Aug 18

கடமையின் போது போதையில் இருந்த TTC பணியாளர்கள்

TTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்து கழகத்தின் பணியாளர்கள் 17 பேர், கடமை நேரத்தின் போது போதையில் இருந்தமை சோதனை நடவடிக்கைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த எழுந்தமானமான சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு செலுத்துனர்கள், ஒரு முகாமையாளர் உட்பட 17 பணியாளர்கள், கடமை நேரத்தில் போதைப் பொருள் அல்லது மதுவின் பாவனைக்கு உட்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

எழுந்தமானமாக 680 பேரிடம் நடாத்தப்பட்ட பரிசோதனைகளின் போதே இந்த 17 பேரும் இனங்காணப்பட்டதாகவும், அவர்களுள் 12 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும், மேலும் ஐந்து போர் மது அருந்தியிருந்ததாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோரில் 2.5 சதவீதத்தினர் போதையில் இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தமக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக ரொரன்ரோ போக்குவரத்துக் கழகத்தின் பேச்சாளர் பிரட் றோஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் நான்கு பேரின் உடலிலும் கடமையின் போது மதுசாரம் இருந்ததமை குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், ஏற்கனவே இனங்காணப்பட்டோரில் பத்து பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அல்லது அவர்களாகவே தாமாக பணியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.