Aug 21

புளூ வேல் போட்டியாக பின்க் வேல் சேலன்ஜ்

இணைய வாசிகளை தற்கொலைக்கு தூண்டும் புளூ வேல் கேம் பலரது உயிரை பறித்த நிலையில், பின்க் வேல் சேலன்ஜ் எனும் புதிய கேம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என தொடர்ச்சியாக 50 நாட்கள் கடினமான பணிகள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய தூண்டும் வகையில் அமைந்துல்ளது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2015- 2016 வரை புளூ வேல் விளையாடி 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் புளூ வேல் பல உயிர்களை பறித்து வருகிறது. புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த கேம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்தியாவில் புளூ வேல் விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரேசில் நாட்டை சேர்ந்த டெவலப்பர் ஒருவர் பின்க் வேல் என்ற கேமினை உருவாக்கியுள்ளார். போர்ச்சுகீஸ் மொழியில் பலீயா ரோசா என அழைக்கப்படும் பின்க் வேல் சேலன்ஜ் ஏற்கனவே அச்சுறுத்தலாக இருக்கும் புளூ வேல் சவால்களுக்கு மாறாக இருக்கிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த கேம் ஒருவருக்குள் அன்பை பரிமாறச் செய்வதோடு, நேசிக்கச் செய்யும் சவால்களை கொண்டுள்ளது. புளூ வேல் போன்றே 50 சவால்களை கொண்டுள்ள பின்க் வேல் அவை அனைத்தையும் வித்தியாசமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. இதன் ஐம்பதாவது சவால் ஒரு உயிரை காப்பாற்றுவது ஆகும். 

இதுவரை 500,000க்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்றுள்ள பின்க் வேல் சேலன்ஜ் அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ பின்க் வேல் சேலன்ஜ் பக்கங்களை இதுவரை மட்டும் முறையே சுமார் 300,000 மற்றும்  40,000 பேர் பின்பற்றி வருகின்றனர்.