Apr 04

மனைவிக்குச் சிறுநீரகம் கொடுத்த கணவர்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் சஃபியனும் சிண்டியும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். 

அரிய மரபணுக் குறைபாட்டால் சிண்டியின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. மாற்றுச் சிறுநீரகம் பொருத்தாவிட்டால் அவரைக் காப்பாற்ற இயலாது. ஒரு சிறுநீரகத்தால் வாழ்ந்துவிட முடியும் என்பதால் தன்னுடைய இன்னொரு சிறுநீரகத்தை மனைவிக்குத் திருமண நாள் பரிசாகக் கொடுத்துவிட்டார் ஸ்காட் சஃபியன். 

மருத்துவர்களின் பரிசோதனையில் அவரின் சிறுநீரகம் நூறு சதவீதம் சிண்டிக்குப் பொருத்தமாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்வதில் பிரச்சினைகள் வரவில்லை. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, தங்களின் இருபதாவது திருமண நாளை இருவரும் முன்கூட்டியே மருத்துவமனையில் கொண்டாடினார்கள். 

“ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எனக்குப் பிரச்சினை வந்துவிட்டது. அப்போதே தன்னுடைய சிறுநீரகத்தைத் தருவதாகச் சொன்னார் ஸ்காட். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தேன். சமீபத்தில் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. 

மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் கணவரின் தானத்தை ஏற்றுக்கொண்டேன். அவரின் இந்தச் செயலுக்கு என்னால் எதையும் ஈடு செய்ய முடியாது” என்கிறார் சிண்டி. 

“அன்புக்குரியவர்கள் கஷ்டப்பட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதிலும் சிண்டி என் மனைவி. அவருக்கு இதைக் கூடச் செய்யாமல் எப்படி இருக்க முடியும்? மனைவிக்குத் தானம் கொடுத்தது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை” என்கிறார் ஸ்காட் சஃபியன்.