Apr 03

ஜோசப் பரராஜசிங்கம் கொலை: பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி இரவு நத்தார் பிரார்த்தனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படும் கனநாயகம், இராணுவ புலனாய்வு உறுப்பினர் எம்.கலீல் ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்