Aug 18

"ஒரு சிறிய மீனை குடும்பமே பகிர்ந்துண்ட அந்த ஏழ்மை நாள்கள்!" -'மைடின்' நிறுவனர்

கோலாலம்பூர்,  கோத்தா பாருவில் வளர்ந்த போது எனது பெற்றோர் மற்றும் ஆறு சகோதரர்களுடன் ஒன்றாக நெருக்கமாக அமர்ந்து, ஒரு சிறிய மீனை வைத்துக் கொண்டு எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்ட நிலையை இன்னமும் நான் மறந்துவிடவே இல்லை என்று  மலேசியாவின் பிரபல பேரங்காடியான மைடின் பேரங்காடியின்  நிர்வாக இயக்குனர் டத்தோ அமீர் அலி மைடின் நினைவு கூர்ந்தார். 

அப்போது கூட பிள்ளைகளுக்கு எல்லாம் போதாமல் போயிடுமோ என்று அம்மா மீனையே தொட மாட்டார். அம்மா என்றாலே தியாகம் தானே..., அந்த நீங்காத நினைவுகளை எனது மனக்கிடங்கில் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்.

ஏனென்றால், இந்த நினைவுகள் தான் எனக்கு மனிதாபிமானத்தைக் கற்றுக் கொடுத்தது. நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன் என்று 62 வயதுடைய டத்தோ அமீர் அலி மைடின் சொன்னார்.

அந்தக் காலக்கட்டத்தில் நாங்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்தோம். நாங்கள் ஏழ்மையில் இருந்த அந்தக் காலக்கட்டத்தில்  நாடும் ஏழ்மையாகத்தான் இருந்தது. ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் பசிக்கு மரவள்ளி கிழங்குகளைச் சாப்பிட கதைகளை என் அப்பா நிறைய எனக்குச் சொல்லியிருக்கிறார் என்று அவர் கூறினார். 

ஆண்டுகள் கடந்து நாடு வளமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் டத்தோ அமீர் மைடினின் குடும்பமும் தொழில்துறையில் வளர்ச்சி காணத்தொடங்கியது. கடந்த 1957 ஆ ஆண்டு, நாடு சுதந்திரம் பெற்ற காலக் கட்டத்தில் மைடினின் குடும்பம் ஒரு சிறிய விளையாட்டுப் பொருள் விற்பனைக் கடையைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கியது. 

அப்படி சிறியதாக தொடங்கிய வியாபாரம் கடைதான், இன்று நாடு தழுவிய நிலையில் விரிவடைந்து, மாபெரும் பேரங்காடி குழுமமாக 'மைடின்' பேரங்காடி நிறுவனம் உருவெடுத்திருக்கிறது.

தற்போது 60ஆம் ஆண்டு நிறைவை எட்டுகிறது. நாடு முழுவதும் சூப்பர் மார்க்கெட், ஹைப்பெர் மார்க்கெட் மற்றும் 'சேம்' கொரோசரியா உட்பட மொத்தம் 322 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.தற்போது யூஎஸ்ஜே சுபாங்கிலுள்ள மைடின் பேரங்காடியில் மைடின் நிறுவனம் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் உண்மையான மலேசிய குடிமகனாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பரவலாக 'ஜாலோர் கெமிலாங்' ஏற்றப்படுவதை நான் ஆதரிக்கிறேன். வேலை விஷயமாக வெளிநாடுகளுக்கு போகும்போதுதான் மலேசியாவின் சிறப்பை நான் உணர்கிறேன் என்று அவர் சுட்டிக்காட்டினார். 

இதுவரை மலேசியாவைப் போன்று வேறு எந்த நாட்டையும் நான் பார்த்ததில்லை. பல்லின மக்களின் சகிப்புத் தன்மை, மிதமான சூழல், நிலைத்தன்மை, நல்லிணக்கம் நிறைந்த இந்த மலேசிய மண்ணில் பிறந்ததை எண்ணி மிகவும் பெருமைப்படுகின்றேன் என்று டத்தோ அமீ மைடின் கூறி மகிழ்ந்தார்.