Aug 21

துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்பட்டோர் குயீன்ஸ் பார்க்கில் பேரணி

துப்பாக்கி வன்முறைகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்ராறியோ சட்டமன்றம் அமைந்துள்ள குயீன்ஸ் பார்க் பகுதியில் ஒன்றுகூடி பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் தாய்மார் உட்பட பலரும் இங்கு ஒன்று திரண்டு, வன்முறைகளுடன் கூடிய குற்றச் செயல்கள் தற்போது ரொரன்ரோவில் தொடர்கதையாகிவிட்டதனைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் வலியுறுத்தியு்ளளனர்.

வன்முறைகளை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி ரொரன்ரோ நகர மண்டபப் பகுதியில் நேற்று மதியமளவில் ஆரம்பமான இந்த பேரணி, குயீன்ஸ் பார்க் நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளது.

இவ்வாறான வன்முறைகள் மத்தியில் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வது மிகவும் சிரமம் நிறைந்ததாக காணப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்துச் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் வந்தவண்ணமே உள்ளதாகவும், இவற்றினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், வன்முறைகளில் தமது உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் தெரிவித்து்ளளனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலரும், துப்பாக்கி வன்முறைகளில் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு துப்பாக்கி வன்முறைகளில் பலியானவர்களில் பெரும்பாலானோர் நேரடியான இலக்குகள் அன்றி, துப்பாக்கித் தாக்குதல்களில் இடைநடுவே சிக்குண்டுவர்களாகவும், தவறுதலாக கொல்லப்பட்ட அப்பாவிகளாகவும் காணப்படுவதனையும், இந்த போராட்த்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.