Aug 21

வறுமை நிலையை எண்ணி கலங்காமல், மாணவர்கள் மனது வைத்தால், எதையும் சாதிக்க முடியும் - கவிஞர் மு.முருகேஷ் பேச்சு -

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கில், வறுமை நிலையை எண்ணி கலங்காமல் மாணவர்கள் மனது வைத்தால், எதையும் அவர்களால் சாதிக்க முடியும் என்று கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

     வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்க நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் மொழிப்போர்த் தியாகி அ.மு.உசேன் தலைமையேற்றார். பள்ளியின் தலைமையாசிரியர்பெ. வேதபிரகாஷ் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ஜெ.திவாகர் அனைவரையும் வரவேற்றார்.

     ‘மாணவர்கள் எனும் மகா சக்தி’ எனும் தலைப்பில்  பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குதன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வந்தவாசி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, 

       “நாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கின்றோம். நமது பெற்றோர்கள் படிக்காதவர்கள். 

சாதாரண அரசுப்பள்ளியில் படிக்கின்றோம் என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். 

மாணவர்களாகிய உங்களுக்குள் மகத்தான ஆற்றல் பொதிந்து கிடக்கிறது.  உங்களுக்குள்இருக்கும் சக்தியை நீங்கள் உணர்ந்துகொண்டால், உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

     இந்தியத் திருநாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலவர் பதவியை அலங்கரித்த பெருமகனார்ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். தன்னாலும் சாதிக்க முடியும் என்று பள்ளி மாணவனாக இருந்த போதே, மனதில் உறுதிபூண்டார். அறிவியல் விஞ்ஞானியாக தன்னைவளர்த்துக் கொண்டார். பொது வாழ்வில் ஒரு மனிதன் எவ்வளவு நேர்மையோடும் ஒழுக்கத்தோடும்வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாக உத்தமத் தலைவராக வாழ்ந்தார்.

    இதுவரை இருந்த இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே அப்துல் கலாம் அவர்கள் தான், அதிகமான பள்ளி மாணவ - மாணவிகளைச் சந்தித்துப் பேசியவர். குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் அனைவரையும்அன்புடன் அழைத்து உபசரித்தவர். இந்தியாவெங்குமுள்ள பல லட்சம் மாண-மாணவிகளுக்குநம்பிக்கையூட்டிய கலாம் வழியில் நாமும் சிந்தித்தால், நம்மாலும் சாதிக்க முடியும்.

    தேர்வுக்காக மட்டுமே படிக்காமல், எதையும் புரிந்து படியுங்கள். பாடப் புத்தகங்களோடு மட்டும் உங்களின் புத்தக வாசிப்பு சுருங்கி விடக்கூடாது. சமூகம், கலை - இலக்கியம், அறிவியல், விளையாட்டுசார்ந்த பலவகைப்பட்ட  நூல்களையும் படியுங்கள். படிப்படியாக வாழ்வில் முன்னேறியவர்கள், புத்தகங்களைப்படித்துத் தான் உயரங்களைத் தொட்டார்கள் என்பதை உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ளுங்கள்.

      ‘வறுமை நிலைக்குப் பயந்து விடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே’ எனும் பாடல் வரிகளைமறந்துவிடாதீர்கள்.  வறுமை நிலையை எண்ணி கலங்காமல், உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளாமல் முயன்று படியுங்கள். மாணவர்களாகிய நீங்கள் மனது வைத்தால், எதையும் சாதிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

    அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன் மாணவர்களின் ஞாபக சக்திக்கான  பயிற்சிகளை வழங்கினார்.  பள்ளித் தமிழாசிரியர் சுமதி, தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன், பொருளாளர் எ.தேவா, கவிஞர் பு.குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள் அந்தோணிசாமி, தனசேகரன், சுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக, எஸ்.ஆர்.எம். இன்போடெக் கணினி பயிற்சி மையத்தின் சார்பில், பள்ளி வளாகத்தைச் சுற்றிலும்மரக்கன்றுகள் நடப்பட்டன.