Aug 25

கனடாவில் போதை ஊசிகளை போட்டுக் கொள்வதற்கான தற்காலிக நிலையம் திறந்துவைப்பு!

போதை ஊசிகளை கண்காணிப்பின் கீழ் போட்டுக் கொள்வதற்கான தற்காலிக நிலையம் ரொறன்ரோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா வீதியில் அமைந்துள்ள ரொறன்ரோ பொதுச் சுகாதார திணைக்களத்தின் கட்டடத்திலேயே குறித்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறான போதை ஊசிகளை கண்காணிப்பின் கீழ் போட்டுக் கொள்வதற்கான நிரந்தர நிலையங்கள் மூன்றினை ரொறன்ரோவில் அமைக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக போதை ஏற்றல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள போதிலும், அவசர தேவை கருதி முன்னதாக மோஸ் பார்க்கில் அமைக்கப்பட்ட தற்காலிக போதை ஊசி மையமும் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களை எவரது கண்காணிப்புகளும் அற்ற நிலையில், தனித்து இருந்து அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அதற்கான மாற்று நடவடிக்கை ஒன்றின் அவசியம் என்று உணரப்பட்டதை அடுத்தே இவ்வாறான நிலையங்கள் திறக்கப்படுவதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.