Apr 03

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த கூட்டமும்

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த கூட்டமும் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பருவத்திற்கு பருவம் வேறுபாடுடையதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருப்பதை நீக்கி நிரந்தரமான சூத்திரமொன்றினூடாக வருடாந்த சம்பள உயர்வை உள்ளடக்கிய மாதாந்த சம்பளம் வழங்கப்படல் வேண்டும். 

மாத சம்பளம் உறுதி செய்யப்படும் வரை தற்போதுள்ள கூட்டு ஒப்பந்த சம்பள சூத்திரம் நீக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் நிரந்தரமான நியாயமான சம்பள உயர்வு உறுதி செய்யும் வகையில் சம்பள ஏற்பாடுகள் அடங்கிய கூட்டு ஒப்பந்தம் செய்யப்படல் வேண்டும். 

சம்பள கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் இம்முறை கால வரையறையற்றதாக ஆக்கப்பட்டுள்ளமை நீக்கப்படல் வேண்டும். 

வாழ்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப வருடாந்த சம்பள உயர்வும் உறுதி செய்யப்படல் வேண்டும். 

கூட்டு ஒப்பந்தம் 

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகின்ற தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களினதும் பங்களிப்பும், அந்தஸ்த்தும் கூட்டு ஒப்பந்த ஆக்கத்திலும் நடைமுறைப்படுத்தலிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.  

2016ஆம் ஆண்டு செய்யப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகள் நீக்கப்பட்டு புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் உடனடியாக செய்யப்படல் வேண்டும். 

2003ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அமுலில் இருக்கும் பிரதான கூட்டு ஒப்பந்த எற்பாடுகளை இன்றைய புதிய நிலைமைகளை கருத்திற்கொண்டு தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்படல் வேண்டும். 

தோட்டத் தொழிலாளர்களின் பலத்தை சிதைப்பதற்கும் நவீன அடிமைகளாக்குவதற்குமான நோக்கத்துடன் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வெளியாள் உற்பத்திமுறை நீக்கப்படல் வேண்டும்.

சம்பளம், சம்பள உயர்வு, தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகள் போன்றன குறைந்தபட்சம் இலங்கையின் தொழிற்சட்டங்கள் தராதரங்கள், சர்வதேச சட்டங்கள் தராதரங்களுக்கேற்ப கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் சேர்க்கப்பட வேண்டும்.    

தோட்ட தொழிலாளர்கள் முகாமையாளர்களினால் தான்தோன்றித்தனமாக தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதனை தடுக்கும் ஏற்பாடுகள் கூட்டு ஒப்பந்தத்தில் செய்யப்படல் வேண்டும். 

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட தொழிலாளர்களின் ஏனைய நலன்கள் அனைத்தும் சட்டங்களில் உறுதி செய்யப்பட்டிருக்கும் உரிமைகைகளை குறைக்கும் வகையில் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் இருத்தல் நிறுத்தப்படல் வேண்டும்.  

தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சுகாதார வசதிகள், கௌரவம் என்பன தொழிற்சட்டங்கள் மற்றும் சர்வதேச தொழிற்சட்டங்கள் தராதரங்களுக்கு அமைய இருப்பதனை கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் மூலம் உறுதி செய்ய வேண்டும். 

தொழிலாளர்களின் நாளாந்த தொழில் உறவு பிரச்சினைகள் பற்றி பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் கலந்துரையாடல், இணக்கத்தீர்வு, நடுத்தீர்வு போன்ற வழிமுறைகளினூடாக தீர்க்கப்பட வேண்டும். 

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பூரணமாக நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வுரிமைகள் நேரடியாக சட்டவாக்கங்களினூடாகவோ அல்லது மறைமுகமான நடவடிக்கைகளினூடாகவோ பறிக்கப்படக்கூடாது. 

தேயிலை மற்றும் இறப்பர் மீள் நடுகை மற்றும் தோட்ட விவசாய நிலங்கள் பராமரிப்பு என்பன பெருந்தோட்ட விவசாய விஞ்ஞான முறைகளுக்கு அமைவாக இடம்பெறுவதனை உறுதிசெய்யும் ஏற்பாடுகள் கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படல் வேண்டும். 

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படுவது தடுத்து நிறுத்த கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். 

கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இணங்கிய ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகத்தினால் மீறும் போது அதற்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் ஆணையாளருக்கும் அவரின் பிரதிநிதிகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் ஏற்பாடுகளை கூட்டு ஒப்பந்தத்தில் சேர்த்தல் வேண்டும். 

பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் மிகையாக சுரண்டப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களின் சமத்துவ உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும். 

தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகள் அனைத்தையும் கம்பனிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரச தோட்டங்கள் 

அரச தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ள சம்பளம் உட்பட ஏனைய உரிமைகள், சலுகைகள் வழங்கப்படல் வேண்டும்.  

அரச தோட்டக் காணிகள் மீள்கட்டமைப்பு என்ற பேரில் தனிநபர்களுக்கு வழங்கும் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படல் வேண்டும். 

அரச தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்படாதுள்ள அனைத்து நிலுவை கொடுப்பனவுகள் உடனடியாக வழங்கப்படல் வேண்டும். 

அரச தோட்டங்களில் உள்ள காணிகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுமாயின் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு பிரித்து வழங்கப்படுதல் வேண்டும்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உட்படாத தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் 

தனியார் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தினூடாக உறுதி செய்யப்பட்ட சம்பளம், உட்பட ஏனைய உரிமைகள் சலுகைகள் வழங்கப்படல் வேண்டும். 

தனியார் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஏனைய மக்களின் குடியிருப்பு உரிமைகள் உறுதி செய்யப்படல் வேண்டும். 

தனியார் தோட்ட நிர்வாகம் தனியார் தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வேலையில் இருந்து நீக்குதல் மற்றும் தோட்டத்தில் இருந்து வெளியேற்றல் தடுக்கப்படல் வேண்டும். 

மலையக மக்களுக்கான பொருளாதாரத்தை ஏற்படுத்தல் 

பெருந்தோட்டத் தொழிற்துறையை பல்தேசிய கம்பனிகள் இலாப நோக்கத்திற்காக மட்டுமன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களினது வாழ்வு உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் அத்திவாரத்தில் இருந்து பேணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். 

தேயிலை, இறப்பர் தென்னை பெருந்தோட்ட தொழிற்துறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்துறையும், ஏனைய மாற்று தொழிற்துறைகளையும் பெருந்தோட்டத் துறைக்கு சமாந்திரமாக கட்டி வளர்க்கப்படல் வேண்டும். 

தோட்டத் தொழிற்துறையும் அதனோடு தொடர்புடைய மற்றும் மாற்று தொழிற்துறைகளினூடாக தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது வழித் தோன்றல்களுக்கும் அத்தொழில்வாய்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 

தோட்டங்களில் உற்பத்திக்கென பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகள் மற்றும் ஏனைய வளங்கள் தொழிலாளர்களுக்கும் அவர்களினது வழித்தோன்றல்களுக்கும் உரித்தாக்கப்பட்டு தொழிலாளர்களின் கூட்டுப் பண்ணை அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

மலையக மக்களுக்கான குடியிருப்பு, உட்கட்டமைப்பு மற்றும் மைய நீரோட்டத்தில் இணைத்தல் 

பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கென குடியிருப்புக்கு மற்றும் சமூக வாழ்கைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான காணியை பெருந்தோட்ட பொருளாதாரத்திற்கான காணியில் இருந்து பிரித்து வேறுபடுத்தி குடியிருப்பு பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக 20 பேர்ச்சஸ் காணியில் தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீதி போக்குவரத்து கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பாடசாலைகள், வைத்தியசாலைகள், நிர்வாக பரவலாக்கல் மையங்கள் போன்றன நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு கிராமஃநகர குடியிருப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படல் வேண்டும்.   

தோட்டங்களில் வரையறுக்கப்பட்ட குடியிருப்பு பிரதேசங்கள் கிராம சேவகர் பிரிவு, பிரதேச செயலகம் உட்பட அரச கட்டமைப்பிலும், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாகாண சபைகள் ஆகிய அரசியல் நிறுவனங்களின் கட்டுபாட்டிற்குள் உள்வாங்கப்பட்டு - தோட்ட நிர்வாகத்துடனான உறவுகள் தொழிற் உறவுகள் தவிர்ந்த மற்றைய அனைத்து உறவுகளும் நீக்கப்பட்டு – ஏனைய பிரஜைகளுக்கு உள்ள அனைத்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகளையும் உறுதி செய்யப்படல் வேண்டும். 

தோட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் அரசாங்கம் உடனடியாக பொறுப்பேற்று இலங்கையின் சுகாதார  தராதரங்கள் உறுதிசெய்யப்படும் வகையில் அவைகள் மேம்படுத்தப்பட்டு அரசினால் பேணப்படுதல் வேண்டும்.  

மலையக தமிழ் தேசிய இனத்தின் தன்னாட்சியதிகாரம்

தமிழ் தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய மலையக  தமிழ் தேசிய இனம் என்ற அடையாளம் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் தேசிய அபிலாசைகளை உறுதி செய்யும் அடிப்படையில் சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்ற அடிப்படையில் அவர்களின் அரசியல் தன்னாட்சியதிகாரங்களும் உறுதி செய்யப்படல் வேண்டும். 

தொழிலாளர்கள் இன ரீதியாக ஐக்கியப்பட்டு தொழிலாளர்கள் மீதான இன ரீதியான மத ரீதியான அடக்குமுறைகளில் இருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்.

ஏனைய தொழிலாளர்களுடனான உறவு மற்றும் ஐக்கிய முன்னணி நடவடிக்கைகள் 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலும் வெளியிலும் இருக்கின்ற ஏனைய உழைக்கும் மக்களுடன் விவசாயிகளுடனும் ஐக்கியப்பட்டு மேற்கொள்ளகூடிய அரசியல், சமூக பொருளாதார, பண்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

மலையக மக்களின் விடுதலையில் உரிமைகளில் அக்கறையுள்ள தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கைகோர்த்து அவர்களின் ஒத்துழைப்புடனனும் பங்குபற்றலுடனும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானங்களை அடிப்படையாக கொண்;டு எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை வகுத்து செயற்படுவது என மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு பிரதிநிதிகளால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.