப் படம், 2010-ம் ஆண்டில் வெளியாகி, பரவலான வரவேற்பை பெற்றது” என்பவர் சிங்கங்களின் இயல்பை மாற்றி அமைத்திருக்கிறார். வெவ்வேறு இடங்களில் வளர்க்கப்பட்ட சிங்கங்கள் கெவினின் பராமரிப்பில் நட்பாக பழகுகின்றன. தவிர சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கழுதைப்புலி போன்ற வேறு சில உயிரினங்களையும் வளர்க்கிறார்.

“சிங்கப் பண்ணைகளில் குட்டிகள் வளர்ந்த பின், நல்ல வசதி உள்ள பிற பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கிறோம் என பண்ணையாளர்கள் சொல்கிறார்கள். அப்படி ஒரு நல்ல பண்ணை இங்கு கிடையாது. வளர்ந்த சிங்கங்களை பராமரிக்க அதிக செலவாகும் என்பதால் வேட்டைக்காரர்களுக்கு விருந்து படைத்துவிடுகிறார்கள். காட்டில் வாழும் சிங்கங்களைப் பாதுகாக்கவே பண்ணை சிங்கங்களை வேட்டையாடுகிறோம் என வேட்டைக்காரர்கள் சொல் கிறார்கள். ஆனால், கடந்த 20 வருடங்களில் காட்டுச் சிங்கங்களும் வெகுவாக அழிக்கப்பட்டுவிட்டன.

சீனாவில் பண்ணைச் சிங்கங் களின் எலும்புகளைவிட, காட்டுச் சிங்கங்களின் எலும்புகளுக்குத்தான் அதிக மதிப்பு. அதற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன” என்பவர் சிங்க வேட்டையையும், சிங்கத்தின் எலும்பு ஏற்றுமதியையும் கடுமையாக எதிர்க்கிறார். அத்தகைய கொடூர செயல்களை தடுக்க தனி அமைப்பையும் நடத்தி வருகிறார்.

“2016-ம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்றுமதியான சிங்கங்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 5,892. இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டவை. சிங்க வேட்டைக்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தென் ஆப்பிரிக்க அரசு நிராகரித்துவிட்டது. அதற்கு பதிலாக ஒருசில நிபந்தனைகளை மட்டுமே விதித்துள்ளது. அவர்களை பொறுத்த வரை சிங்கவேட்டை என்பது செல்வம் கொழிக்கும் தொழில்” என்று வேதனைப்படும் கெவின் சிங்கவேட்டையை தடுத்துநிறுத்த பல நாடுகளுக்குச் சென்று குரல்கொடுத்து வருகிறார்.

சிங்க வேட்டை வெறி தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள்ளாக ஆப்பிரிக்க கண்டத்தில் எங்குமே சிங்கம் இருக்காது என்று ஆதங்கப்படுகிறார்.

அப்போதும்கூட கெவினின் பண்ணையில் மட்டும் கடைசி தலைமுறை சிங்கங்கள் கர்ஜித்துக்கொண்டிருக்கும்..!