Apr 04

சிரியாவில் 'விஷவாயு தாக்குதல்': 9 குழந்தைகள் உட்பட 35 பேர் பலி

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கலவரக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த கான் ஷேக்குதீன் பகுதியில் விமானங்கள் மூலம் விஷ வாயு செலுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகினர். பலரும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டனர். தாக்குதல் நடந்துள்ளதை, சிரியாவில் மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்பை மேற்கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்த மாதிரியான நச்சு வாயு பயன்படுத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.

தாக்குதலில் பலியான 35 பேரில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்களே. இவர்களில் 9 குழந்தைகளும் அடங்குவர்.

இதற்கிடையில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாக்குதலில் வீரியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இட்லிப் மாகாணம் அல் குவைதா ஆதரவு அமைப்பான ஃபதே அல் ஷாம் முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி ரஷ்ய விமானங்களும், அமெரிக்க கூட்டுப்படைகள் விமானமும் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

அண்மையில் ஹமா மாகாணத்தில் அதிபர் பஷார் அல் அசாத் ஆதரவுப் படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்துள்ள தாக்குதலை அரசே நடத்தியிருக்க வேண்டும் என எதிர்தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.