Aug 24

முறியடிப்பு நடவடிக்கை: இரகசிய புலனாய்வாளர் காயம்!

ஆபத்து மிகுந்த முறியடிப்பு நடவடிக்கை முயற்சி ஒன்றில் ஈடுபட்ட ரொரன்ரோ காவல்துறையின் இரகசிய புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜெராட் வீதி மற்றும் லோகன் அவனியூ பகுதியில், திங்கள் இரவு எட்டு மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து அவர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளார்.

எனினும் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் எவையும் இடம்பெறவில்லை என்பதும், அங்கு துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் ஒருவரை கட்டுப்படுத்தும் ஆபத்து மிகுந்த நடவடிக்கையே இடம்பெற்றதும் பின்னர் தெரியவந்துள்ளது.

இதன்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த அந்த சந்தேக நபர், காவல்துறை உத்தியோகத்தரின் காரை மோதிவிட்டு, அங்கிருந்து கால்நடையாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

எனினும் அவரிடம் இருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்த சந்தேக நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் போதே குறித்த அந்த இரகசிய புலனாய்வு அதிகாரி காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தப்பிச் சென்ற சந்தேக நபர் காலணிகளை அணிந்திருக்கவில்லை எனவும், கறுப்பு இன ஆண் எனவும் அடையாளம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரை காண நேர்ந்தால் அவரை அணுக முயற்சிக்காது உடனடியாக 911 என்ற அவசர உதவி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து்ளளனர்.