Aug 20

கனடாவின் தமிழர் தெருவிழாவை பொது விழா ஆக்குவோம்! தமிழர்களாக ஒன்றுகூடுவோம்!!

ரொறன்ரோ மாநாகரத்தால் தமிழர்களிற்கான தெருவிழா ஒன்றிற்கான அனுமதி வழங்கப்பட்டது தமிழர்களின் நற்பண்பால், நற்செயற்பாட்டால் கனடிய சமுதாயத்தினுடான அவர்களின் இணைவிற்காவே.

இந்த விழா இப்போது ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறில்லாமல் சகல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்த ஒரு அறக்கட்டளைக் குழுவே (Trustee) இந்த விழாவை நிகழ்த்த வேண்டும்.

அவ்வாறு நிகழ்த்தினால் அந்த விழாவிற்கான கணக்கு வழக்குக்கள் மக்களின் பார்வைக்கு விடப்பட்டு கிடைக்கின்ற லாபத்தில் தமிழ் மக்களிற்கான நற்திட்டங்களை அவர்கள் இடர்படும் இடங்களிலெல்லாம் முன்னெடுக்கலாம்.

175 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படும் விழாவில் நேர்மையாக செயற்பட்டால் ஆகக் குறைந்தது 2 இலட்சம் டொலராவது நிகர லாபம் வருடாந்தம் பார்க்கலாம். இலங்கை ரூபாயில் இது இலங்கை ரூபாயில் 24 கோடி ரூபாய்கள்.

இதனையே மிகவும் திட்டமிட்டு நடத்தினால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 5 இலட்சங்களாவது நிகரலாபம் பார்க்கலாம். அது இலங்கை ரூபாயில் 60 கோடி ரூபாய்கள். தயவு செய்து ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த நிதி ஒரு அமைப்பால் இந்த விழா நடத்தப்படும் போது அதன் ஊழியர்களிற்கான சம்பளமாக வழங்கப்பட்டு அநியாயமாக்கப்படலாம். இந்த 24 கோடி ரூபாய்கள் ஒரு லட்சம் ரூபாயாகப் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் 2,400 குடும்பங்களை வறுமையின் கீழிருந்து வருடாந்தம் மீட்டு அவர்களை சொந்தக் காலில் வாழ வைக்க வழி செய்யலாம்

இது சாத்தியமாவதற்கு ஒரே வழி, பல அமைப்புகள் இணைந்து ஏற்படுத்தும் அறக்கட்டளை குழவினால் இது நடத்தப்பட்டால் இந்த நிதி நேர்மையாக தமிழர்களிற்காக செலவழிக்கப்படலாம். இது சாத்தியமுடைய விடயமே.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களிற்கும் ஊடகங்களிற்கும் எடுத்து செல்லுங்கள். அத்தோடு கனடாவிலுள்ள தமிழர்களின் அமைப்புக்களை இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து வந்து ஒரு அறக்கட்டளையை இந்த விழாவை நடத்த அழுத்தம் கொடுங்கள்.

உங்களிற்குத் தெரிந்த ரொறன்ரோ நகர கவுன்சிலர்களிடம் இந்தத் தெருவிழா “ஒரு அறக்கட்டளை” மூலமாக இந்த விழா நடத்தப்பட வேண்டும் என்பதை ஆகக் குறைந்தது 100 பேரின் கையெழுத்துடன் தெரிவியுங்கள். அதற்கான தீர்மாணத்தை மாநகரசபையில் ஏற்படுத்த வழி செய்யுங்கள். மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இந்த வருவாயை தங்களுடைய தேவைகளிற்காக பாவிக்கும் கூட்டத்தை விலக்கி, தமிழர்களிற்கான நேர்மையான தலைமை ஏற்படுத்த சகல அமைப்புக்களும் அங்கம் வகிக்கும் அறக்கட்டளை இந்த விழாவை நடத்த வழி செய்வோம்.