Apr 04

ஊர்காவற்றுறை தாக்குதல்: லண்டனிலுள்ள ஈ.பி.டி.பி.யினரை நாடுகடத்த உத்தரவு

ஊர்காவற்றுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இரட்டைக் கொலை புரிந்த ஈ.பி.டி.பியைச் சேர்ந்த 2 குற்றவாளிகளை நாடு கடத்த ஏதுவாக அவர்களின் தேசிய அடையாள அட்டை, கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளரை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பணித்துள்ளார். 

கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறைக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது நாரந்தனைப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

குறித்த சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்றால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட  ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ்,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்து யாழ்.மேல் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் இவர்களை இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி, நீதி அமைச்சு, அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச், அமைச்சின் செயலளர், சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுக்கு மேல் நீதிமன்றால் பணிப்புரை விடுக்கப்பட்டது. 

அது தொடர்பில் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் மன்றுக்கு அறிக்கை அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் குறித்த குற்றவாளிகளின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தால் அவர்கள் எந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பவை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்த முடியும் என குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் மன்றுக்கு தெரியப்படுத்தி இருந்தது.

இதனடிப்படையில் அது தொடர்பான விபரங்களை நீதிமன்ற பதிவாளர் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிபதி பணித்தார். அத்துடன் குறித்த இரு குற்றவாளிகளையும் நாடு கடத்துவது தொடர்பாக முன்னேடுக்கபப்டும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர் மற்றும் இங்கிலாந்துக்கான இலங்கை தூதுவர் ஆகியோருக்கும் இங்கிலாந்து உள்விவகார அமைசுக்கும் தெரியப்படுத்துவதற்காக மட்டும் நடவடிக்கை தொடர்பான தகவல்களை அனுப்பி வைக்குமாறும் நீதிபதி பணிப்புரை விடுத்தார்.